4 லட்சத்தை எட்டிய மாணவர் சேர்க்கை; பெருமிதப்பட்ட அமைச்சர் அன்பில்- கேள்வி எழுப்பிய நெட்டிசன்!
காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக, முழுமையாக நிரப்ப வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.

3 இலட்சத்து 94 ஆயிரம் என்ற அளவில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்
3,94,016 மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளார்கள்
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ’’தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு செயல்படுத்தும் கல்வி மேம்பாட்டுத் திட்டங்களின் பலனாக நேற்று வரையிலும் அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 3,94,016 மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளார்கள் என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அனைவரும் வருக! கல்வியின் வழியே அறிவுலகை ஆள்க’’ என்று அமைச்சர் அன்பில் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
எனினும் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக, முழுமையாக நிரப்ப வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.
குறைவான வேகத்திலேயே மாணவர் சேர்க்கை
கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு குறைவான வேகத்திலேயே அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்ந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில் தற்போது சுமார் 4 லட்சம் பேர் இதுவரை அரசு தொடக்கப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.
கற்பித்தல் பணிகளில் கடுமையான பற்றாக்குறை
மாணவர் சேர்க்கை 3 இலட்சத்து 94 ஆயிரம்!
— Anbil Mahesh (@Anbil_Mahesh) July 24, 2025
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் தலைமையிலான #DravidianModel அரசு செயல்படுத்தும் கல்வி மேம்பாட்டுத் திட்டங்களின் பலனாக நேற்று வரையிலும் அரசுத் தொடக்கப்பள்ளிகளில் 3,94,016 மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளார்கள் என்பதை பெரும்… pic.twitter.com/c6WDhbb1BS
இதற்கிடையே நெட்டிசன் ஒருவர் அமைச்சர் அன்பிலின் எக்ஸ் பதிவில் வெளியிட்ட பதிலில், ‘’சுமார் 4 லட்சம் புதிய மாணவர்களுக்கு பயிற்சியளிக்க அரசுப் பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இருக்கின்றனரா? கற்பித்தல் பணிகளில் கடுமையான பற்றாக்குறை நிலவுகிறதே. அரசு இதற்கு முக்கியத்துவம் கொடுத்து கவனிக்க வேண்டும்’’ என்று பதிவிட்டு உள்ளார்.






















