Senthil Balaji Delhi Visit | TASMAC ஊழல்.. துரத்தும் ED டெல்லி பறந்த செந்தில் பாலாஜி திடீர் விசிட்! பின்னணி என்ன?
அமைச்சர் செந்தில் பாலாஜி இரவோடு இரவாக டெல்லி சென்று வந்திருப்பது, தமிழக அரசியலில் சூட்டைக் கிளப்பியுள்ளது. டாஸ்மாக் ஊழல் புகார்களுக்கு மத்தியில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், அமைச்சர் செந்தில் பாலாஜி டெல்லி சென்று வந்துள்ளார். நேற்று மாலை சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லி சென்ற அவர், இன்று மீண்டும் சென்னை திரும்பியுள்ளார்.இந்த பயணம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இதுவரை வெளியாகவில்லை. இதன் காரணமாக, அரசாங்க நிர்வாக ரீதியாக இல்லாமல், இது அரசியல் பயணமாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது, அரசு வேலை வாங்கித் தருவதாக லட்சம் பெற்றதாக பதிவான வழக்கில் 2023ம் ஆண்டு ஜுன் மாதம் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அதைதொடர்ந்து, பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகு 471 நாட்கள் கழித்து ஜாமினில் வெளியே வந்தார். உடனே அவருக்கு திமுக ஆட்சியில் மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அண்மையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்த அமலாக்கத்துறை, 1000 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்று இருப்பதாக குற்றம்சாட்டியது. தனியார் நிறுவனங்களுக்கும் இந்த ஊழல் குற்றச்சாட்டில் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதனை திட்டவட்டமாக மறுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி, அரசியல் உள்நோக்கத்தோடு இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாகவும், அதனை சட்டரீதியாக அரசு எதிர்கொள்ளும் என்றும் விளக்கமளித்தார். இந்த சூழலில் தான், அமைச்சர் செந்தில் பாலாஜி டெல்லி சென்று வந்துள்ளார்.
அமைச்சர் துரைமுருகனின் மகனும், எம்.பி.யுமான கதிர் ஆனந்திற்கு சொந்தமான இடங்களில், கடந்த ஜனவரி மாதம் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. 2 நாட்கள் நடந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றபட்டதாக கூறப்பட்டது. அதைதொடர்ந்து, அன்றைய நாளின் இரவே, திமுக எம்.பி., ஜெகத்ரட்சகனுடன் சேர்ந்து டெல்லி சென்று சென்னை திரும்பினார். தற்போது அதே பாணியில் தான், அமலாக்கத்துறையின் 1000 கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டு வெளியான சில தினங்களிலேயே இரவோடு இரவாக அமைச்சர் செந்தில் பாலாஜி டெல்லி சென்று விரைந்துள்ளார்.
பாஜகவின் உயர்மட்ட தலைவர்களை சந்தித்து அமலாக்கத்துறை பிரச்னையை சுமூகமாக கையாளவே, கடந்த ஜனவரியில் துரைமுருகன் டெல்லி சென்றதாக கூறப்பட்டது. அதேபாணியில் செந்தில் பாலாஜியும், பாஜக தலைவர்களை சந்தித்து பேசியதாகவும், அமலாக்கத்துறை சிக்கலில் இருந்து வெளியேற்றப்பட உதவ வேண்டும் என்று கோரியதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம், திமுக அமைச்சர்கள் அடுத்தடுத்து பாஜகவிடம் சரணடைந்து வருகின்றனரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் சிறை செல்வாரா? அல்லது தான் குற்றமற்றவர் என நீதிமன்றம் மூலம் நிரூபிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.





















