Trump India: சும்மா இருக்கமாட்டிங்களா ட்ரம்ப்? - வெனிசுலாவில் குண்டு, இந்தியாவில் எகிறப்போகும் பெட்ரோல் விலை?
Trump India: வெனிசுலா தொடர்பான அமெரிக்க அதிபர் ட்ரம்பின் புதிய அறிவிப்பால், இந்திய சந்தையில் எரிபொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Trump India: அமெரிக்க அதிபர் ட்ரம்பின் புதிய அறிவிப்பால், சர்வதேச எரிபொருள் சந்தையில் நிலையற்றத்தன்மையை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
ட்ரம்பின் புதிய அறிவிப்பு:
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் இரண்டாவது முறையாக பொறுப்பேற்றதில் இருந்து, சர்வதேச அளவில் தொடர்ந்து பேசுபொருளாக நீடித்து வருகிறார். காரணம் வரி விதிப்பு தொடர்பான அவரது அறிவிப்புகள் ஆகும். அந்த வரிசையில், “ வெனிசுலா அமெரிக்காவிற்கும் நாங்கள் ஆதரிக்கும் சுதந்திரங்களுக்கும் மிகவும் விரோதமாக இருந்து வருகிறது. எனவே, வெனிசுலாவிலிருந்து எண்ணெய் மற்றும்/அல்லது எரிவாயுவை வாங்கும் எந்தவொரு நாடும், அமெரிக்காவோடு செய்யும் எந்தவொரு வர்த்தகத்திற்கும் அமெரிக்காவிற்கு 25% வரி செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்" என அறிவித்துள்ளார். வரும் ஏப்ரல் 2ம் தேதி முதல் இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் என்ன பாதிப்பு?
வெனிசுலாவிருந்து இந்தியா, சீனா, அமெரிக்கா மற்றும் ஸ்பெயின் நாடுகளுக்கு கச்சா என்ண்ணெய் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் ட்ரம்பின் அறிவிப்பால் இந்தியா மற்றும் சீனாவில் கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்படலாம்.
கடந்த டிசம்பர் 2023 மற்றும் ஜனவரி 2024 இல், வெனிசுலாவிடமிருந்து அதிக கச்சா எண்ணெயை வாங்கும் நாடாக இந்தியா இருந்தது. அதன்படி, டிசம்பர் 2023ல், இந்தியா ஒரு நாளைக்கு தோராயமாக 191,600 பீப்பாய்களை இறக்குமதி செய்தது. அதுவே ஜனவரி 2024ல் 254,000 க்கும் அதிகமாக உயர்ந்தது. ஜனவரி 2024 இல், வெனிசுலாவின் மொத்த எண்ணெய் ஏற்றுமதியில் கிட்டத்தட்ட பாதியை (மாதத்திற்கு கிட்டத்தட்ட 557,000 bpd) இந்தியா இறக்குமதி செய்து கொண்டிருந்தது. 2024 ஆம் ஆண்டில், இந்தியா வெனிசுலாவிலிருந்து 22 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயை இறக்குமதி செய்தது. இது நாட்டின் மொத்த கச்சா எண்ணெய் கொள்முதலில் 1.5 சதவீதமாகும்.
பெட்ரோல் விலை உயருகிறதா?
இந்த சூழலில், ஒருவேளை அமெரிக்காவின் வரியை தவிர்க்க வெனிசுலாவில் இருந்து, இந்தியா கச்சா எண்ணெயை கொள்முதல் செய்வதை நிறுத்தினால் உள்நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம். இதனால், தேவை அதிகரித்து பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயரக்கூடும். ஏற்கனவே பொதுமக்களிடையே பணப்புழக்கம் குறைந்துள்ளதை கருத்தில் கொண்டு தான், மத்திய அரசு பட்ஜெட்டில் சில வரிச்சலுகைகளை அறிவித்தது. வரும் ஏப்ரல் 1ம் தேதி அவை அமலுக்கு வரவுள்ளன. இந்த நிலையில், எரிபொருட்களின் விலை உயர்ந்தால் ஒட்டுமொத்த அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரக்கூடும். அதன் விளைவாக, பட்ஜெட்டில் இடம்பெற்ற அறிவிப்பால் கிடைக்கக் கூடிய சேமிப்பு என்பது பலனற்றதாக மாறக்கூடும். இதனால் பொதுமக்கள் கலக்கத்தில் உள்ளனர்.
இந்தியாவின் திட்டம் என்ன?
அமெரிக்காவின் வரி விதிப்பு எச்சரிக்கையை மீறி, வெனிசுலாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெயை வாங்கினால், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் மற்ற பொருட்கள் கடுமையான வரியை எதிர்கொள்ளும். இது இந்திய வணிகர்களுக்கு பெரும் சுமையாக மாறும். எனவே இந்த விவகாரத்தில் இந்தியா என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பது உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. இந்தியாவில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.92.39-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

