Nellai News: அடிதடி, பாலியல் வன்புணர்வு, சென்னை இயக்குனர் மறைவு - நெல்லையில் நடந்த செய்திகள் இதோ
திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்த சில முக்கிய செய்திகளை தெரிந்துக்கொள்ளலாம்.
> நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே நாச்சான்குளம் மேலூரைச் சேர்ந்தவர் விவசாயி சங்கரன்(50). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் பொது வழிப்பாதை தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையால் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரச்சனையை தீர்க்க இரு தரப்பினர் மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை புகார் அளித்தும் தீர்வு காணப்படவில்லை என்றும் தெரிகிறது. நீண்ட நாட்களாக பிரச்சினை தொடர்ந்து வந்த நிலையில் நேற்று இரு தரப்பின் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதில் அதே ஊரில் உள்ள இரு தரப்பையும் சேர்ந்த முத்துபாண்டி, சுரேஸ் சங்கரன் ஆகியோர் மாறி, மாறி ஒருவரை ஒருவர் அரிவாள், கம்புடன் தாக்கி கொண்டனர். அப்போது 3 பேரும் பலத்த காயங்களுடன் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் முத்துப்பாண்டி மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து மூலைக்கரைப்பட்டி போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாங்குநேரி தாலுகாவில் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு தொடர்பாக அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதால் அடிக்கடி இது போன்ற சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார இழப்புகள் உருவாகுவதாக சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
> நெல்லை மாநகரின் எல்லை பகுதியான ஆரோக்கியநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விமல் அருளப்பன். 30 வயதான இவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். அவர் அதே பகுதியைச் சேர்ந்த சிறுமிகள் மற்றும் இளம் பெண்களை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பாலியல் வன்புணர்வு செய்ததாக புகார் எழுந்தது. இந்த சூழலில் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமி உட்பட இரண்டு இளம் பெண்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் பாளையங்கோட்டை மேட்டுத்திடல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விமல் அருளப்பனை தேடி வந்தனர். இந்த நிலையில் அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விரிவான விசாரணை மேற்கொண்ட நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். விசாரணையில் ஆசை வார்த்தை கூறி சிறுமிகள் உட்பட இளம் பெண்களை ஏமாற்றி பாலியல் வன்புணர்வு செய்துள்ளதாகவும் அதில் மூன்று பேர் தற்போது புகார் அளித்ததனுடைய அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
> சென்னை செம்பாக்கத்தை சேர்ந்தவர் சுரேஷ் குமார். இவர் திரைத்துறையில் பணியாற்றினார். சினிமா இயக்குனரான சுரேஷ்குமார் நடிகர் சத்யராஜை வைத்து அழகேசன், சவுண்ட் பார்ட்டி போன்ற படங்களை இயக்கி உள்ளார். மேலும் ஞான ராஜசேகரன் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் நடித்துள்ள ’பெரியார்’ படத்தில் சுரேஷ்குமார் ராஜாஜியாக நடித்திருக்கிறார். இதன் மூலம் நடிகராகவும் அறியப்பட்டார். இவருக்கு சொந்த ஊர் நெல்லை மாவட்டம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் வயோதிகம் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட சுரேஷ் குமார் சித்த மருத்துவ சிகிச்சைக்காக நெல்லைக்கு கடந்த வாரம் வந்துள்ளார். பின்னர் நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள லாட்ஜில் தங்கியபடி சித்த மருத்துவ சிகிச்சை எடுத்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென லாட்ஜில் மயங்கி விழுந்துள்ளார். அவருடன் உறவினர்கள் யாரும் இல்லை. எனவே லாட்ஜ் ஊழியர்கள் சுரேஷ்குமாரை மீட்டு பாளையங்கோட்டையில் உள்ள ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சுரேஷ்குமார் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் உடற்கூறாய்வு செய்வதற்காக எடுத்து செல்லப்பட்டது. மேலும் சுரேஷ்குமாரின் மறைவு குறித்து போலீசார் சென்னையில் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பெயரில் உறவினர்கள் நெல்லைக்கு வருகை தந்து சுரேஷ்குமார் உடலை பெற்று செல்ல இருக்கின்றனர். சென்னையை சேர்ந்த சினிமா இயக்குனர் நெல்லையில் வைத்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து சந்திப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்