IIT Madras: விதிகள் எல்லோருக்கும்தானே; ஐஐடி சென்னையில் பின்பற்றப்படாத இட ஒதுக்கீடு; ஆர்டிஐயில் அம்பலம்- அதிர்ச்சித் தகவல்!
IIT Madras Reservation: பொருளாதாரத்தில் பின்தங்கிய, உயர் சாதி ஏழைகள் எத்தனை பேர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டனர் என்ற விவரத்தை ஐஐடி சென்னை அளிக்கவில்லை. 2

ஐஐடி சென்னையில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத நியமனத்தில், அரசு இட ஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்படாதது ஆர்டிஐ மூலம் அம்பலம் ஆகியுள்ளது.
நாட்டின் புகழ்பெற்ற ஐஐடி கல்வி நிறுவனங்களில் ஐஐடி சென்னையும் ஒன்று. இங்கு ஆசிரியர்கள் நியமனம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. குறிப்பாக, ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத நியமனத்தில் பின்பற்றப்படும் இட ஒதுக்கீடு விதிமுறைகள் குறித்து, சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மணி என்பவர் கேள்வி எழுப்பினார்.
அரசு விதிமுறைகளின்படியே ஆசிரியர்கள் நியமனம்
இதில், அரசு விதிமுறைகளின்படியே ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவதாக ஐஐடி சென்னை பதில் அளித்துள்ளது. அதாவது மத்திய அரசின் ஓபிசி பிரிவினருக்கு 27%, எஸ்சி பிரிவினருக்கு 15% மற்றும் எஸ்டி பிரிவினருக்கு 7.5 சதவீதம் என்ற அடிப்படையில் இட ஒதுக்கீடு மேற்கொள்ளப்படுவதாக ஐஐடி தெரிவித்துள்ளது.
அதேபோல, எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் எஃப்சி பிரிவினரில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் எண்ணிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஐஐடி சென்னை அளித்துள்ள பதில்:
ஆசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு அல்லாத பிரிவில் 78 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஓபிசி பிரிவில் 26 பேரும் எஸ்சி பிரிவில் 17 பேரும் எஸ்டி பிரிவில் 6 பேரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல ஆசிரியர்கள் அல்லாத நியமனத்தில், இட ஒதுக்கீடு அல்லாத பிரிவில் 114 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் ஓபிசி பிரிவில் 47 பேரும் எஸ்சி பிரிவில் 31 பேரும் எஸ்டி பிரிவில் 6 பேரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் எவ்வளவு?
பொருளாதாரத்தில் பின்தங்கிய, உயர் சாதி ஏழைகள் எத்தனை பேர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டனர் என்ற விவரத்தை ஐஐடி சென்னை அளிக்கவில்லை. 2019ஆம் ஆண்டு முதல் மத்திய அரசுப் பணிகளில் ஈடபிள்யூஎஸ் இட ஒதுக்கீடு அறிமுகம் செய்யப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
அதேபோல ஐஐடி சென்னையில், ஆசிரியர்கள் நியமனம் எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்ற தேர்வு நடைமுறை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ஐஐடி சென்னை, ஆசிரியர் நியமன அறிவிக்கையில் இதற்கான விவரங்கள் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
300 நியமனங்கள் குறித்த விவரங்கள் மட்டுமே
ஐஐடி சென்னையில் சுமார் 8 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர். சுமார் 550 பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். சுமார் 1250 நிர்வாகப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் சுமார் 300 நியமனங்கள் குறித்த விவரங்களை மட்டுமே ஐஐடி சென்னை வெளியிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

