(Source: ECI/ABP News/ABP Majha)
Trichy Airport: திருச்சி விமானநிலையம் உருவான கதையும், அதன் வரலாறும்
Trichy Airport History: திருச்சி விமானநிலையம் உருவான கதையும், அதன் வரலாறும் பற்றி விரிவாக பார்ப்போம்...
இரண்டாம் உலக போரின் போது பிரிட்டிஷ் அரசு தங்களின் போர் விமானங்களை பழுது பார்ப்பதற்கும், பராமரிப்பதற்கும் 1942ம் ஆண்டு திருச்சி காஜாமலையில் ஒரு விமான தளத்தை உருவாக்கியது. இங்கு தரையிறங்கும் போர் விமானங்கள், அங்கிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள பொன்மலையில் அமைக்கப்பட்டிருந்த பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. 1944ம் ஆண்டுக்கு பின் விமானநிலையம் ஸ்டேஜிங் போஸ்ட் மற்றும் பணியாளர் போக்குவரத்து மையமாக செயல்பட தொடங்கியது. அதன்பின் 1947ல் இலங்கை அரசு, கொழும்பு - திருச்சி இடையே விமானங்களை இயக்க அனுமதி கேட்டது. இதனால் இந்திய அரசு விமான நிலையத்தை முழுமையாக செயல்படும் வகையில் மேம்படுத்தியது. இதையடுத்து 1948ம் ஆண்டு இங்கிருந்து கொழும்புக்கு விமான செயல்பாடுகளை அனுமதித்தது. இதன்பின் திருச்சி- கொழும்பு மற்றும் மும்பை வழியாக கராச்சிக்கும் விமான சேவைகள் தொடங்கியது.
மேலும், 1950க்கு பிறகு பல்வேறு கால கட்டங்களில் திருச்சி, சென்னை, மதுரை, கொச்சி மற்றும் திருவனந்தபுரம் வழித்தடங்களில் இந்தியன் ஏர்லைன்ஸ் உள்நாட்டு சேவைகளை தொடங்கியது. 1990ம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் திருச்சியை, குவைத் மற்றும் ஷார்ஜா போன்ற மத்திய கிழக்கு நகரங்களுடன் இணைக்க தொடங்கியது. 2000ம் ஆண்டு முதல் திருச்சி விமான நிலையத்தில் தென்கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனேசியா, கோலாலம்பூர் மற்றும் சிங்கப்பூர் போன்ற வெளிநாட்டு விமான நிறுவனங்களும் விமான சேவைகளை வழங்க தொடங்கின. அதேநேரம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் திருச்சியை, மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் இணைக்க தொடங்கியது.
இந்நிலையில் 2009ம் ஆண்டு நவீன ஒருங்கிணைந்த பயணிகள் முனையம் கட்டப்பட்டபோது, கட்டுப்பாட்டு கோபுரம் மற்றும் தொழில்நுட்ப தொகுதியை உள்ளடக்கிய சர்வதேச சரக்கு வளாகமாக மாற்றப்பட்டது. இது தற்போது சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த ஒருங்கிணைந்த பயணிகள் முனையம் ரூ.80 கோடி செலவில் அமைக்கப்பட்டது. மொத்தம் 702 ஏக்கர் பரப்பளவில் இது அமைந்துள்ளது. இதில் இரண்டடுக்கு முனையம் 1,26,770 அடி பரப்பளவில் அமைந்துள்ளது. அதில் 8,136 அடி நீளமுள்ள ஓடுபாதை அமைக்கப்பட்டு 2009 பிப்.21 ம் தேதி திறக்கப்பட்டு, ஜூன் 1ம் தேதி முதல் செயல்பட தொடங்கியது.
மேலும், தற்போது செயல்பாட்டில் உள்ள இந்த பயணிகள் முனையம் 12 செக்-இன் கவுன்ட்டர்கள், திருச்சியில் இருந்து புறப்படும் பயணிகளை கையாள 4 கவுன்ட்டர்கள், வௌிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை கையாள 16 கவுன்ட்டர்கள், பயணிகளின் உடைமைகளை வௌியே கொண்டுவர 154 அடி நீள 3 கன்வேயர் பெல்ட்கள், 1 பேக்கேஜ் உதவி கவுன்ட்டர், 1 சுகாதார அதிகாரி கவுன்ட்டர், பயணிகளின் உடைமைகளை சோதனையிட 5 எக்ஸ்ரே ஸ்கேனர்கள், அதிகாரிகள் பயணிகளை பாதுகாப்பு சோதனை செய்ய 4 அலகுகள் இயங்குகின்றன. திருச்சியில் இருந்து தற்போதுவரை மொத்தம் 6 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விமானத்தில் இருந்து பயணிகள் வௌியே வர 3 ஏரோ பிரிட்ஜ்கள், 300 வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு இடம், இரண்டு ஓய்வறைகள் உள்ளிட்ட வசதிகள் உள்ளது.