Hari Nadar New Party: "சத்திரிய சான்றோர் படை" ... தனது புதிய கட்சி பெயரை அறிவித்தார் ஹரி நாடார்.!
Hari Nadar New Political Party: தமிழகத்தில் மட்டும் கள் இறக்க ஏன் விதி விலக்காக உள்ளது. அதனால் இதுகுறித்து சட்டமன்றத்தில் குரல் ஒலிக்க சத்திரிய சான்றோர் படை குரலாக ஹரி நாடார் குரல் ஒலிக்கும்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் பெருந்தலைவர் காமராஜரின் 122 வது பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஹரிநாடார் செய்தியாளார்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு ஆலங்குளத்தில் நாடார்களுக்கான அரசியல் அங்கீகாரத்தை வழங்கும் விதமாக எனக்கு 37,720 வாக்குகளை அளித்த இத்தொகுதியில் அமைந்துள்ள காமராஜருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். தொடர்ந்து நாடார் சமுதாயத்திற்கான புதிய அரசியல் கட்சியை அவர் முன்பு அறிவிக்க இருந்தேன். ஆனால் காவல்துறை தடுத்து நிறுத்தியது. இருந்தாலும் இத்தொகுதி மக்கள் என்னை அடையாளம் காட்டியிருப்பதால் ஆலங்குளத்தில் வைத்து அரசியல் கட்சியை அறிவிக்க இருக்கிறேன். அதன்படி அரசியல் கட்சியின் பெயர் ”சத்திரிய சான்றோர் படை” என்று அறிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், சத்திரியர் என்றால் எங்கள் சமுதாயத்தையும், சான்றோர் என்றால் அதுவும் எங்கள் சமுதாயத்தையும் குறிக்கும். படை என்றால் போராட்டம், ஆர்ப்பாட்டம், சமுதாய மக்களின் பிரச்சினை என்றால் அதற்கு படை பலமாக இருக்கக்கூடியது என்பதால் அதன்படி அறிவித்துள்ளேன். கூடிய விரையில் கட்சி கொடியையும், மாநில, மாவட்ட நிர்வாகிகளையும் இதே ஆலங்குளத்தில் வைத்து அறிவிப்பேன் என்று கூறினார். எங்கள் சமுதாயத்திற்கு அரசியல் அங்கீகாரம் வேண்டும் என்பதால் அச்சமுதாயத்தின் பிரதிநிதியாக சட்ட மன்றத்தில் ஹரிநாடார் குரல் கொடுக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இன்று ஆரம்பித்துள்ள கட்சியை பட்டி தொட்டியெங்கும் இளைஞர்கள் கொண்டு சேர்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்த புதிய கட்சியின் கொள்கைகளாக பனையிலிருந்து கள் இறக்க தமிழக அரசு அனுமதி கொடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து அப்பாவி மக்கள் பலர் இறந்துள்ளனர். இந்த கொடூர படுகொலைக்கு திமுக அரசு தான் காரணம். இதே கள் இறக்க அரசு அனுமதி அளித்திருந்தால் இது போன்ற கொடூர மரணங்கள் தடுக்கப்பட்டிருக்கலாம். இதனை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ஆளும் ஆட்சியில் இருக்கும் மந்திரி,அமைச்சர்களின் சாராய வியாபாரம் குறைந்து விடும் என்பதற்காக தான் கள் ஐ தடை செய்கின்றனர். அண்டை மாநிலமான ஆந்திரா, பாண்டிச்சேரி, கேரளா, கர்நாடகாவில் கள் விற்பனைக்கு உள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும் ஏன் விதி விலக்காக உள்ளது. அதனால் இது குறித்து சட்டமன்றத்தில் குரல் ஒலிக்க சத்திரிய சான்றோர் படை குரலாக ஹரி நாடார் குரல் ஒலிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்று தெரிவித்தார். கட்சியின் கலர் என்றால் கராத்தே செல்வின் கொடுத்த ஊதா, பச்சை தான் அதில் மாற்றுக்கருத்து இல்லை, அந்த கொடியில் என்ன இடம் பெறப்போகிறது என்பதை சமுதாய பெரியவர்களிடம் கலந்தாலோசித்து கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.