AI Syllabus: வெளியான சூப்பர் தகவல்... இனி அரசு பள்ளிகளில் ஏஐ பாடத்திட்டம்: அடுத்த ஆண்டு முதல் அமல்!
உலகம் முழுவதும் பிரபலமாகி வரும் செயற்கை நுண்ணறிவு, பாடத் திட்டமாக தமிழக அரசுப் பள்ளிகளில் அமலாக உள்ளது.

அரசுப் பள்ளிகளில் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு குறித்த பாடத்திட்டத்தை அடுத்த ஆண்டு அமல்படுத்தத் தயாராக உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வியில் தலைசிறந்து விளங்கி வருகிறது. பிற மாநிலங்களைக் காட்டிலும் இங்குள்ள பள்ளி, கல்லூரிகளின் தரம் அதிகமாக உள்ளதாக, பல்வேறு ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
முன்னோடி மாநிலமான இங்கு, பல்வேறு பாடத்திட்டங்கள் முன்கூட்டியே அமல்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் உலகம் முழுவதும் பிரபலமாகி வரும் செயற்கை நுண்ணறிவு, பாடத் திட்டமாக தமிழக அரசுப் பள்ளிகளில் அமலாக உள்ளது.
பள்ளிக் கல்வியில் செயற்கை தொழில்நுட்ப பயன்பாடு
சென்னை, போரூரில் தனியார் கல்லூரியில் ’’பள்ளிக் கல்வியில் செயற்கை தொழில்நுட்ப பயன்பாடு’’ என்ற பெயரில் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
கண்காட்சியில் அவர் பேசும்போது, ’’அடுத்த ஆண்டுக்கான கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பாடத் திட்டங்கள் இறுதி செய்யப்பட்டு, தயாராக உள்ளன. இவை மாநில அரசுப் பள்ளிகளிலும், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளிலும் அமல்படுத்தப்படும். இந்த பாடத் திட்டம் பிரபல ஐடி நிறுவனங்களின் உதவியோடு உருவாக்கப்பட்டுள்ளது. இன்னும் 15 நாட்களில் இந்தப் பணி முடிவடைந்துவிடும்.
உயர் தொழில்நுட்ப ஆய்வுக் கூடங்கள்
கல்வியை மேம்படுத்தும் வகையில் 8 ஆயிரம் அரசு நடுநிலைப் பள்ளிகளில் நடப்பு மாதத்திலும், 500 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3 மாதங்களிலும் உயர் தொழில்நுட்ப ஆய்வுக் கூடங்கள் அமைக்கப்படும்.
இந்தப் பள்ளிகளில் கணினி மற்றும் செயற்கை தொழில்நுட்ப பயன்பாட்டில் பயிற்சியளிக்கும் ஆசிரியர்களுக்கு கல்லூரிகள் உதவ வேண்டும்’’ என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்தார்.

