Modi on Delhi Election: எழுதி வச்சுக்கோங்க... பிப்.8-ல் டெல்லியில் பாஜக ஆட்சி அமையும்.. ஃபுல் கான்பிடன்ஸில் மோடி...
டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக நிச்சயம் வெற்றி பெறும் என்பதை இப்போதே எழுதி வைத்துக்கொள்ளுங்கள் என்று, பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

டெல்லி சட்டமன்றத்திற்கு வரும் 5-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், களத்தில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், இன்று பாஜக சார்பாக நடந்த பிரசாரத்தில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, டெல்லி தேர்தலில் வெற்றி நிச்சயம் என கூறியுள்ளார்.
எழுதி வச்சுக்கோங்க... உறுதியாக சொன்ன பிரதமர் மோடி
டெல்லியில் இன்று(02.02.25) பாஜக சார்பில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, மக்களிடையே பேசினார். அப்போது, "நீங்கள் எழுதி வைத்துக் கொள்ளுங்கள், பிப்ரவரி 8-ம் தேதி டெல்லியில் பாஜக ஆட்சி அமைந்து, சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8-ம் தேதியிலிருந்து பாஜக வாக்குறுதி அளித்தபடி, பெண்கள் அனைவரும் ரூ.2,500-ஐ பெறத் தொடங்குவீர்கள்" என கூறினார். மேலும், பாஜக தலைமையிலான அரசு எந்த குடிசையையும் இடிக்காது என்றும், எந்த நலத்திட்டங்களும் நிறுத்தப்படாது என்றும் வாக்குறுதி அளித்தார்.
ஆம் ஆத்மி கட்சியை சாடிய மோடி
பிரசாரத்தின்போது, ஆம் ஆத்மி ஆட்சியை சாடிய மோடி, அவர்களது ஆட்சியில் 11 ஆண்டுகளாக டெல்லி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுகாதாரம் உள்ளிட்ட எல்லா துறைகளிலும் ஆம் ஆத்மி ஊழல் செய்வதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், ஆம் ஆத்மி மீது மக்களிடையே பெருகிவரும் அதிருப்தியின் காரணமாகவே, அந்த கட்சித் தலைவர்கள், எம்.எல்.ஏ-க்கள், தேர்தலில் சீட்டு மறுக்கப்பட்டவர்கள் எல்லோரும் கட்சியை விட்டு வெளியேறி வருவதாகவும் விமர்சித்தார். அதனாலேயே, ஆம் ஆத்மி தினமும் தவறான அறிவிப்புகளை வெளியிட்டு வருவதாகவும் கூறினார்.
பட்ஜெட்டை புகழ்ந்த மோடி
இந்திய வரலாற்றில், தங்களுக்கான மிகச்சிறந்த பட்ஜெட் இதுதான் என்று நடுத்தர வர்க்கத்தினர் கூறுவதாக, பிரசாரத்தின்போது பிரதமர் மோடி தெரிவித்தார். தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய பட்ஜெட் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் மோடி தெரிவித்தார். 12 ஆண்டுகளுக்கு முன் கூட, காங்கிரஸ் ஆட்சியில் 12 லட்சம் ரூபாய் சம்பாதித்திருந்தால், அதில் ரூ.2.6 லட்சம் வரியாக போயிருக்கும் என்றும், தற்போது பாஜக ஆட்சியில் ஒரு ரூபாய் கூட வரியாக செலுத்தவேண்டியதில்லை என்றும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

