சிறுமிக்கு திருமணம்; கடைசி நேரத்தில் தடுத்து நிறுத்திய அதிகாரிகள் - மாப்பிள்ளை வீட்டாருக்கு எச்சரிக்கை
கும்பகோணத்தில் சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்.
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் 17 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை சமூக நலத்துறை அதிகாரிகள் போலீசாருடன் சென்று தடுத்து நிறுத்தினர். மேலும் மாப்பிள்ளை வீட்டாரையும் எச்சரிக்கை செய்து அனுப்பினர்.
சிறுமிக்கு திருமணம் நடத்த ஏற்பாடு
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கீழக்கொட்டையூரை சேர்ந்த சங்கர் என்பவரின் மகன் ராபின் (24) கூலித் தொழிலாளி. இவருக்கும் 17 வயது சிறுமிக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து நேற்று கும்பகோணத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அந்த 17 வயது சிறுமியுடன், திருமணம் நடக்க இருந்தது.
சமூக ஆர்வலர்கள் தகவல்
இந்நிலையில், சமூக ஆர்வலர்கள் 17 வயது சிறுமிக்கு கும்பகோணத்தில் திருமணம் நடத்த உள்ளனர் என்று சைல்டுலைனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சமூகநலத்துறை ஒருங்கிணைந்த சேவை மைய பணியாளர் நான்சி, சைல்டுலைன் மேற்பார்வையாளர் அஜிதா மற்றும் அதிகாரிகள் கும்பகோணத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் திருமண மண்டபத்திற்கு சென்று திருமணம் நடக்க இருந்ததை தடுத்து நிறுத்தினர்.
மாப்பிள்ளை வீட்டாரிடம் விசாரணை
பின்னர் கும்பகோணம் கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்துள்ளனர். தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் மற்றும் மாப்பிள்ளை வீட்டாரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் சிறுமியின் வயது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த 17 வயது சிறுமியை அதிகாரிகள் மற்றும் போலீசார் மீட்டனர்.
குழந்தைகள் நல குழுமத்தில் சிறுமி ஒப்படைப்பு
பிறகு சிறுமியை, தஞ்சாவூரில் உள்ள குழந்தைகள் நல குழுமத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக கும்பகோணம் கிழக்கு போலீசார், சிறுமியின் பெற்றோர், மாப்பிளை ஆகியோரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
மாப்பிள்ளை வீட்டாருக்கு எச்சரிக்கை
தொடர்ந்து மாப்பிள்ளை வீட்டாரை எச்சரிக்கை செய்து அனுப்பினர். மேலும் இதுபோன்ற திருமணங்களை நடத்தக்கூடாது. சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.