Karun Nair: சோலி முடிஞ்சு..! முடிவுக்கு வந்ததா கருண் நாயர் கிரிக்கெட் வாழ்க்கை?
மான்செஸ்ட்ர் டெஸ்ட் போட்டியில் அணியில் இருந்து கழட்டிவிடப்பட்ட கருண் நாயருக்கு இனி இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவே கிடைக்காது என்றே கருதப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணியுடன் ஆடி வருகிறது. 3 போட்டிகள் முடிந்து 4வது டெஸ்ட் போட்டி இன்று மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் ட்ரோஃபோர்ட் மைதானத்தில் ஆடி வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
கருண் நாயருக்கு நோ சான்ஸ்:
இந்த டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. காயம் அடைந்த நிதிஷ்குமார் ரெட்டி, ஆகாஷ் தீப் ஆகியோருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர், அறிமுக வீரராக அன்சுல் கம்போஜ் களமிறங்கியுள்ளனர். இந்திய அணியின் ஒன் டவுன் வரிசையில் களமிறக்கப்பட்டு வாய்ப்பு வழங்கப்பட்ட கருண் நாயருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முச்சதத்திற்கு பிறகு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற கருண் நாயருக்கு ஆதரவான குரல்கள் வலுவானதைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் 3 டெஸ்ட் போட்டியிலும் அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டது.

தொடர் சொதப்பல்:
கருண் நாயர் லீட்ஸ், எட்ஜ்பாஸ்டன், லார்ட்ஸ் என 3 டெஸ்ட் போட்டிகளில் 6 இன்னிங்சிலும் ஆடினார். ஆனால், டக் அவுட்டுடன் இந்த தொடரைத் தொடங்கிய கருண் நாயர் அடுத்த 5 இன்னிங்சில் ஆடிய அவர் ஒரு இன்னிங்சில் எடுத்த அதிகபட்ச ரன் வெறும் 40-ஆ ஆகும். குறிப்பாக, எட்ஜ்பாஸ்டன் மற்றும் லார்ட்ஸ் மைதானத்தில் அவருக்கு ஒன்டவுன் வீரராக வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஆனால், எந்த வாய்ப்பையும் சரியாக பயன்படுத்தாத கருண் நாயர் மீது விமர்சனங்கள் குவிந்தது. முக்கியமான இடத்தில் ஆடிய அவர் தனது திறமையை நிரூபிக்காததால் அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற குரல் வலுத்தது. இதன் எதிரொலியாகவே அவரை இன்று அணியில் இருந்து நீக்கியுள்ளனர்.
முடிவுக்கு வந்ததா கிரிக்கெட் வாழ்க்கை:
அடுத்த டெஸ்ட் போட்டியிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்றே கருதப்படுகிறது. இதனால், இனி வரும் நாட்களில் கருண் நாயருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காது என்றே கருதப்படுகிறது.
33 வயதான கருண் நாயர் இதுவரை 9 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். இந்த 9 டெஸ்ட் போட்டிகளில் ஆடி அவர் மொத்தமாகவே 505 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இந்த 9 டெஸ்ட் போட்டிகளில் அவர் 13 இன்னிங்சில் பேட் செய்துள்ளார். அதில் 303 ரன்கள் எடுத்த அந்த ஒரு இன்னிங்ஸ் தவிர மற்ற 12 இன்னிங்சிலும் சேர்த்து 202 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
ரசிகர்களை ஏமாற்றிய கருண்:
வாய்ப்பு தரப்படவில்லை என்ற கருண் நாயருக்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் உறுதுணையாக நின்றனர். ஆனால், அத்தனை பேரின் நம்பிக்கையையும் உடைக்கும் விதமாகவே கருண் நாயரின் பேட்டிங் அமைந்தது. இங்கிலாந்து தொடரில் முதல் இரண்டு போட்டிகள் நடந்த லீட்ஸ் மற்றும் எட்ஜ்பாஸ்டன் பேட்டிங்கிற்கு மிகவும் சாதகமாகவே அமைக்கப்பட்டிருந்தது. இதனால்தான் இரு அணி வீரர்களும் ரன்மழை பொழிந்தனர்.
எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் இந்திய அணி மட்டுமே 1000 ரன்களை கடந்தது. ஆனால், அந்த மைதானத்திலே கருண்நாயர் ஜொலிக்கவில்லை. இதன்பின்பு, இப்படி ஒரு வாய்ப்பு இந்திய அணியில் அவருக்கு கிடைக்காது என்றே கணிக்கப்படுகிறது. சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன் போன்ற திறமையான வீரர்களின் வாய்ப்பை அவர் வீணடித்ததால் இனி அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்குமா? என்பது மிகப்பெரிய கேள்வி ஆகும்.
இனி என்ன?
இந்திய ஒருநாள் அணி மற்றும் டி20 அணிகளில் கருண் நாயருக்கு வாய்ப்புகள் என்பது கிடைப்பது மிக மிக சவால் ஆகும். ஏனென்றால் ஐபிஎல் தொடர் மூலமாக ஏராளமான வீரர்கள் உருவாகியிருப்பதால் அவர்களுக்கே ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. ஹர்திக் பாண்ட்யா, ஸ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன் என பெரிய பட்டாளமே ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆடத் தயாராக இருப்பதால் கருண்நாயரின் கிரிக்கெட் எதிர்காலம் இனி கேள்விக்குறியாகி உள்ளது.




















