வாடகை வீட்டில் வாழும் அதிமுக MLA! அதுவும் 4,500 ரூபாய்தான் - இந்த காலத்துல இப்படியா?
கள்ளக்குறிச்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினரான செந்தில்குமார் ரூபாய் 4 ஆயிரத்து 500 வாடகையில் ஒரு வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது எளிமையை கண்டு பலரும் பாராட்டி வருகின்றனர்.

தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை எளிமை என்றால் காமராஜர், கக்கன் ஆகியோர் காலத்துடன் நிறைவு பெற்றதாகவே நமக்குத் தோன்றும்.
வாடகை வீட்டில் வசிக்கும் எம்.எல்.ஏ.
ஏனென்றால், தமிழக அரசியலைப் பொறுத்தவரை சாதாரண வார்டு கவுன்சிலராக இருப்பவர் கூட சொகுசு கார், வசதியான பங்களா என மிகப்பெரிய தோரணையிலே தமிழ்நாட்டில் உலா வருகின்றனர். அப்படி இருக்கும்போது சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பல கோடிகளின் அதிபதிகளே இருப்பது பற்றி நாம் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.
அப்படிப்பட்ட இந்த கால சூழலில், தமிழ்நாட்டில் வாடகை வீட்டில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் வசித்து வருகிறார் என்று கூறினால் நம்புவீர்களா? ஆம். அதிமுக-வின் சட்டமன்ற உறுப்பினர்தான் அந்த எளிமைக்குச் சொந்தக்காரர். கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பு வகிப்பவர் செந்தில்குமார்.
அதிமுக எம்.எல்.ஏ.:
கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்ட செந்தில்குமார் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மணிரத்னத்தை வீழ்த்தி சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார். 1, 10 ஆயிரத்து 643 வாக்குகள் பெற்றார்.
4,500 ரூபாய்:
எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்று 4 ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை அந்த தொகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அதுவும் வெறும் 4 ஆயிரத்து 450 ரூபாய் வாடகையில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். தான் எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் வாடகை வீட்டில் வசிப்பதால் தனக்கென தனியாக பெயர் பலகையோ, அந்த தெருவில் கட்சி பதாகைககளோ எதுவும் இல்லாமல் எளிமையாகவே இருந்து வருகிறார்.
இதுதொடர்பாக, கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. செந்தில்குமார் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, பெயர் பலகை வைக்கக்கூடாது என்று இல்லை. இது வாடகை வீடு. குடும்பம் என்பது வேறு, அரசியல் என்பது வேறு. தினசரி அலுவலகத்திற்கு சென்று விடுவேன். முழு நேரமும் அலுவலகத்திலே இருப்பதால் எனக்கு இங்கு பெயர் பலகை தேவைப்படவில்லை.
17 வருஷமாக வாடகை வீடு:
என் பிள்ளைகளுக்கு என்னை அப்பாவாகத்தான் தெரியும். எம்.எல்.ஏ.வாக தெரிந்துகொள்வதில் உடன்பாடில்லை. எம்.எல்.ஏ. ஆவதற்கு முன்பு இருந்து இந்த வீட்டில்தான் இருக்கிறேன். இந்த வீட்டில் 17 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறேன். திருமணத்திற்கு பிறகுதான் இந்த வீட்டிற்கு வந்தேன்.
எம்.எல்.ஏ.வாக நான் பிறக்கவில்லை. எம்.எல்.ஏ. இடையிலே வந்தது. மக்களுக்கு சேவை செய்ற ஒரு வாய்ப்பு. இது வீடு. இந்த வீடு எனக்கு பிடிச்சுருக்கு. எனது மனைவி கலைச்செல்வி. எந்த நேரமும் சுத்திகிட்டு இருக்கிறோம் என்றால் சோர்வு இல்லாமல் பார்த்துக் கொண்டவர் இவர்தான். சுற்றுவதற்கு சுதந்திரம் கொடுத்தது இவர்தான். அத்தைப் பொண்ணுதான். கல்யாணத்துக்கு பிறகுதான் காதலிக்குறோம்.
அம்மா கிரைண்டர்:
அம்மா கிரைண்டர்தான் பயன்படுத்திகிட்டு வருகிறோம். ஒவ்வொரு சீட்டும் முக்கியமானது. இந்த வீட்டில் பசங்க சிறு குழந்தைகளாக இருந்தபோது தெரிந்து கொள்ளவில்லை. இப்போ வளர்றாங்க. நானும் பையனும் சோஃபாவுல படுத்துக்குவோம். நாங்க ஜாலியாதான் இருக்கிறோம். எங்களுக்கு இது இனிமையான வாழ்க்கைதான்.
யதார்த்தத்தை பிள்ளைகளுக்கு சொல்லும் அப்பாதான் நான். என் மனைவி புரிஞ்சுக்குவாங்க. எப்பவுமே அப்பா இப்படிதான்னு காட்டிக்குவேன். எம்.எல்.ஏ. பதவி இல்லாதப்ப கூட்டத்துல வேலை செய்ற ஆளு. எம்.எல்.ஏ. பதவி இருக்குறப்ப கூட்டத்தை கூட்டிச்செல்லும் ஆளு. அவ்ளோதான் வித்தியாசம்.
காமராஜர், கக்கன்:
கிராமத்தில் உள்ள ஒரு பையனுக்கு, தொண்டன் கொடி நட்டுக்கொண்டிருக்கிறான், கோஷம் போட்ற ஒரு ஆளு, எந்தவொரு பொருளாதார பின்புலமும் இல்லாத ஒரு ஆளுக்கு பரவாயில்லை சீட்டு கொடு என்று நம்பிக்கை வைக்கிறார் என்றால் எடப்பாடி பழனிசாம எந்தளவு களத்தை புரிந்து வைத்துக்கொள்ளும் தலைவன் என்பதே அவரிடம் உணர்ந்து கொண்டேன். எம்.எல்.ஏ. இப்படி இருப்பாங்கனு கற்பனை பண்ணி, கற்பனை பண்ணியே கட்டமைச்சுட்டீங்க. தலைவரா இருக்கட்டும், கக்கன், ஜீவா, காமராஜர் இருந்துருக்காங்க.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த காலத்தில் வாடகை வீட்டில் எளிமையாக வசிக்கும் செந்தில்குமார் எம்.எல்.ஏ.வை பலரும் பாராட்டி வருகின்றனர்.





















