Vijay: 34 வருடங்களில் முதல்முறை..! ரசிகர்களை ஏமாற்றிய விஜய்? தவெகவின் அரசியலுக்காக இப்படியா..!
Vijay Jananayagan: நடிகர் விஜயின் 34 வருட திரையுலக பயணத்தில் முதன்முறையாக, நடப்பாண்டில் தான் அவர் நடிப்பில் எந்த திரைப்படமும் வெளியாகப்போவதில்லை.

Vijay Jananayagan: விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜனநாயகன் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
2026 பொங்கலுக்கு ”ஜனநாயகன்”
நடிகராக தமிழ் திரையுலகில் உச்சம் தொட்ட விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சி மூலம் அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். இதையடுத்து அவரது நடிப்பில் உருவாகும் கடைசி படமாக “ஜனநாயகன்” அறிவிக்கப்பட்டுள்ளது. எச். வினோத் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த சில வாரங்களில் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைய உள்ளது. இதனால் நடப்பாண்டு இறுதியில் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
34 வருடங்களில் முதன்முறை
ஜனநாயகன் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டதன் மூலம், நடப்பாண்டில் விஜய் நடிப்பில் எந்த புதிய திரைப்படமும் வெளியாகாது என்பது உறுதியாகியுள்ளது. நடிகர் விஜய் 1992ம் ஆண்டு வெளியான “நாளைய தீர்ப்பு” திரைப்படம் மூலம் நாயகனாக அறிமுகமானார். அதுதொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் ஒரு படமாவது விஜய் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகிவிடும். அதனை திருவிழாவாக விஜய் ரசிகர்கள் கொண்டாடுவர். கடந்த 2020ம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டன. அந்த நேரத்தில் மட்டுமே வேறுவழியின்றி, ரிலீஸுக்கு தயாரான விஜயின் மாஸ்டர் திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. அதன்படி, அந்த வருடம் விஜயின் திரைப்படம் எதுவும் வெளியாகவில்லை. ஆனால், இயல்பான சூழல் நிலவும்போதும், ஒரு வருடத்தில் விஜயின் எந்த திரைப்படமும் வெளியாகாமல் இருப்பது இதுவே முதல்முறையாகும்.
ரசிகர்கள் ஏமாற்றம்:
விஜய் நடிகர் என்பதை தாண்டி தமிழக மக்களின் குடும்பங்களில் ஒருவராக பெரும்பாலானோரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். இளைஞர்கள் அவரை அண்ணா என வாஞ்சையோடு அழைக்கின்றனர். அவரது திரைப்படம் வெளியாகும் நாளில் திரையரங்குகள் விழாக்கோலம் கொள்ளும். விழாக்காலங்களில் தான் படம் வெளியாக வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை. விஜயின் திரைப்படம் வெளியாகும் எல்லா நாளுமே திருவிழா தான். அவரை திரையில் கண்டாலே போதும் என லட்சக்கணக்கான ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர். ஆனால், இந்த ஆண்டு விஜய் படத்தை திரையரங்குகளில் காண முடியாது என்பது விஜய் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது. இதை முன்பே உணர்ந்ததன் காரணமாகவோ என்னவோ? தயாரிப்பாளர் தாணு தனது தயாரிப்பில் விஜய் நடிப்பில் உருவான “சச்சின்” படத்தை வரும் ஏப்ரல் 18ம் தேதி ரீ ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளார். இது ரசிகர்களுக்கு ஓரளவு ஆறுதலாக இருக்கும் என கருதப்படுகிறது.
அரசியலுக்காக “ஜனநாயகன்”
தனது அரசியல் வாழ்க்கைக்கான உந்துகோலாக ”ஜனநாயகன்” படத்தை விஜய் பார்ப்பதாக கருதப்படுகிறது. படமும் வலுவான அரசியல் கருத்துகளை பேசும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே, 2026ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அடுத்த ஆண்டிற்கு ஜனநாயகன் பட வெளியீட்டை விஜய் ஒத்திவைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் சில வாரங்களில் முடிய உள்ள நிலையில், தாரளமாக படத்தை தீபாவளிக்கு கொண்டு வரலாம். ஆனால், அரசியல் லாபத்தை கருத்தில் கொண்டு அடுத்த ஆண்டு படத்தை வெளியிடுவது குறித்து ஏற்கனவே விஜய் திட்டமிட்டது தான் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அவரது முகத்தை திரையரங்குகளில் காண காத்திருக்கும், ஏகோபித்த ரசிகர்களை மனதில் கொள்ளாமல் அவர் இந்த முடிவை எடுத்தது நியாயமா? எனவும் பலர் கேள்வி எழுப்புகின்றன.




















