வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுமி உயிரிழப்பு - அரசின் அலட்சியத்தால் நடத்த சோகம்..!
மயிலாடுதுறை அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுமி உயிரிழந்த சம்பவத்திற்கு மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என பொதுமக்கள் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் காளி ஊராட்சி, பொய்கைகுடி கிராமத்தில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வந்த வீட்டின் உட்புற சுவர் இடிந்து விழுந்ததில், விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். உரிய நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காததும், 108 ஆம்புலன்ஸ் வராததும் சிறுமியின் உயிரிழப்புக்குக் காரணம் எனக் கூறி, பொதுமக்கள் காளி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சோக சம்பவம் - என்ன நடந்தது?
பொய்கைகுடி கிராமத்தைச் சேர்ந்த காமராஜர் - சரண்யா தம்பதியினர். காமராஜர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு 8 வயதில் சாஷா மற்றும் 5 வயதில் சஹானாஸ்ரீ என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் இவர்களது வீடு கடந்த ஓராண்டாகக் கட்டப்பட்டு வருகிறது. வீட்டின் மேல் தளம் மூடப்பட்டுவிட்ட நிலையில், பூச்சு வேலைகள் செய்யப்படாமல் முழுமையடையாத நிலையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், மாலை முதல் வகுப்பு படித்து வந்த இளைய மகளான சஹானாஸ்ரீ, கட்டப்பட்டு வந்த வீட்டின் உள்ளே விளையாடிக் கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக, வீட்டின் உட்புறம் நடுவில் இருந்த சுமார் 7 அடி உயரமுள்ள ஒரு சுவர் இடிந்து சிறுமி சஹானாஸ்ரீ மீது விழுந்தது. இடிபாடுகளுக்குள் சிக்கிய சிறுமி ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடியுள்ளார்.
மருத்துவ அலட்சியமும், ஆம்புலன்ஸ் தாமதமும்
இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாகச் சுவருக்கு அடியில் சிக்கிய குழந்தையை மீட்டு, அவசர சிகிச்சைக்காகக் காளியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு மருத்துவர்கள் யாரும் பணியில் இல்லை என்று கூறப்படுகிறது. அங்கிருந்த செவிலியர்கள், சிறுமியை உடனடியாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். அதனை தொடர்ந்து, 108 ஆம்புலன்ஸ் வருவதற்கு நீண்ட நேரம் தாமதமானதாக ஆகியுள்ளது. இதனால் ஆம்புலன்ஸ் வருவதற்குள் சிறுமி சஹானாஸ்ரீ பரிதாபமாக காளி ஆரம்ப சுகாதார நிலையத்திலோயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தொடர்ந்து தாமதமாக வந்த 108 ஆம்புலன்ஸில் சிறுமியின் உடல் ஏற்றப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
காளி ஆரம்ப சுகாதார நிலையம் முன் சாலை மறியல்
சிறுமி உயிரிழந்த தகவலறிந்ததும், காளி ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன்பு சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது, “கொரோனா காலத்தில் இந்த காளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் இருந்தது, ஆனால் தற்போது ஒரு ஆம்புலன்ஸ் கூட இல்லை. மருத்துவர்களும் இல்லை,” என்று குற்றம்சாட்டி கண்டனக் கோஷங்களை எழுப்பினர்.
மேலும், சுற்றுவட்டாரத்தில் உள்ள 8 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குத் தலைமையிடமாக விளங்கும் காளி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நிரந்தர மருத்துவர்களைப் பணி அமர்த்த வேண்டும், நிறுத்தப்பட்ட 108 ஆம்புலன்ஸ் வசதியை மீண்டும் ஏற்படுத்தித் தர வேண்டும், உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் நடத்தினர்.

போலீஸ் பேச்சுவார்த்தை
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணல்மேடு போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில், பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். இதையடுத்து, உயிரிழந்த சிறுமி சஹானாஸ்ரீயின் உடல், பிரேதப் பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த துயரச் சம்பவத்தால் திருமங்கலம் - மணல்மேடு சாலையில் 4 மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வந்த வீடு இடிந்து விழுந்து 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி கிராம மக்களிடையே பெரும் சோகத்தையும், திட்டப் பணிகளின் தரம் குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது. இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு, பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பொதுமக்களின் கோரிக்கையை அலட்சிய படுத்திய ஆட்சியரால் பறிபோன உயிர்
இந்நிலையில் காலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் பற்றாக்குறை குறித்தும் மருத்துவர்கள் நியமிக்க கோரி அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த இடம் அப்பகுதி மக்கள் கடந்த ஜூலை நான்காம் தேதி மனு அளிக்க வந்தனர். ஆனால் அவர்களின் மனுவை பெறாமல் அவர்களின் கோரிக்கைகளையும் செவி கொடுத்து கேட்காமல், எதுவாக இருந்தாலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து கேளுங்கள் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் சொல்லி அவர்களின் கோரிக்கையை புறக்கணித்த நிலையில் மருத்துவர் இல்லாமல் சிறுமி உயிர் வந்த சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிட்ட தக்கது.






















