Stalin Vs EPS: ஓடாதீர்கள்.!! நான் பேசுவதை கேட்டுவிட்டு செல்லுங்கள்.. ஆவேசமான இபிஎஸ்-ஐ அழைத்த ஸ்டாலின்...
சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின்போது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாகி கிளம்பிய நிலையில், அவரை தனது பேச்சை கேட்டுவிட்டு கிளம்புமாறு முதலமைச்சர் கூறினார்.

சட்டப்பேரவையில் இன்று நேரமில்லா நேரத்தின்போது, தமிழ்நாட்டில் நேற்று நடந்த கொலை சம்பவங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமி பேசியபோது, அவைக்குறிப்பில் சில வார்த்தைகள் நீக்கப்படும் என சபாநாயகர் கூறியதால் ஆவேசமடைந்த எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவினர், அவையை விட்டு வெளியேறினர். அவர்களை ஓடாதீர்கள் எனக் கூறி, முதலமைச்சர் அழைத்த சுவாரஸ்ய நிகழ்வு நடைபெற்றது.
பேரவையில் ஆவேசமான எடப்பாடி பழனிசாமி
பேரவையில் இன்றைய விவாதத்தின்போது, நேரமில்லா நேரத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறிய நேற்றைய தினத்திலேயே, 4 கொலைகள் நடந்துள்ளதாக, அச்சம்பவங்களை குறிப்பிட்டு விளக்கினார். அதோடு, நாள் தோறும் தமிழ்நாட்டில் கொலைகள் அரங்கேற்றப்படுவது தான் திமுக அரசின் சாதனையா என்றும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
அவைக்குறிப்பிலிருந்து நீக்கம் - இபிஎஸ் ஆவேசம்
இதைத் தொடர்ந்து, சட்டம் ஒழுங்கு குறித்து இபிஎஸ் பேசிய சில வார்த்தைகள் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். இதைக்கேட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நான் பேசும் அனைத்தையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கிவிடுங்கள் என ஆவேசமாக கூறினார். தமிழ்நாட்டில் கொலைகள் அன்றாட நிகழ்வாகிவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இதைத் தொடர்ந்து, அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து அமளியில் ஈடுபட்டனர்.
முதலமைச்சர் விளக்கம் - ஓடாதீர்கள் எனக் கூறி அதிமுகவினருக்கு அழைப்பு
எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, சாத்தான்குளம் சம்பவங்களை அதிமுக மறந்துவிடக் கூடாது என கூறியவர், அதிமுக ஆட்சியில் நிகழ்ந்த கொலை சம்பவங்கள் குறித்து பட்டியலிட்டு பேசினார்.
அப்போது, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். அப்போது, நான் பேசுவதை கேட்டுவிட்டு செல்லுங்கள்.. ஓடாதீர்கள் எனக் கூறிய முதலமைச்சர், தைரியமிருந்தால் நான் பேசுவதை கேட்டுவிட்டு வெளியேறுங்கள்.. தைரியமில்லாமல் வெளியேறாதீர்கள் என அதிமுகவினருக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், முதலமைச்சர் பேச்சை கேட்காமல் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

