Erode East Bypoll 2025: யார் அந்த உதிரிகள்? விஜய்? சீமான்? ஈரோட்டிற்கு எவ்வளவு செஞ்சிருக்கோம் தெரியுமா? - ஸ்டாலின்
Erode East Bypoll 2025: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் உதிரிகளை தூண்டி விட்டுள்ளதாக, எதிர்க்கட்சிகள் மீது முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

Erode East Bypoll 2025: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை முன்னிட்டு, திமுக தொண்டர்களுக்கு அக்கட்சி தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின்:
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலுக்கான பரப்புரை நாளை மாலையுடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பரப்புரையை முடுக்கிவிட்டுள்ளனர். இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், திமுக ஆட்சியில் ஈரோடு மாவட்டத்தில் செயல்படுத்தியுள்ள பல்வேறு திட்டங்களை பட்டியலிட்டுள்ளார். அதோடு, தேர்தலை புறக்கணித்த அதிமுக மற்றும் பாஜக போன்ற கட்சிகளையும் சாடியுள்ளார்.
”தூண்டிவிடப்பட்டுள்ள உதிரிகள்”
முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தி.மு.கழக அரசின் மீது தமிழ்நாட்டு மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடுதான், ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் கழக வேட்பாளருக்கு வழங்கும் மகத்தான ஆதரவு. இந்த அரசு மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையையும் ஆதரவையும் எப்படியாவது சிதைக்க வேண்டும் என்று நாளொரு அவதூறையும் பொழுதொரு பொய்யையும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பரப்பினாலும் அவை மக்கள் மன்றத்தில் எடுபடுவதில்லை. பொழுது சாய்வதற்குள் எதிர்க்கட்சிகளின் பொய்களும் அவதூறுகளும் பொடிப் பொடியாகிவிடுகின்றன.
கழக வேட்பாளரை எதிர்க்க முடியாமலும், பொதுமக்களைச் சந்திக்கும் வலிமையில்லாமலும் அ.தி.மு.க, பா.ஜ.க. ஆகிய கட்சிகள் வழக்கம்போல அவதூறான குற்றச்சாட்டுகளைச் சொல்லி ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலைப் புறக்கணித்துள்ளன. தி.மு.க.வை நேரடியாக எதிர்க்கும் துணிவின்றி சில உதிரிகளைத் தூண்டிவிட்டு, மறைமுக யுத்தம் நடத்திப் பார்க்கின்றன.
”வெற்றியை பரிசாக்குங்கள்”
தமிழ்நாட்டின் நலனுக்காகப் பாடுபடுகிற கழக அரசையும், தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசையும் தமிழ்நாட்டு மக்கள் சரியாக அடையாளம் கண்டு வைத்திருக்கிறார்கள். அதனை ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் இடைத்தேர்தலில் உதயசூரியனுக்கு அளிக்கும் மகத்தான வெற்றியின் வாயிலாக நிரூபிப்பார்கள்.
ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் மீதும், அங்கே தேர்தல் பணியாற்றும் கழக உடன்பிறப்புகள் மற்றும் தோழமைக் கட்சியின் செயல்வீரர்கள் மீதும் உங்களில் ஒருவனான நான் வைத்திருக்கும் நம்பிக்கையினாலும், என் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையினாலும், நான் நேரில் வந்து வாக்கு சேகரித்ததாகக் கருதி, தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமாருக்கு பிப்ரவரி 5-ஆம் தேதியன்று உதயசூரியன் சின்னத்தில் பெருவாரியான வாக்குகளை அளித்து மகத்தான வெற்றியை அளிக்குமாறு வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன். 2026 சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்குக் கட்டியம் கூறும் வகையில், ‘வெல்வோம் 200 – படைப்போம்’ வரலாறு என்பதற்கு முன்னோட்டமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.கழகத்தின் மாபெரும் வெற்றியை எதிர்நோக்குகிறேன்.
ஈரோட்டுக்கான திட்டங்கள்:
1. ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட ஆர்.கே.வி. சாலையில் ரூ.29 கோடி மதிப்பீட்டில் புதிய நவீன காய்கறி சந்தை வளாகம் திறக்கப்பட்டு உள்ளது.
2. ஈரோடு ஈ.கே.எம் அப்துல் கனி மதரஸா ஆரம்பப் பள்ளியில் புதிதாக 5 வகுப்பறைகள் மற்றும் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள் துவங்கப்பட்டுள்ளது.
3. ஈரோடு மாநகராட்சி, ராஜாஜிபுரம் பகுதியில் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் 7 லட்சம் மதிப்பில் நவீன உடற்பயிற்சிக் கூடப் பணிகள் தொடங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
4. ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதியில் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் கோட்டை முனிசிபல் காலனி மற்றும் பெரியசேமூர் திரு.வி.க. வீதியில் பள்ளிச் சுற்றுச்சுவர் மற்றும் கழிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது.
5. ஈரோடு சூரியம்பாளையம் 7-ஆவது வார்டில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப நகர்நல மையத்தின் கூடுதல் கட்டடம் விரிவாக்கப் பணிகள் தொடங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
6. சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ.10 லட்சம் மதிப்பில் கோட்டை பகுதி வார்டு 28 முனிசிபல் காலனி பகுதியில் அங்கன்வாடி மையத்திற்குச் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது” என முதலமைச்சர் ஸ்டாலின் பல திட்டங்களை பட்டியலிட்டுள்ளார்.
தூண்டிவிடப்பட்டுள்ள உதிரிகள் என ஸ்டாலின் குறிப்பிடுவது, சீமானையா? அல்லது திமுகவை எதிர்த்து தீவிரமாக களமாடி வரும் விஜயையா என்பது தான் தற்போது கேள்வியாக எழுந்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

