மயிலாடுதுறையில் பரபரப்பு.. மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்கள்... கிழித்தெறிந்த மர்ம நபர்கள்
இன்னும் எத்தனை காலத்திற்கு மொழி உணர்வை தூண்டி அரசியல் செய்வீர்கள்? தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பி பாஜகவினரால் ஒட்டப்பட்ட போஸ்டர் கிழிக்கப்பட்டதால் மயிலாடுதுறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்னும் எத்தனை காலத்திற்கு மொழி உணர்வை தூண்டி அரசியல் செய்வீர்கள்? என தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பி பாஜகவினரால் ஒட்டப்பட்ட போஸ்டர் கிழிக்கப்பட்டதால் மயிலாடுதுறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சர்வ சிக்ஷ அபியான்
நாடுமுழுவதும் சர்வ சிக்ஷ அபியான் (அனைவரும் கல்வி இயக்கம்) என்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் சர்வ சிக்ஷ அபியான் (அனைவரும் கல்வி இயக்கம்) என்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஆண்டுதோறும் மத்திய அரசு சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.

நிதி இழுத்தடிப்பு
இந்த சூழலில், பாஜக அரசு தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு வர வேண்டிய 2 ஆயிரத்து 152 கோடியை தராமல் இழுத்தடித்து வருகிறது. இதுதொடர்பாக மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பப்பட்டது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் டெல்லியில் மத்திய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறைக்கு வர வேண்டிய நிதி குறித்து பேசியுள்ளனர்.
மத்திய அரசு மீது குற்றச்சாட்டு
ஆனால், புதிய தேசிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் நிதி தரப்படும் என்று வெளிப்படையாக மத்திய அமைச்சர் தெரிவித்தனர். மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் புதிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே நிதி வழங்கப்படும் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தியை ஏற்காததால் தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு வர வேண்டிய 2,152 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கவில்லை. அந்த நிதியை உபி, குஜராத் போன்ற மாநிலங்களுக்குப் பிரித்துக் கொடுத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு எழுந்துள்ளது.

ஆதரவு மற்றும் எதிர்ப்பு
தமிழகத்தில் ஒருபோதும் மும்மொழிக் கொள்கை ஏற்றுக் கொள்ளப்படாது என்று பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மும்மொழிக் கொள்கையை கண்டித்து சென்னையில் திமுக கூட்டணிக் கட்சிகள் இணைந்து இந்தி திணிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இந்நிலையில், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்து இயக்கத்தையும் மேற்கொண்டுள்ளார். இதன் காரணமாக தற்போது மும்மொழிக் கொள்கை விவகாரம் தமிழகத்தில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.

மயிலாடுதுறையில் ஆதரவு போஸ்டர்கள்
இந்நிலையில், மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்த்து வரும் சூழலில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மயிலாடுதுறை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் முன்மொழி கொள்கைக்கு ஆதரவாக நேற்று இரவு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அதில் "முதல்வர் ஸ்டாலின் அவர்களே, இன்னும் எத்தனை காலத்திற்கு மொழி உணர்வை தூண்டி அரசியல் செய்வீர்கள்? நீங்கள் உங்கள் குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகளில் மும்மொழி திட்டம், உங்கள் குடும்பத்து மாணவர்கள் பயிலும் பள்ளிகளில் மும்மொழி திட்டம், அனைத்து தனியார் பள்ளிகளிலும் மும்மொழி திட்டம். ஆனால், எங்கள் ஏழை மாணவர்கள் பயிலும் அரசு பள்ளிகளில் மும்மொழி திட்டம் மறுப்பது ஏன்? ஊருக்கு தான் உபதேசமா? என கேள்வி எழுப்பி போஸ்டர்களை ஒட்டி உள்ளனர்.

காவல்நிலையத்தில் புகார்
இரவு ஒட்டப்பட்ட இந்த போஸ்டர்களை இன்று காலை கிழித்து அகற்றப்பட்டிருந்தது. இது குறித்து பாஜக மாவட்ட தலைவர் நாஞ்சில் பாலு தலைமையில் அக்கட்சியினர் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் சிவக்குமாரிடம் போஸ்டர்களை கிழித்தெறிந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் மனு அளித்தனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சேதுராமன் கூறுகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் பாஜக சார்பில் ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்களை காவல்துறையினர் கிழித்துள்ளனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.






















