சச்சினும் இல்ல.. கோலியும் இல்ல.. லார்ட்ஸ் மைதானத்தை அலறவிட்ட இந்தியர் இவர்தான் - டாப் கிளாஸ் ப்ளேயரு!
IND vs ENG 3rd Test: லார்ட்ஸ் மைதானத்தில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற பெருமையை முன்னாள் இந்திய கிரிக்கெட் திலீப் வெங்க்சர்கார் தன்வசம் வைத்துள்ளார்.

IND vs ENG 3rd Test: இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை தொடங்குகிறது. இந்த தொடரில் இரு அணிகளும் 1-1 என்று சமநிலையில் இருப்பதால் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு தொடரை கைப்பற்றும் வாய்ப்பு பிரகாசம் ஆகும்.
லார்ட்ஸில் களமிறங்கும் இந்தியா:
போட்டி நடக்கும் லார்ட்ஸ் மைதானம் கிரிக்கெட்டின் தாயகம் என்றும், கிரிக்கெட்டின் மெக்கா என்றும் அழைக்கப்படுவதால் இந்த போட்டியில் வெற்றி பெறவே இரு அணிகளும் ஆர்வம் காட்டுவார்கள். லார்ட்ஸ் மைதானத்தைப் பொறுத்தவரை இந்திய அணி இந்த மைதானத்தில் 19 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளது. அதில் 12 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 4 போட்டிகளில் டிரா செய்துள்ளது.

லார்ட்ஸ் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவதையே பெரும் பாக்கியம் என்று கிரிக்கெட் வீரர்கள் கருதும் நிலையில், இந்திய அணியின் டெஸ்ட் ஜாம்பவான்களான கவாஸ்கர், கபில்தேவ், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், லட்சுமணன், விராட் கோலி, புஜாரா ஆகியோர் விளையாடியுள்ளனர்.
அதிக ரன்கள் எடுத்தது யார்?
இந்த மைதானத்தில் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர் யார்? என்ற கேள்விக்கு சச்சினோ, கோலியோ, ராகுல் டிராவிட்டோ பதிலாக இருக்கும் என்று கருதினால் அது தவறு என்பதே பதில்.

இந்திய அணிக்காக லார்ட்ஸ் மைதானத்தில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை திலீப் வெங்சர்கார் தன்வசம் வைத்துள்ளார். 1979ம் ஆண்டு முதல் 1990ம் ஆண்டு வரை டெஸ்ட் போட்டிகள் ஆடியுள்ள வெங்க்சர்கார் லார்ட்ஸ் மைதானத்தில் 4 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். 4 டெஸ்ட் போட்டிகளில் 508 ரன்கள் விளாசியுள்ளார். அதில் 3 சதங்கள், 1 அரைசதம் அடங்கும். அதிகபட்சமாக 157 ரன்கள் எடுத்துள்ளார். லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி முதன்முதலில் பெற்ற வெற்றி இவர் அடித்த சதத்தின் உதவியாலே பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. வெங்க்சர்கார் மொத்தம் 116 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 6 ஆயிரத்து 868 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 17 சதங்கள், 35 அரைசதங்கள் விளாசியுள்ளார். 129 ஒருநாள் போட்டிகளில் ஆடி 1 சதம், 23 அரைசதங்களுடன் 3 ஆயிரத்து 508 ரன்கள் எடுத்துள்ளார்.
சச்சின், கோலிக்கு ராசியில்லாத லார்ட்ஸ்:
அவருக்கு அடுத்த இடத்தில் ராகுல் டிராவிட் உள்ளார். அவர் இங்கு 4 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 354 ரன்கள் எடுத்துள்ளார். அதி்ல் 1 சதம் மற்றும் 2 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்சமாக 103 ரன்கள் ஆட்டமிழக்காமல் எடுத்துள்ளார். இந்த மைதானத்தில் இந்தியாவைச் சேர்ந்த 12 வீரர்கள் மட்டுமே சதம் விளாசியுள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள், சதம் விளாசியுள்ள சச்சின் டெண்டுல்கரே இந்த லார்ட்ஸ் மைதானத்தில் சதம் விளாசியதில்லை. ரன் மெஷின் என்று போற்றப்படும் விராட் கோலி இந்த மைதானத்தில் சதம் விளாசியதில்லை.
அசத்துவார்களா இந்தியர்கள்?
நடப்பு இந்திய அணியில் இந்த மைதானத்தில் சதம் விளாசிய ஒரே இந்திய வீரர் கே.எல்.ராகுல் மட்டுமே ஆவார். இந்திய அணியின் பேட்ஸ்மேன்களான ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சுப்மன்கில், ஜடேஜா, ரிஷப்பண்ட் நல்ல ஃபார்மில் இருப்பதால் இந்த போட்டியிலும் அவர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.




















