உஷாரய்யா... உஷாரு... உடனே இதை செய்யுங்கள்... இல்லைன்னா உங்க வங்கி கணக்கு முடங்கிடுமாம்
ஏப்ரல் முதல் தேதியில் இருந்து யுபிஐயுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்கள் 90 நாள்கள் வரையில் செயலற்றதாக இருந்தால், அதன் யுபிஐ சேவைகள் நிறுத்தப்படும்.

தஞ்சாவூர்: உஷாரய்யா உஷாரு... வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிய நடைமுறைபடி யுபிஐ சேவைகள் நிறுத்தப்படுகிறதாம். யாருக்கெல்லாம் தெரியுமா. தெரிஞ்சுக்கோங்க... உஷாராகிடுங்க.
ஏப்ரல் முதல் தேதியில் இருந்து யுபிஐயுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்கள் 90 நாள்கள் வரையில் செயலற்றதாக இருந்தால், அதன் யுபிஐ சேவைகள் நிறுத்தப்படும் என்ற புதிய விதிமுறையை நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா அறிவித்துள்ளது.
ஒருவர் தான் பயன்படுத்தும் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும் செல்ஃபோன் எண் ஏதேனும் ஒரு காரணத்தால் செயல்படாமல் போயிருந்தால், அந்த வங்கிக் கணக்கோ அல்லது அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் கூகுள் பே, போன் பே-வின் யுபிஐ ஐடிகளோ முடக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய விதிமுறை வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வர இருக்காம். இந்த விதிமுறையால், ஒருவர் வங்கிக் கணக்குத் தொடங்கும் போது கொடுத்த செல்போன் எண்ணை தற்போது அவர் பயன்படுத்தாமல் இருந்தால், அந்த வங்கிக் கணக்கே முடக்கப்படும் அபாயம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும் செல்போன் எண் பயன்பாட்டில் இல்லாமலோ அல்லது அந்த எண் 90 நாள்களுக்கும் மேல் செயல்பாட்டில் இல்லாமல் இருந்து அது புதிய செல்போன் பயனர்களுக்கு வழங்கப்பட்டு இருந்தாலோ, அந்த எண் இணைக்கப்பட்டிருந்த வங்கிக் கணக்கை முடக்கி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயலிழக்கப்பட்ட எண்களை புதிய பயனர்களுக்கு வழங்குவதையும் பெரும்பாலும் வழக்கமாக சில செல்போன் நிறுவனங்கள் கொண்டுள்ளன. இவ்வாறான செயல்பாட்டின்போது, ஒரே எண்ணை புதிய பயனர் வாங்கும்போது, அந்த எண்ணின் முந்தைய பயனரின் யுபிஐ செயல்பாடுகளும் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. அவரது வங்கிக்கணக்கு விபரங்கள் புதிய பயனர்கள் அறிந்து விட்டால் சிக்கல் ஆகிவிடும் நிலையும் உள்ளது.
அதுமட்டுமின்றி, முந்தைய பயனரின் யுபிஐ இணைக்கப்பட்ட வங்கி கணக்குகளை தவறான நபர்கள் பயன்படுத்துவதற்கும் வழிவகுக்கும். இதனைத் தவிர்க்க தங்களது வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்டிருக்கும் செல்போன் எண்ணை உறுதி செய்து கொண்டு, அது பழைய எண்ணாக இருந்தால், உடனடியாக வங்கிக்குச் சென்று பழைய எண்ணை மாற்றிவிட்டு தற்போது பயன்படுத்தும் புதிய எண்ணைக் கொடுத்துவிட்டால் போதும் அவ்வளவுதான்.
உங்கள் வங்கி கணக்கும் அதுகுறித்த விபரங்களும் பாதுகாக்கப்பட்டு விடும். எனவே இதை உடனே பாருங்க. வங்கிக்கணக்கு முடக்கத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள். சிலர் வங்கியில் கொடுத்த செல்போன் எண்ணை மாற்றி புதிதாக வாங்கி இருப்பார்கள். அதை மறந்தும் இருப்பார்கள். எனவே காலதாமதம் இல்லாமல் உடனே வங்கிக்கு சென்று சரிபார்த்து உங்கள் வங்கிக்கணக்கை பாதுகாத்துக்கோங்க.





















