நல்லாசிரியர்; டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு ஆக.3 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?
மாநில நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் குறைந்தது 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். குற்றச்சாட்டுக்கும், ஒழுங்கு நடவடிக்கைக்கும் உள்ளாகாதவராக இருக்க வேண்டும்.

மாநில நல்லாசிரியர் விருதான டாக்டர். இராதாகிருஷ்ணன் விருது 2025-க்கு, EMIS இணையதளத்தில் விண்ணப்பப் பதிவேற்றம் செய்யலாம் எனவும் அதற்குத் தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்த வேண்டும் எனவும் தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
பாரத முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர். இராதா கிருஷ்ணன் பிறந்தநாள் செப்டம்பர் மாதம் 5-ஆம் நாள் பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக ஆசிரியர் தின விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
யாரெல்லாம் தேர்வு செய்யப்படுவர்?
அவ்விழாவில் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலை / தனியார் பள்ளிகள் / ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள்/ சமூக பாதுகாப்புத்துறை /ஆதி திராவிடர் பழங்குடியினர் நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் சிறப்பாகப் பணிபுரியும் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்.
அவர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருதான “டாக்டர். இராதாகிருஷ்ணன் விருது" வழங்கப்பட்டு அவர்களுக்கு ரூ.10.000/- (ரூபாய் பத்தாயிரம் மட்டும்) ரொக்கப்பரிசும், ரூ.2,500 மதிப்பிலான வெள்ளிப் பதக்கமும், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பயணப் படியும் வழங்கப்பட்டு வருகிறது.
EMIS இணையதளம் வாயிலாக
அதன்படி 2025 ஆம் ஆண்டிற்கான டாக்டர். இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா 05.09.2025 அன்று நடைபெற உள்ள நிலையில், அதற்கான விண்ணப்பங்கள் EMIS இணையதளம் வாயிலாக வட்டாரக் கல்வி அலுவலர்/ மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி, இடைநிலை, தனியார் பள்ளிகள்) (முதன்மைக் கல்வி அலுவலர் நிலையில் பரிசீலிக்கப்பட்டு பெறப்பட உள்ளது.
எனவே கடந்தாண்டைப் போலவே இவ்வாண்டும் இதற்கான பணிகள் அனைத்தையும் மேற்கொண்டு விண்ணப்பிக்கத்தக்க வகையில் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
எமிஸ் இணையதளம் வழியாக விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்யும் நாள் பின்னர் தெரிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
386 பேருக்கு விருதுகள்
இந்த ஆண்டு 342 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் 38 தனியார் பள்ளி ஆசிரியர்கள், ஆங்கிலோ இந்திய பள்ளிகள், சமூக பாதுகாப்புத் துறை பள்ளிகள், மாற்றுத்திறனாளி ஆசிரியர்களில் தலா 2 பேர் என மொத்தம் 386 பேருக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட உள்ளன.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
விருதுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். எவ்வித குற்றச்சாட்டுக்கும், ஒழுங்கு நடவடிக்கைக்கும் உள்ளாகதவராக இருக்க வேண்டும்.
வகுப்பறையில் கற்பித்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு மட்டுமே விருது வழங்கப்படும். அலுவல், நிர்வாகப் பணிகளை செய்யும் ஆசிரியர்கள் விண்ணப்பிக்கக முடியாது. அரசியல் கட்சிகளுடன் தொடர்புடையவராக இருக்கக் கூடாது. தேசிய விருது பெற்ற ஆசிரியர்கள் விண்ணப்பிக்க முடியாது என்றும் பள்ளிக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.






















