DMK : “மீண்டும் திமுகவில் அதிரடி - விரைவில் மாற்றப்படப்போகும் மா.செ.க்கள்” யார், யார்..?
”தானே ராஜா, தானே மந்திரி என்று செயல்பட்டு, மக்கள் பணிகளையும் கட்சி பணிகளையும் சரவர கவனிக்காத மாவட்டச் செயலாளர்கள், புகார்களுக்கு உள்ளானவர்களை மாற்றவிருக்கிறது திமுக”

திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நியமிக்கப்பட்டிருக்கும் மாவட்ட செயலாளர்கள்-தான் பவர்ஃபுல்லானவர்கள். அந்த மாவட்டத்தை சேந்த ஒரு எம்.எல்.ஏ அமைச்சரே ஆனாலும் அவர் மாவட்டச் செயலாளருக்கு சொல்படிதான் நடக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. அதனால்தான், ஒவ்வொருமுறையும் மாவட்டச் செயலாளர் பொறுப்பை பெற திமுகவில் போட்டியும் போர்களும் நடந்தேறிவருகின்றன.
திமுகவை பொறுத்தவரை கடந்த பிப்ரவரி மாதம் வரை 72 மாவட்டங்களாக இருந்த அமைப்பை மாற்றி அமைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். புதிதாக 4 மாவட்டங்களை உருவாக்கியும் பழையவர்களை தூக்கி அடித்து புதியவர்களுக்கு வாய்ப்புக் கொடுத்தும் மற்றவர்களுக்கெல்லாம் அதிர்ச்சி வைத்தியமும் கொடுத்தார் அவர். இந்நிலையில் மீண்டும் ஒரு மாற்றத்திற்கு திமுக தயாராகி வருகிறது என்கிறது அறிவாலய வட்டாரம்.
பிப்ரவரியில் நடந்தது என்ன ?
மேற்கு மாவட்டங்களை குறி வைத்தும் அதிமுகவில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த செங்கோட்டையன் அதிருப்தியில் இருப்பதை பயன்படுத்திக்கொள்ளும் வகையிலும் அதிமுகவில் இருந்து திமுகவிற்கு வந்த பெருந்துறை தொகுதி முன்னாள் எம்.எல்.எ தோப்பு வெங்கடாசலத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது. அதே மாதிரி, விழுப்புரதில் வன்னியர் சமுதாய வாக்குகளை பெறும் வகையில் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த லட்சுமணனுக்கு மாவட்ட பொறுப்பு தரப்பட்டது. இதே நேரத்தில் இசுலாமியர்களுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுக்கும் கட்சி என்பதை அவர்கள் மத்தியில் நிறுவும் நோக்கில், விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி மஸ்தானுக்கும் நெல்லையில் அப்துல் வஹாப்புக்கும் மாவட்ட பொறுப்பை அளித்தது திமுக தலைமை.
வழக்கமாக திமுகவில் மாவட்ட செயலாளர் அல்லது பொறுப்பாளர் என்பவர் கட்சியில் சீனியராகவும் அந்த மாவட்டத்தில் மூத்தவருமே நியமிக்கப்பட்டிருந்த வழக்கத்தை மாற்றி, திருப்பூர் மேயராக இருக்கும் தினேஷ்க்கு, மாவட்ட பொறுப்பை கொடுத்தார் முதல்வர் ஸ்டாலின். இதன்மூலம், சீனியர்களுக்கு மட்டுமல்ல, இளைஞர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் கட்சி திமுக என்பதை உறுதிப்படுத்தும் அறிவிப்பாக இது விளங்கியது.
மீண்டும் மாவட்ட செயலாளர்கள் மாற்றம்!
இந்நிலையில், 2ஆம் கட்டமாக இன்னும் சில மாவட்டங்களை அமைப்பு ரீதியாக உருவாக்கியும், சரியாக செயல்படாத மாவட்ட செயலாளர்களை நீக்கிவிட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்து அதற்கான பணிகளும் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டன. அதனடிப்படையில் இன்னும் சில நாட்களில் அடுத்தக்கட்ட மாவட்ட செயலாளர் மாற்றம், அறிவிப்பு வெளியாகவுள்ளது.
ஆட்டம் காட்டும் மாவட்ட செயலாளர்களுக்கு செக்
திமுகவில் ஒரு மாவட்ட செயலாளர் அதிக தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டத்திற்கு மாவட்ட செயலாளராக இருப்பதால் அவரால் சரியாக கட்சி பணிகளை செய்ய முடியாத சூழல் நிலவியது. அதோடு, சிலர் தன்னைத் தானே அந்த மாவட்டத்திற்கு ராஜா என்று கருதி, வேட்பாளர் தேர்வு முதல் திட்டங்கள் வரை அனைத்தையும் முடிவு செய்யும் குறுநில மன்னராக செயல்பட்டு வந்தனர். அப்படி அவர்கள் இருப்பதை உடைக்க நினைத்த திமுக தலைமை அதிக தொகுதிகளை கையில் வைத்துக்கொண்டு ஆட்டம் காட்டும் மாவட்ட செயலாளர்களுக்கு செக் வைக்கத் தொடங்கியது. இதனால், அவர்கள் ஆடிப்போயினர். தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள தொகுதிகள் பறிபோய்விடுமோ என்று ஒரு தரப்பினரும் தங்களின் மாவட்ட செயலாளர் பதவியே போய்விடுமோ என்று இன்னொரு தரப்பினரும் அச்சப்படத் தொடங்கினர். அந்த அடிப்படையில்தான், கடந்த மாவட்ட செயலாளர் அறிவிப்பு வெளியானது. இப்போது மீண்டும் வரவுள்ள அறிவிப்பும் கிட்டத்தட்ட அதே மாதிரியான ஒரு அறிவிப்பாக இருக்கும் என்கிறது அறிவாலய வட்டாரம்
சென்னையில் இருந்து தொடங்கிறது மாற்றம்?
இந்த முறை வரவுள்ள மாவட்டச் செயலாளர் மாற்றம் சென்னையில் இருந்து தொடங்கவுள்ளதாக தெரிகிறது. சென்னையை சேர்ந்த மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் அமைச்சர்களாக உள்ள நிலையில், அவர்களிடம் முறையே 5 மற்றும் 6 தொகுதிகள் உள்ளது. இவர்களிடமிருந்து சில தொகுதிகள் பறிக்கப்பட்டு ஏற்கனவே உள்ள மாவட்ட செயலாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது என்றும் புதிதாக சென்னையில் இரண்டு மாவட்டங்கள் உருவாக்கும் திட்டமும் திமுக தலைமையிடம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
திமுகவில் சென்னையை பொறுத்தவரை அமைப்பு ரீதியாக 6 மாவட்டங்கள் உள்ளன. சென்னை வடக்குக்கு RD சேகரும், வடகிழக்கு மாவட்டத்திற்கு மாதவரம் சுதர்சனமும், சென்னை கிழக்கிற்கு அமைச்சர் சேகர்பாபுவும், சென்னை மேற்கிற்கு உதயநிதி ஆதரவாளர் சிற்றரசுவும், தென்மேற்கிற்கு மயிலை வேலுவும், சென்னை தெற்கு மாவட்டத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியனும் மாவட்ட செயலாளர்களாக உள்ளனர். இந்த அமைப்பில் வரவுள்ள அறிவிப்பில் மாற்றம் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
கட்டப்பஞ்சாயத்து செய்யும் மாவட்ட செயலாளர்கள் மாற்றம்
இதுமட்டுமின்றி, 2026 தேர்தல் நெருங்கும் நேரத்தில் மக்கள் பணிகளிலும் கட்சி பணிகளும் கவனம் செலுத்தாமல் கட்டப்பஞ்சாயத்து, உட்கட்சி பூசல் உள்ளிட்டவைகளில் ஈடுபடும் சில மாவட்டச் செயலார்கள் தற்போது திமுக தலைமையால் கட்டம் கட்டப்பட்டுள்ளனர். வரும் அறிவிப்பில் அவர்களது பதவி பறிக்கப்பட்டு, புதியவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கப்படவுள்ளது.
அமைச்சர்களை மதிக்காதவர்களுக்கும் வருகிறது ஆப்பு
அதே நேரத்தில், தான் மாவட்டச் செயலாளர் என்ற மமதையில் அந்த மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர்களை கூட மதிக்காமல், தான் சொல்வதை மட்டுமே செய்ய வேண்டும் என்று கட்டளையிடும் தொனியிலேயே பேசும் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த ஒரு மாவட்டச் செயலாளரும் இந்த வளையத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவருடைய செயல்பாடுகளை அதிருப்தி அடைந்துள்ள திமுக தலைமை, அவருக்கு பதில் அவர் சமுதாயத்தை சேர்ந்த இன்னொருவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்றும் யோசித்து வருகிறது.
கோவையிலும் மாற்றமா ?
கோவை மேற்கு மாவட்ட செயலாளராக ரவி, கோவை மாநகர் மாவட்ட செயலாளராக கார்த்திக், கோவை தெற்கு மாவட்டத்திற்கு தளபதி முருகேசன் ஆகியோர் மாவட்ட செயலாளராக செயல்பட்டு வருகின்றனர். அமைச்சர் செந்தில்பாலாஜி கோவை பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவருக்கு எதிராகவே இவர்களில் ஒருவர் வேலை பார்த்து வருவதாகவும், தன்னுடைய நண்பர்கள் மத்தியில் இருக்கும்போது செந்தில்பாலாஜி குறித்து தவறான கமெண்டுகளை அடித்து வருவதும் அவர் காதுகளுக்கு சென்ற நிலையில், கோவையிலும் மாற்றம் ஏற்படும் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்
அமைச்சர் சிவி கணேசன் நிலை என்ன ?
கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆளுமையே இன்னும் நிலவுகிறது. இருப்பினும், அந்த மாவட்டத்தின் மேற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் சிவி கணேசன் இருந்து வருகிறார். ஆனால், அவர் கட்சி பணிகளில் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லையென்றும், அவருடைய துறை செயல்பாடுகளும், மாவட்டத்தில் கட்சி செயல்பாடுகளும் மிகுந்த சுனக்கத்தில் இருப்பதாகவும் உளவுத்துறை அளித்த ரிப்போர்ட் அடிப்படையில் அவருடைய மாவட்ட செயலாளர் பதவிக்கும் சிக்கல் ஏற்படலாம் என்று தெரிகிறது.
சக்கரபாணி மீது அதிருப்தி ?
திண்டுக்கல் மாவட்டத்தில் கிழக்கு மற்றும் மேற்கு என்று இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மேற்கு மாவட்டத்திற்கு உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணியும், கிழக்கு மாவட்டத்திற்கு அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகன் செந்தில்குமாரும் செயலாளர்களாக இருக்கின்றனர். ஏற்கனவே, கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட சக்கரபாணியின் செயல்பாடுகளில் திமுக தலைமை அதிருப்தி அடைந்த நிலையில், அவரிடமிருந்து கோவை மாவட்ட பொறுப்பு பறிக்கப்பட்டு, செந்தில்பாலாஜியிடம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், அவரின் திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயல்பாடுகளும் கட்சி பணிகளும் மிகுந்த சுணக்கத்தில் இருப்பதாகவும், எதிர்முகாம்களில் தொழில் ரீதியான அவர் நட்பு வைத்திருப்பது குறித்து உளவுத்துறை நோட் போட்டிருப்பதாலும் அவருக்கும் சிக்கல் ஏற்படலாம் என்கிறது திமுக தலைமைக்கு நெருக்கமான வட்டாரம்.
எதற்கெடுத்தாலும் தலைமைச் செயலகத்தில் உள்ள உச்ச அதிகாரிகள் மீதே துறை சார்ந்த பழியை அவர் திருப்பிவிடுவதால், அதிகாரிகள் மட்டமும் அவர் மீது கடும் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், அவர் மாவட்ட கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு தொகுதி, ஐ.பி. செந்தில்குமார் வசம் சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாத காதர்பாட்சா முத்துராமலிங்கம்
ராமநாதபுரத்தை பொறுத்தவரை பரமக்குடி, திருவாடனை, ராமநாதபுரம், முதுகளத்தூர் என 4 சட்டமன்ற தொகுதிகளை உள்ளிடக்கிய மாவட்டத்திற்கு ஒரே மாவட்டச் செயலாளராக காதர் பாட்சா முத்துராமலிங்கம் இருக்கிறார். அவர் மீது தலைமைக்கு அடுக்கடுக்கான புகார்கள் சென்றிருக்கும் நிலையில், 2 சட்டமன்றத்திற்கு ஒரு மாவட்டம் என்ற கணக்கில் புதிதாக ஒரு மாவட்டத்தை உருவாக்கி, அதற்கு புதிய மாவட்டச் செயலாளர் ஒருவர் நியமிக்கப்படவிருப்பதாக கூறப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் எல்லோரும் தன்னுடைய பேச்சையே கேட்க வேண்டும் என்பதுபோல் நடந்துக்கொள்வது, மாவட்ட அமைச்சர் ராஜகண்ணப்பன் தரப்பை மதிக்காமல் செயல்படுவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் அவர் மீது இருக்கும் நிலையில், அவர் மீது உதயநிதி ஸ்டாலினிடமே சிலர் நேரடியாக புகார் வாசித்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இதனால், காதர்பாட்சா முத்துராமலிங்கத்தின் மாவட்ட தொகுதிகளுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டமும் மாற்றமா ?
சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம் ஆகிய 5 தொகுதிகளை உள்ளிடக்கிய தென்காசி மாவட்டம் திமுக அமைப்பு ரீதியாக தெற்கு, வடக்கு என்று இரண்டாக பிரிக்கப்பட்டிருக்கிறது. தெற்கிற்கு ஜெயபாலனும் வடக்கிற்கு எம் எல்.ஏ ராஜாவும் மாவட்ட செயலாளர்களாக உள்ளனர். இதில், எம்.எல்.ஏ ராஜாவின் செயல்பாடுகள் கட்சி தலைமையை அதிருப்திக்கு உள்ளாக்கியிருப்பதாக கூறப்படுகிறது. எம்.எல்.ஏ, மாவட்டச் செயலாளர் என்று ஆகிவிட்டதால் தென்காசி மாவட்டமே தனக்கு சொந்தம் என்பது மாதிரி அவர் நடந்துக்கொள்வதாகவும், தொகுதியில் இருந்து மக்கள் பணிகளை பார்ப்பதை காட்டிலும் அமைச்சர்கள் வீடுகளுக்கும் அலுவலங்களுக்குமே அவர் அலைந்து, தனக்கு தேவையான விஷயங்களை மட்டுமே முடித்துக்கொள்வதாக புகார் சென்றுள்ளது. இதனால், ராஜாவின் செயல்பாடுகளை கண்காணிக்க ஏற்கனவே உளவுத்துறை மூலம் சிறப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தாக கூறப்படுகிறது. தேர்தல் நேரம் என்பதால் அவருக்கு வார்னிங் கொடுக்கும் வகையில் விரைவில் ஒரு அறிவிப்பு வரும் என்று கூறப்படுகிறது.
உதயநிதி சிபாரிசு – இளைஞரணிக்கு மா.செ. வாய்ப்பு
மேலும், கட்சியில் துடிப்பாக செயல்படும் இளைஞர்களுக்கும் இளைஞரணியில் இருப்பவர்களுக்கும் புதிதாக உருவாக்கப்படும் மாவட்டங்களுக்கு பொறுப்பாளர் பதவி தரப்படவுள்ளதாகவும் இதற்கு பின்னணியில் உதயநிதி இருப்பதாகவும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மூத்தவர்களும் சரியாக செயல்படாத நிலையில் இருப்பவர்களிடமிருந்தும் மாவட்ட பொறுப்புகள் பறிக்கப்பட்டு, அவர்களுக்கு பதில் 2026 தேர்தலை எதிர்க்கொள்ளும் விதமாக இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுப்படவிருக்கிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

