கறார் காட்டும் EPS! விஜய் போடும் கணக்கு! RB உதயகுமார் சொன்ன மெசேஜ்
அதிமுக, தவெக கூட்டணி அமைப்பதில் யார் முதலமைச்சர் வேட்பாளர் என்பதே முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது. ஆர்.பி.உதயகுமார் வெளிப்படையாகவே சில விஷயங்களை சொன்னதும் விஜய் தரப்பு இதெல்லாம் சரிவருமா என நழுவுவதாக கூறப்படுகிறது.
விஜய் தனது முதல் மாநாட்டிலேயே கூட்டணிக்காக கதவுகளை திறந்துவைத்து விட்டார். வலுவான கூட்டணியை அமைப்பதற்காக காய்களை நகர்த்தி வரும் இபிஎஸ், விஜய்க்கும் தூது அனுப்பி வருவதாக பேச்சு அடிபட்டது. விஜய்யுடன் கூட்டணி வைக்கலாமா என அதிமுக நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார் இபிஎஸ். கூட்டணிக்கு ஒத்துக் கொண்டாலும், முதலமைச்சர் பதவியை மட்டும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதில் அதிமுகவினர் விடாப்பிடியாக இருக்கின்றனர்.
அதிமுக தரப்பில் இருந்து விஜய்க்கு 60 சீட் தருவதாகவும், அமைச்சரவையில் இடம் ஒதுக்கி தருவதாகவும் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் தெரிவித்திருந்தார். இருப்பினும் இந்த கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் அடுத்த கட்டத்திற்கு செல்லாமல் இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமாக முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற குழப்பமே இருப்பதாக சொல்கின்றனர்.
சமீபத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் விஜய் கூட்டணி தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு "எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தியே 2026 தேர்தலை அதிமுக எதிர்கொள்ளும். இதற்கு ஆதரவளிக்கும் நல்ல உள்ளங்கள் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களுக்குச் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க அதிமுகவின் இரண்டு கோடி தொண்டர்கள் தயாராக உள்ளனர். கூட்டணி குறித்த முடிவைப் பொதுச்செயலாளர் அறிவிப்பார்” என கறாராக சொன்னார்.
இதன்மூலம் முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை என்ற மெசேஜை விஜய் தரப்புக்கு கொண்டு சேர்த்துள்ளது அதிமுக. ஆனால் இதற்கு விஜய் ஒத்துவருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2026 தேர்தலை குறிவைத்து இறங்கியுள்ள விஜய், ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என சொன்னாலும் தனது தலைமையில் தான் கூட்டணி அமைய வேண்டும் என்ற முடிவில் இருப்பதாக சொல்கின்றனர். துணை முதலமைச்சர் பதவிக்கு விஜய் ஒத்துவந்தால் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. ஆனால் விஜய் இதெல்லாம் சரிவராது என நினைப்பதாகவே சொல்கின்றனர். இருப்பினும் அரசியல் களத்தில் 2 கட்சிகளும் ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுகளை வைக்காமல் இருப்பதன் பின்னணியிலும் கூட்டணி கணக்குகளே இருப்பதாக தெரிகிறது. கட்சியை பலப்படுத்தும் வேலைகளில் இறங்கியுள்ள விஜய், அடுத்தகட்டமாக கூட்டணி விஷயத்தில் முக்கிய முடிவெடுக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





















