தஞ்சையில் வெளியான திருக்குறள்: திருவள்ளுவராக வாழ்ந்த கலைச்சோழன்! பாராட்டி தள்ளிய கிராம மக்கள்
திருவள்ளுவராக நடித்த கலைச்சோழனுக்கு மனதார பாராட்டு தெரிவிக்கிறேன். அவசியம் பள்ளி கல்லூரி மாணவர்கள் இந்த திரைப்படத்தை காண வேண்டும்.

தஞ்சாவூர்: தஞ்சையில் வெளியான திருவள்ளுவரின் அறம் சார்ந்த வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திருக்குறள் திரைப்படத்தில் திருவள்ளுவர் கதாபாத்திரத்தில் தத்ரூபமாக நடித்த தஞ்சையை சேர்ந்த நடிகர் கலைச்சோழனுக்கு அனைத்து தரப்பு மக்களும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் தெரிவித்தனர்.
வாழ்வியலை உலகத்திற்கே எடுத்துரைத்த திருவள்ளுவரின் அறம் சார்ந்த வாழ்வு குறித்து உருவாக்கப்பட்ட திரைப்படமான "திருக்குறள்" என்ற திரைப்படம், இயக்குனர் ஏ.ஜெ. பாலகிருஷ்ணன் இயக்கத்தில் இசைஞானி இளையராஜாவின் இசையுடன் உருவாக்கப்பட்டு நேற்று வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்த திரைப்படத்தில் திருவள்ளுவரின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த கலைச்சோழன் என்ற நடிகர் தஞ்சை மாவட்டம் பின்னையூரை சேர்ந்தவர். கூத்து பட்டறையில் பயிற்சி பெற்ற நடிகராகவும், நாடக இயக்குனராகவும், நாடக ஆசிரியராகவும் இருக்கும் கலைச்சோழன் திரைப்படத்தில் மிக தத்ரூபமாக திருவள்ளுவர் வேடமேற்று நடித்து அனைவரின் பாராட்டைப் பெற்றார்.

நேற்று தஞ்சையில் திரையிடப்பட்ட இப்படத்தைக் நடிகர் கலைச்சோழனுடன் அவரது சொந்த ஊரான பின்னையூர் கிராமமக்கள் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இராமச்சந்திரன் ஆகியோர் பார்த்து ரசித்தனர். பின்னர் அனைவரும் நடிகர் கலைச் சோழனை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். இந்த திரைப்படம் தொடர்பாக பேசிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இராமச்சந்திரன், மிக அருமையாக திருக்குறள் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது திருவள்ளுவராக நடித்த கலைச்சோழனுக்கு மனதார பாராட்டு தெரிவிக்கிறேன். அவசியம் பள்ளி கல்லூரி மாணவர்கள் இந்த திரைப்படத்தை காண வேண்டும். திருவள்ளுவர் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்வதற்கு பெரும் வாய்ப்பாக அமையும் என்றார்.
பின்னர் பேசிய நடிகர் கலைச்சோழன், மானுட வாழ்விற்கு அறம் தான் அடித்தளம் என்ற வகையிலும் உலகிற்கே வாழ்வியலை கற்றுத்தந்த திருவள்ளுவரின் சிந்தனைகளின் ஒரு பகுதியை திரைப்படமாக கொண்டு வந்ததில், அதிலும் திருவள்ளுவராக நடித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா பாடல்களை எழுதி இசையமைத்து கொடுத்தது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது, முதல் பாடலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவசியம் அனைவரும் திரையரங்கில் திரைப்படத்தை பார்த்து ஆதரவளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
படம் குறித்து கிராம மக்கள் கூறுகையில், உலக பொதுமறையை அளித்த திருவள்ளுவர் படத்தில் கலைச்சோழன் வாழ்ந்துள்ளார். அவர் இயல்பான நடிப்பில் திரையில் திருவள்ளுவர் இப்படிதான் இருந்து இருப்பாரோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விட்டார். அருமையான நடிப்பை தந்த கலைச்சோழனை பாராட்டுகிறோம் என்றனர்.





















