IIT Madras: மின்சார வாகனங்களுக்கு பூஸ்ட்; ஐஐடி சென்னையின் புதிய திட்டம்- என்ன தெரியுங்களா?
ஐஐடி சென்னையின் பொறியியல் வடிவமைப்புத் துறையால் வழிநடத்தப்படும் இந்த முயற்சிகள், இந்தியாவில் மின்சார வாகன மாற்றத்தை விரைவுபடுத்த வலுவான தொழில்துறை ஒத்துழைப்புகளை எதிர்பார்க்கின்றன.

ஐஐடி சென்னை, நாட்டின் மின்சார வாகனங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் ‘கார்பன் உமிழ்வு இல்லா செயல்திட்டத்தை’ (Zero e-mission) தொடங்கியுள்ளது.
பேட்டரி சார்ஜிங் மற்றும் பொறியியல் ஆய்வகம் மற்றும் மின்சார லாரி ஓட்டுநர் சிமுலேட்டர் போன்ற அதிநவீன ஆராய்ச்சி வசதிகள், மின்சார வணிக வாகன பகுப்பாய்வு மையம் ஆகியவையும் தொடங்கப்பட்டன.
கார்பன் உமிழ்வு இல்லா செயல்திட்டம்
ஐஐடி சென்னை கல்வி, திறன் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி முதல் கொள்கை, வெளிநடவடிக்கை மற்றும் பாதுகாப்பு வரை பல்வேறு களங்களில் மின்சார வாகனப் போக்குவரத்து முயற்சிகளின் விரிவான தொகுப்பான கார்பன் உமிழ்வு இல்லா செயல்திட்டத்தை (Zero e-mission) அறிமுகப்படுத்தியுள்ளது.
ஐஐடி சென்னையின் பொறியியல் வடிவமைப்புத் துறையால் வழிநடத்தப்படும் இந்த முயற்சிகள், இந்தியாவில் மின்சார வாகன மாற்றத்தை விரைவுபடுத்த வலுவான தொழில்துறை ஒத்துழைப்புகளை எதிர்பார்க்கின்றன.
இதில் மேற்கொள்ளப்பட்டுவரும் முன்முயற்சிகள்:
* மின்சார வாகன பேட்டரி பொறியியல் ஆய்வகம் - பேட்டரி தொழில்நுட்பத்தின் முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்தும் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி செயல்திறன் பகுப்பாய்வு மற்றும் வலுவான பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட அதிநவீன வசதி
* பேட்டரி சார்ஜிங் உள்கட்டமைப்பு ஆய்வகம் – ஆன்போர்டு, ஆஃப்போர்டு சார்ஜர்கள், எக்ஸ்ட்ரீம் ஃபாஸ்ட் சார்ஜிங் (XFC) தீர்வுகள், வயர்லெஸ் சார்ஜிங் சிஸ்டம்ஸ், பேட்டரி ஸ்வாப்பிங், கிரிட் ஒருங்கிணைப்பு போன்ற மின்சார வாகனங்களுக்கான மேம்பட்ட சார்ஜிங் தீர்வுகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தும் ஒரு முன்னோடி ஆராய்ச்சி வசதி
* மின்சார வாகனப் போக்குவரத்து பற்றி சான்றிதழ் படிப்பு – மின்சார வாகனங்களில் அதிநவீன திறமைகளைக் கொண்ட நிபுணர்களை ஈடுபடுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட 100 மணிநேர ஆன்லைன் பாடநெறி
* மின்சார வாகனப் போக்குவரத்து பற்றி இணையம் சார்ந்த எம்டெக் படிப்பு – மின்சார வாகனத் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற விரும்பும் பணிபுரியும் நிபுணர்களுக்காக வடிவமைக்கப்பட்ட பாடநெறி.
இந்திய அரசின் கனரக தொழில்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் டாக்டர் ஹனிஃப் குரேஷி, இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகத்தின் விஞ்ஞானி டாக்டர் பிரீத்தி பன்சால், இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (SIAM) நிர்வாக இயக்குநர் பி.கே. பானர்ஜி ஆகியோர் முன்னிலையில் இந்த முன் முயற்சிகள் இன்று கல்வி நிறுவன வளாகத்தில் தொடங்கப்பட்டன.

