Engineering: என்னடா இது.. ஏஐ படிப்புக்கு வந்த சோதனை? இத்தனை சீட்டு காலியா.. சிவிலுக்கு இந்த கதியா?
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த முதற்கட்ட பொறியியல் கலந்தாய்வில் ஏஐ மற்றும் சிவில் எஞ்ஜினியரிங்கில் சேர மாணவர்கள் பெரியளவில் ஆர்வம் காட்டவில்லை.

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு முடிந்து இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இதில் முதற்கட்ட கலந்தாய்வு முடிவுகள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், கலந்தாய்வில் மொத்தம் 425 கல்லூரிகள் பங்கேற்ற நிலையில், அதில் 142 கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரம்பவில்லை.
ஏஐ படிப்பில் சேர ஆர்வம் காட்டாத மாணவர்கள்:
தொழில்நுட்ப வளர்ச்சி, இணைய வளர்ச்சிக்கு ஏற்ப கல்லூரிகளிலும் புத்தம் புதிய துறைகளை பொறியியல் கல்லூரிகள் அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில், தற்போது உலகம் முழுவதும் தொழில்நுட்பத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் துறையாக செயற்கை நுண்ணறிவியல் எனப்படும் ஏஐ உள்ளது. இதனால், பல கல்லூரிகளில் ஏஐ படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பொறியியல் கலந்தாய்வில் ஏஐ மற்றும் டேட்டா சயின்ஸ் படிப்புகளுக்கு 22 ஆயிரத்து 767 இடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்த துறையில் பெருவாரியான மாணவர்கள் சேர்வார்கள் என்றே கருதப்பட்டது. ஆனால், முதற்கட்ட கலந்தாய்வில் 3 ஆயிரத்து 208 மாணவர்கள் மட்டுமே இந்த துறையில் சேர்ந்துள்ளனர். இது கல்வியாளர்களுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காரணம் என்ன?
பல பொறியியல் கல்லூரிகளில் ஏஐ துறையை அறிமுகப்படுத்தியிருந்தாலும், அந்த துறைக்கு போதுமான உட்கட்டமைப்பு வசதிகளையும், அந்த துறை சார்ந்த போதிய திறமை கொண்ட பேராசிரியர்கள் இல்லாததுமே மாணவர்கள் பல கல்லூரிகளில் இந்த துறையைச் சேர்க்காததற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
ஏனென்றால், தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒவ்வொரு நாளும் புதுப்புது அப்டேட்கள் வந்து கொண்டிருக்கிறது. ஏஐ தொழில்நுட்பத்திலும் இதன் தாக்கம் எதிரொலிக்கிறது. இதனால், இதுபற்றிய போதிய தொழில்நுட்ப அறிவு கொண்ட பேராசிரியர்கள் குறைவாக இருப்பதாகவும், அவர்களது பணியிடங்கள் கல்லூரிகளில் போதிய அளவில் நிரப்பப்படாததுமே இதற்கு காரணம் என்றும் பலரும் தெரிவித்துள்ளனர். அடுத்தடுத்த கலந்தாய்வு சுற்றில் இந்த இடங்கள் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பரிதாப நிலையில் சிவில் எஞ்ஜினியரிங்:
நடைபெற்று முடிந்த கலந்தாய்வில் மிக மோசமான நிலையை கட்டிட துறை எதிர்கொண்டுள்ளது. அதாவது, சிவில் எஞ்ஜினியரிங்கில் மொத்தம் 9 ஆயிரத்து 307 இடங்களுக்கு நடந்த கலந்தாய்வில் வெறும் 619 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். கம்ப்யூட்டர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன்ஸ் என்ஜினியரிங் படிப்பிலே முதற்சுற்று கலந்தாய்வில் அதிக மாணவர்கள் இணைந்துள்ளனர்.
நேற்று தொடங்கிய இரண்டாம் சுற்று கலந்தாய்வில் மொத்தம் 98 ஆயிரத்து 565 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். மொத்தம் 3 சுற்றுகளாக கலந்தாய்வு நடக்கிறது. பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு முழுமையாக முடிந்த பிறகு எப்படியும் 45 ஆயிரம் காலியிடங்கள் இருக்கும் என்று கணித்துள்ளனர்.





















