Senthil Balaji's Plan: டாஸ்மாக் வழக்கிலிருந்து எஸ்கேப்பா.? டெல்லியில் யாரை சந்தித்தார் செந்தில் பாலாஜி.? பலே பிளான்...
டாஸ்மாக் முறைகேடு குறித்த அமலாக்கத்துறையின் புகாரிலிருந்து தப்பிக்க டெல்லி சென்ற செந்தில் பாலாஜி, பாஜகவினரை சந்தித்ததாக செய்தி பரவிய நிலையில், அங்கு அவர் யாரை சந்தித்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஆயிரம் கோடி அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை கூறியுள்ள நிலையில், அவசர அவசரமாக அமைச்சர் செந்தில் பாலாஜி டெல்லி சென்ற சம்பவம் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் அங்கு சென்று யாரை சந்தித்தார்.? அதன் பின்னணனி என்பது குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
முறைகேடு வழக்கில் ஏற்கனவே ஜாமினில் உள்ள செந்தில் பாலாஜி
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, அரசு வேலை வாங்கித் தருவதாக லஞ்சம் பெற்றதாக பதிவான வழக்கில், கடந்த 2023ம் ஆண்டு ஜுன் மாதம் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகு, 471 நாட்கள் கழித்து ஜாமினில் அவர் வெளியே வந்தார். உடனே அவருக்கு திமுக அரசில் மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
டாஸ்மாக் முறைகேடு குறித்து அமலாக்கத்துறை அதிரடி ரிப்போர்ட்
இந்நிலையில், அண்மையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்த அமலாக்கத்துறை, 1000 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் மற்றும் முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக குற்றம்சாட்டி, அது குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியது.
மேலும், தனியார் நிறுவனங்களுக்கும் இந்த ஊழலில் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதனை திட்டவட்டமாக மறுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி, அரசியல் உள்நோக்கத்தோடு இந்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும், அதனை சட்டரீதியாக அரசு எதிர்கொள்ளும் என்றும் விளக்கமளித்தார்.
டெல்லயில் யாரை சந்தித்தார் செந்தில் பாலாஜி.?
இந்த சூழலில் தான், அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த மார்ச் 18 ஆம் தேதி அவசர அவசரமாக டெல்லி சென்று திரும்பினார். அவரது டெல்லி பயணம் தமிழக அரசியல் களத்தில் பல்வேறு விவாதத்தை கிளப்பியது. அவர் பாஜக அமைச்சர்களை சந்தித்து, அவர்களிடம் சரண்டராகிவிட்டதாக கூறப்பட்ட நிலையில் தான், அவர் உண்மையாகவே யாரை சந்தித்தார் என்பது தொடர்பான பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, டெல்லிக்கு சென்ற செந்தில் பாலாஜி, பிரபல மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கியை சந்தித்து பேசியுள்ளார். இதுதொடர்பாக ஒரு போட்டோவும் வெளியாகி உள்ளது. அந்த போட்டோவில், முகுல் ரோகத்கிக்கு செந்தில் பாலாஜி சால்வை போட்டு அருகில் நிற்கிறார்.
ஏற்கனவே செந்தில் பாலாஜியின் பண மோசடி வழக்கில் முகுல் ரோத்தகி வாதாடி வரும் நிலையில், அவருடன், டாஸ்மாக் விவகாரம் குறித்து செந்தில் பாலஜி பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதோடு இன்னொரு முக்கியமான தகவலும் சொல்லப்படுகிறது. அதாவது, முகுல் ரோத்தகியை செந்தில் பாலாஜி சந்தித்தபோது, அவர்களுடன் பாஜகவைச் சேர்ந்த ஒரு முக்கிய நபரும் உடனிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அது யார் என்பது குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. ஒரு வேளை, டாஸ்மாக் முறைகேடு விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் பட்சத்தில், அதிலிருந்து எஸ்கேப் ஆவதற்கான முன்னேற்பாடுகளை செந்தில் பாலாஜி செய்து வருவதாக கருதப்படுகிறது.

