IND Vs BAN CT 2025: நாகினி பாய்ஸை வீழ்த்துமா ரோகித் படை? இந்தியாவின் பலம், வங்கதேசத்தின் பலவீனம் - துபாய் மைதானம் எப்படி?
IND Vs BAN CT 2025 Match Prediction: ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான, போட்டி நாளை துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது.

IND Vs BAN CT 2025 Match Prediction: ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான, போட்டி நாளை துபாய் சர்வதேச மைதானத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்க உள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி:
ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி போட்டி இன்று தொடங்கி வரும் மார்ச் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியை பாகிஸ்தான் நடத்துகிறது. இருப்பினும், பாதுகாப்பு காரணங்களால், இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற உள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான பாகிஸ்தானை, நியூசிலாந்து அணி எதிர்கொள்கிறது. தொடர்ந்து நாளை நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோத உள்ளன. முதல் ஆட்டத்திலேயே வென்று சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியை வெற்றிகரமாக தொடங்க, இரு அணிகளும் தீவிரம் காட்டுகின்றன. இதனால் இந்த போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
எங்கு? எப்போது? நேரலை எப்படி?
துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோத உள்ளன. இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது. ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி போட்டிகள் அனைத்தும் இந்தியாவில் ஜியோ ஹாட்ஸ்டார் செயலியில் இலவசமாக நேரலையில் ஸ்ட்ரீம் செய்யப்படும். தொலைக்காட்சிகளில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் ஸ்போர்ட்ஸ்18 தொலைக்காட்சி அலைவரிசைகளில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும்.
இந்திய அணியின் பலம், பலவீனம்:
தொடர் தோல்விகளால் துவண்டு கிடந்த இந்திய அணி, அண்மையில் உள்ளூரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தியது. 15 மாதங்களுக்குப் பிறகு இந்திய அணி கைப்பற்றிய ஒருநாள் தொடர் இதுவாகும். இதே உற்சாகத்தில் சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியிலும் இந்திய அணி களமிறங்குகிறது. போட்டி நடபெறும் துபாய் சர்வதேச போட்டியில் இந்திய அணி தோல்வியையே சந்தித்தது இல்லை என்பது மேலும் உத்வேகம் அளிக்கிறது. வீரர்களை பொறுத்தவரையில் இங்கிலாந்து தொடரில் கேப்டன் ரோகித் ஒரு சதமும், விராட் கோலி அரைசதமும் விளாசி நம்பிக்கை அளித்துள்ளனர். கூடுதலாக சுப்மன் கில், ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் அக்ஷர் படேல் ஆகியோரும் பேட்டிங்கில் நல்ல ஃபார்மில் இருப்பது அணிக்கு பலமாக உள்ளது. பந்துவீச்சில் பும்ரா இல்லாதது பின்னடைவாக கருதப்பட்டாலும், ஷமியின் வருகை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இடது கை பேடாஸ்மேன்கள் பெரிதும் இல்லாததும் அணிக்கு பலவீனமாக கருதப்படுகிறது.
இந்தியா - வங்கதேசம்: நேருக்கு நேர்
இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இதுவரை 41 முறை மோதியுள்ளன. அதில், இந்தியா 32 போட்டிகளிலும், வங்கதேசம் 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்திய அணி ஆதிக்கம் செலுத்தினாலும், அண்மைக்காலமாக வங்கதேசம் கடும் வளர்ச்சி கண்டுள்ளது. கடைசியாக இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற 5 ஒருநாள் போட்டிகளில், வங்கதேசம் மூன்றிலும், இந்தியா இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளது.
துபாய் மைதானம் எப்படி?
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் உள்ள ஆடுகளம் மெதுவானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேட்ஸ்மேன்கள் ஆடுகளத்தில் சிரமப்படுவார்கள், அதே நேரத்தில் சுழற்பந்து வீச்சாளர்கள் பந்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். மைதானத்தில் முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 219 ரன்கள் மட்டுமே. எனவே, முதலில் பேட்டிங் செய்யும் அணி 250 ரன்களுக்கு மேல் எடுத்தால், எதிரணிக்கு அது மிகவும் சவாலான ஸ்கோராக இருக்கும்.
அதேநேரத்தில், துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்யும் அணிகளை விட சேஸிங் செய்யும் அணிகள் சிறந்த சாதனையைப் பெற்றுள்ளன. இந்த மைதானத்தில் நடைபெற்ற 58 ஒருநாள் போட்டிகளில், முதலில் பேட்டிங் செய்யும் அணிகள் 22 ஆட்டங்களிலும், சேஸ் செய்யும் அணிகள் 34 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
உத்தேச பிளேயிங் லெவன்:
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கே.எல். ராகுல் (வி.கீ.), ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஹர்ஷித் ராணா
வங்கதேசம்: தன்சித் ஹசன் தமீம், சௌம்யா சர்க்கார், நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), மெஹிதி ஹசன் மிராஸ், தவ்ஹித் ஹ்ரிடோய், மஹ்முதுல்லா, ஜாக்கர் அலி (வி.கீ.,), ரிஷாத் ஹொசைன், தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், நசும் அகமது
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

