Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
Siddha Ayush Ministry: சித்த மருத்துவ மூல புத்தகங்கள் பலவற்றை ஆயுர்வேத மருத்துவ அட்டவணையில் மத்திய அரசு இணைத்து இருப்பது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Siddha Ayush Ministry: சித்த மருத்துவ மூல புத்தகங்கள் பலவற்றை ஆயுர்வேத மருத்துவ அட்டவணையில் இணைத்து இருப்பது குறித்து கருத்து தெரிவிக்க மத்திய அரசு 3 மாதம் அவகாசம் வழங்கியுள்ளது.
இந்திய மருத்துவ முறைகள்:
இந்திய மருத்துவ முறைகளின் மருத்துவ நூல் பட்டியல் அடங்கிய தொகுப்பை கடந்த மாதம் 7ம் தேதி மத்திய ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் 88 சித்த, 227 ஆயுர்வேத, 112 யுனானி மருத்துவத்தின் மூல நூல்கள் என 427 பாரம்பரிய நூல் பட்டியல் இடம்பெற்றிருக்கிறது. இவற்றை இந்திய மருந்து - அழகு சாதனச் சட்டத்தின்கீழ் (The Drugs and Cosmetics Act, 1940) அங்கீகரிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் வருங்காலத்தில் சித்த மருந்து ஆய்வுத் துறையில் பெரிய முன்னேற்றமும், சித்த மருந்து உற்பத்தி நிறுவனங்களின் வளர்ச்சியும் சாத்தியமாகும். ஆய்வு செய்யப்பட்டு, நிரூபிக்கப்பட்ட புதிய பாரம்பரிய மருந்துகள் வணிகச் சந்தையில் மக்களுக்குக் கிடைக்கும்.
பிரச்னை என்ன?
1975 இல் வெளியிடப்பட்ட பழைய அட்டவணையில், சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்ட மருத்துவ நூல்கள், ஆயுர்வேத முனிவர்களின் பெயரில் உள்ள மருத்துவ நூல்கள் ஆயுர்வேத நூல்களாக அங்கீகரிக் கப்பட்டன. தமிழில் எழுதப்பட்ட, சித்தர்களின் பெயரில் எழுதப்பட்ட நூல்கள், செய்யுள் வடிவில் உள்ள நூல்கள் ஆகியவை சித்த மருத்துவ நூல்களுக்கான வரையறையாக இருந்தன. ஆனால் தற்போது, அறிவிக்கப்படாத புதிய விதியானது ஆயுர்வேதத்துக்குக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன்படி சம்ஸ் கிருதம் மட்டுமல்லாது, இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் உள்ள தொன்மையான மருத்துவ நூல்களும் 'ஆயுர் வேதம்' பட்டியலில் சேர்க்கப்படுகின்றன.
களவாடப்படும் சித்த மருத்துவம்?
தமிழைத் தவிர தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழியில் உள்ள சித்த மருத்துவ நூல்கள் ஆயர்வேத அட்ட வணையில் சேர்க்கப்பட்டுள்ளன. தற்போது தெலுங்கு (26), மலையாளம் (12), இந்தி (5), மராத்தி (5) அவதி (1) ஆகிய மொழிகளில் உள்ள நூல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தெலுங்கு மொழியில் உள்ள 'புலிப்பாணி வைத்தியம்' என்கிற சித்த மருத்துவ நூல் அதே பெயரில் ஆயுர்வேத அட்டவணையில் சேர்க்கப் பட்டுள்ளது.
தாம்பரம் சானடோரியத்தில் எச்.ஐ.வி. நோயாளிகளுக்குக் கொடுத்து ஆய்வு செய்யப்பட்டு, பன்னாட்டு ஆய்வு அரங்குகளில் நிரூபிக்கப்பட்ட 'ரசகந்தி மெழுகு' என்கிற சிறப்புவாய்ந்த சித்த மருத்துவச் செய்முறைக் குறிப்பு அதில் உள்ளது. தற்போது அது தெலுங்கு மொழியின் வழியாக ஆயுர்வேதத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. தென் தமிழகத்தின் புகழ்பெற்ற 'காயத் திருமேனி எண்ணெய்', 'வெட்டு மாறன் குளிகை ' போன்ற 'சித்த வர்ம' மருந்துகள் மலையாள மொழி சித்த நூல்களின் வாயிலாக ஆயுர்வேதத்தில் சேர்க்கப்பட் டிருக்கின்றன. ஆயுர்வேத அட்டவணையில் இணைக்கப்பட்டுள்ள பல நூல்களின் பெயர்கள் அகத்தியர், சித்தா என்றே தொடங்கு கின்றன.
பறிபோகும் தமிழ் மருத்துவங்கள்:
சித்த மருத்துவ நூல்களுக்கான அறிவிக்கப்படாத விதியின்படி , சித்த மருத்துவ நூல்கள் என்றால், அவை தமிழ் மொழியில் மட்டும் இருக்க வேண்டும். பிற மொழியில் உள்ள சித்த மருத்துவ நூல்கள் ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை. இதனால், தமிழ்நாட்டுக்கு வெளியே உள்ள பிற மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்படும் சித்த மருத்துவ நூல்கள் மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தென்னிந்தியாவின் மைசூர், திருவனந்தபுரம், தஞ்சை சமஸ்தானங்கள் இருந்த காலக்கட்டத்தில் மருத்துவர்களும், மருந்துகளும், மருந்து நூல்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டனர். அதன் ஊடாக, மொழிமாற்றம் செய்யப்பட்டுப் பயன்படுத் தப்பட்ட சித்த மருத்துவ நூல்கள் இன்று மலையாள, தெலுங்கு ஆயுர்வேத நூல்களாக அங்கீகரிக்கப்பட்டிருப்பதாக குட்டி ரேவதி போன்ற சித்த மருத்துவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்
தனித்துவத்தை இழக்கும் சித்தா
மத்திய அரசின் நடவடிக்கையால் நாடு முழுவதும் இருப்பது ஆயுர்வேத மருத்துவ அறிவு மட்டுமே, சித்த மருத்துவத்துக்கு என்று தனித்துவம் எதுவும் இல்லை என்ற நிலை ஏற்படலாம். தமிழர்களின் மருத்துவ அறிவு என்பது வெறும் கதையாடலே, அவை சம்ஸ்கிருத மருத்துவ நூல்களில் இருந்து எடுக்கப்பட்டவை என்று கட்டமைக்கப்படலாம். எதிர் காலத்தில் இந்த சித்த நூல்களில் உள்ள 'மருந்துகளின் செய்முறைகள்' பன்னாட்டு, இந்திய ஆயுர்வேத நிறுவனங்களிடம் கொடுக்கப்பட்டு, அவற்றைப் பல மடங்கு விலை கொடுத்து நாம் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.
தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?
தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் உடனடியாக சித்த மருத்துவ அறிஞர் குழுவை நியமித்து, ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்ட அட்டவணையில் உள்ள அனைத்து நூல்களையும் ஆய்வுசெய்து, அவற்றில் பிற மொழிகளில் உள்ள சித்த மருத்துவ நூல்களை மீட்டெடுத்துச் சித்த மருத்துவ அட்டவணையில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் கோரிக்கையாக உள்ளது. தமிழ்நாட்டுக்கு என்று சித்த மருத்துவ நூல் அட்டவணையை வெளியிட வேண்டும். தமிழ்நாட்டிலும், தமிழ் நாட்டுக்கு வெளியிலும், அயலகத்திலும் உள்ள தமிழ், பிற மொழிகளில் உள்ள சித்த மருத்துவ நூல்களை ஆய்வுசெய்து பட்டியலிட்டு, அவற்றை 'தமிழர்களின் பண்டைய மருத்துவக் கருவூலம்' என்று தமிழக சட்டசபையில் சட்டம் இயற்றிச் சட்ட அங்கீகாரமும் பாதுகாப்பும் வழங்க வேண்டும் என, சித்த மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

