WB Crime: பெண் குழந்தைக்காக கிட்னியை விற்ற கணவன் ..! ரூ.10 லட்சம், காதலனுடன் ஓடிப்போன மனைவி
WB Crime: மகளுக்காக கணவன் விற்ற கிட்னிக்காக கிடைத்த பணத்துடன், மனைவி காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

WB Crime: மகளுக்காக கணவன் விற்ற கிட்னிக்காக கிடைத்த பணத்துடன், மனைவி காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய சம்பவம் மேற்குவங்கத்தில் அரங்கேறியுள்ளது.
கணவனை ஏமாற்றி காதலனுடன் ஓட்டம்:
நம்பிக்கை வைப்பது என்பது வீண் முயற்சி என்பதை, வாழக்கை பல சமயங்களில் நமக்கு உணர்த்தியுள்ளது. அதற்கு மேலும் ஒரு உதாரணமான சம்பவம் மேற்குவங்கத்தில் அரங்கேறியுள்ளது. அதன்படி, பெண் ஒருவர் தனது கணவரை சிறுநீரகத்தை விற்கும்படி வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. பின்னர் அதற்காக கிடைத்த பணத்தை எடுத்துக்கொண்டு தனது காதலனுடன் ஊரை விட்டு தப்பியோடியுள்ளார். ஹவுரா மாவட்டத்தில் உள்ள சங்க்ரெய்ல் என்ற இடத்தில், பணக் கஷ்டம், மகளின் கல்வி மற்றும் திருமணத்திற்கு போதிய நிதி இல்லை போன்ற காரணங்களை குறிப்பிட்டு, தனது கணவரை கிட்னியை விற்கச் செய்துள்ளார் அந்த பெண். இறுதிய்ல், பெற்ற மகளையும், கணவரையும் ஏமாற்றிவிட்டு அந்த பெண் ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரூ.10 லட்சத்துடன் ஓட்டம்:
மனைவி வற்புறுத்தியதால் அந்த நபர் கிட்னியை விற்க சம்மதித்துள்ளார். தொடர்ந்து ஒரு வருட தேடலுக்குப் பிறகு, மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு 'வாங்குபவரை' கண்டுபிடித்து தனது சிறுநீரகத்தை விற்றார். சிறுநீரகத்தை விற்ற பிறகு, அவர் தனது குடும்பத்தின் நிதி நிலைமை மேம்படும், ஏழ்மையை ஓரளவு போக்கிவிடும் என்றும், எதிர்காலத்தில் தன் மகளின் திருமணத்தை எளிதாக்கும் என்றும் நம்பினார். இருப்பினும், இந்த முடிவின் பின்னால் தனது மனைவியின் உள்நோக்கம் இருப்பதை அந்த இளைஞன் கவனிக்கவில்லை.
ஃபேஸ்புக்கால் வந்த வினை
தனது சிறுநீரகத்தை விற்று குடும்ப சூழ்நிலையை உயர்த்த கணவன் முயன்ற வேளையில், அவரது மனைவி பாரக்பூரில் உள்ள சுபாஷ் காலனியில் வசிக்கும் ரவிதாஸ் என்பவருடன் பேஸ்புக்கில் தொடர்பு கொண்டிருந்தார். தொழில் ரீதியாக ஓவியரான ரவிதாஸ் உடனான பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இறுதியில் கணவர் சிறுநீரகத்தை விற்று சம்பாதித்த ரூ. 10 லட்சத்துடன் காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
”விவாகரத்து தருகிறேன்”
சம்பவம் தொடர்பாக கணவர் போலீசில் புகார் அளித்தார். இதற்கிடையில், அந்தப் பெண் பாரக்பூரில் ரவி தாஸுடன் சேர்ந்து வாழத் தொடங்கினார். தகவலறிந்த கணவரின் குடும்பத்தினர், அவரது 10 வயது மகளை அழைத்துக்கொண்டு வெள்ளிக்கிழமை தம்பதியின் வீட்டுக்குச் சென்றனர். ஆனால், ரவியும் அந்த பெண்ணும் கதவை திறக்க மறுத்தனர். நீண்ட நேர காத்திருப்புக்கு பிறகு கதவை லேசாக திறந்த அந்த பெண், “நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்யுங்கள். நான் விவாகரத்து கடிதம் அனுப்புகிறேன்" என பதிலளித்துவிட்டு கதவை அடைத்துள்ளார். மாமனார், மாமியார், கணவன், பிள்ளைகள் என எத்தனையோ முறை வேண்டுகோள் விடுத்தும் மனைவி வெளியில் கூட வரவில்லை.
இந்தியா 1994 இல் மனித உறுப்புகளை வர்த்தகம் செய்வதை தடை செய்தது, ஆனால் உடல் உறுப்புகள் விற்பனை நீடித்து வருவதாக தற்போதும் குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன. இதற்கு இறந்தவர்களின் உடலுறுப்புகளை தானம் செய்வது குறைவு போன்றவை காரணங்களாக உள்ளன.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

