மாணவர்களுக்கு குட் நியூஸ்... ! விரைவில் வெளியாகிறது அரசாணை; உயர்கல்வி மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு
உயர்கல்வியில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணை விரைவில் வெளியாக உள்ளது.

புதுச்சேரி: உயர்கல்வியில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணை விரைவில் வெளியாக உள்ளது. மாநிலத்தில், அரசு மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள அரசு இட ஒதுக்கீட்டு இடங்களுக்கு சென்டாக் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
விரைவில் 10 சதவீத இட ஒதுக்கீடு
மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் பொருட்டு, அரசு பள்ளி மாணவர்களுக்கு, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆயுர்வேதா உள்ளிட்ட நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலான படிப்புகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த மார்ச் மாதம் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து படிப்புகளிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். அதனை அனைத்து கட்சிகளும் வரவேற்றபோதிலும், இந்த இட ஒதுக்கீட்டை இந்தாண்டு அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது. இதற்கிடையே அரசு பள்ளிகள் CBSC சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திற்கு மாற்றப்பட்டு முதல் முறையாக கடந்த மார்ச் மாதம் பொதுத் தேர்வு எழுதினர். தேர்வில், மாணவர்கள் தேர்ச்சி பெற்றாலும், மதிப்பெண் அதிக அளவில் இல்லாததால், உயர் கல்வி சேர்க்கையில் தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது.
நீட் அல்லாத படிப்புகளுக்கும் கவுன்சிலிங் நடத்தப்படவில்லை
இதனால், அனைத்து உயர்கல்வியிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதனையேற்று அரசு பள்ளி மாணவர்களுக்கு அனைத்து படிப்புகளுக்கும் 10 சதவீத இட ஒதுக்கீடு இந்தாண்டே வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். ஆனாலும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது. அதே நேரத்தில், நீட் அல்லாத படிப்புகளுக்கு சென்டாக் விண்ணப்பம் பெற்று, தரவரிசை வெளியிட்டுள்ள நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்து அரசாணை வெளியிடாததால், நீட் அல்லாத படிப்புகளுக்கும் கவுன்சிலிங் நடத்தப்படாமல் உள்ளது.
தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் உயர்கல்விக்கான கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், புதுச்சேரி சென்டாக் நிர்வாகம் மவுனம் காத்து வந்ததால், மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் பெரும் தவிப்பிற்கு உள்ளாகினர். அதனையறிந்த கல்வி அமைச்சர் நமச்சிவாயம் கடந்த வாரம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, அனைத்து படிப்புகளிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு இந்தாண்டே அமல்படுத்த உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து இதுதொடர்பான துறை செயலர் வழியாக அனுப்பிய கோப்பிற்கு சட்டத்துறை, தலைமைச் செயலர் நேற்று ஒப்புதல் அளித்து, துறை அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இவ்வார இறுதிக்குள் அரசாணை வெளியிட நடவடிக்கை
அதனைத் தொடர்ந்து துறை அமைச்சரின் பரிந்துரையை ஏற்று, அமைச்சரவையை கூட்ட முதல்வர் நேற்று மாலை உத்தரவிட்டார். அதனால், இன்று அல்லது நாளை அமைச்சரவை கூடி, கோப்பிற்கு ஒப்பதல் பெற்று, லண்டன் சென்றுள்ள ஆளுநருக்கு மின்னஞ்சல் அனுப்பி, ஓப்புதல் பெற்று, இவ்வார இறுதிக்குள் அரசாணை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஆகஸ்ட் 14ம் தேதிக்குள் கலந்தாய்வு
அரசாணை வெளியானவுடன் சீட் மேட்ரிக்ஸ் மற்றும் தரவரிசை பட்டியலை வெளியிட்டு, கலந்தாய்வு பணியை துவங்க சென்டாக் நிர்வாகம் ஆயத்தமாகி வருகிறது. மேலும், பி.டெக் படிப்புகளுக்கு வரும் ஆகஸ்ட் 14ம் தேதிக்குள் கலந்தாய்வை முடிக்க வேண்டும் என்றதால், அதற்காக சிறப்பு கலந்தாய்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.





















