EPS : ‘திமுகவினர் வீட்டிற்கு வந்தால் நம்பாதீர்கள்’ விழுப்புரத்தில் Vibe செய்த எடப்பாடி பழனிசாமி..!
’வீட்டிற்கு வரும் திமுகவினரிடம் போன் நம்பரை மட்டும் கொடுத்துவிடாதீர்கள். நீங்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் எல்லாவற்றையும் சுருட்டிக் கொண்டு போய்விடுவார்கள்’ எடப்பாடி பழனிசாமி

மக்களை காப்போம் ; தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் 234 தொகுதிகளிலும் முதல் ஆளாக சுற்றுப்பயணத்தை தொடங்கியிருக்கிறார் எடப்பாடி. கோவை மாவட்டத்தில் தொடங்கிய சுற்றுப்பயணத்தில் திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். இந்நிலையில், இன்று விழுப்புரத்தில் தன்னுடைய பிரச்சாரத்தை அவர் மேற்கொண்டார் அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி உள்ளிட்டோரை கடுமையாக தாக்கி பேசிய எடப்பாடி பழனிசாமி, தற்போது தமிழ்நாட்டில் நடப்பது குடும்ப ஆட்சி என்றும் 2026ல் அதிமுக தலைமையில் அமையும் ஆட்சிதான் உண்மையான மக்கள் ஆட்சி என்றும் குறிப்பிட்டார்.
திமுகவினரை நம்பாதீர்கள் – Vibe செய்த EPS
திரளான மக்கள் மத்தியில் பேசிக்கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி திடீரென திமுகவின் ஒரணியில் தமிழ்நாடு நோட்டீசை எடுத்துக் கையில் வைத்துக்கொண்டு, ’இப்படி நோட்டீசை தூக்கிக்கொண்டு திமுகவினர் வீடு வீடாக வருவார்கள். அவர்களை நம்பாதீர்கள். உங்கள் குறைகளை போக்குவதாக சொல்வார்கள் அதையும் நம்பி ஏமாறாதீர்கள். நான்கரை ஆண்டுகாலம் உங்கள் குறைகளை, புகார்களை போக்காத திமுகவினரா தேர்தல் வரவிருக்கிற இந்த 6 மாதத்தில் போக்கிவிடுவார்கள்? அதனால் அவர்களை நம்பி மோசம் போய்விட வேண்டாம்’ என்று மக்கள் மத்தியில் பேசினார்.
அதோடு, ’திமுகவினர் வீட்டிற்கு வந்து உங்கள் போன் நம்பரை கேட்டால், அதை மறந்தும் கூட கொடுத்துவிடாதீர்கள். கொடுத்தீர்கள் என்றால் போச்சு. உங்களுக்கு போன் செய்வார்கள். நீங்கள் வெளியில் இருக்கின்றீர்கள் என்று சொல்லிவிட்டால். உங்கள் வீடு புகுந்து இருப்பதை சுருட்டிக்கொண்டு திமுகவினர் ஓடிவிடுவார்கள் என்று எடப்பாடி பழனிசாமி பேச, அங்கு கூடியிருந்தவர்கள் அதனை கேட்டு சிரித்து ஆரவாரம் செய்தனர்.
கண், காது, மூக்கு வைத்து ஸ்டாலின் பேசுகிறார் – இபிஎஸ்
இந்து சமய அறநிலையத்துறை நிதியில் இருந்து கல்லூரிகளே தொடங்க வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. ஆனால், அந்த துறை நிதியை எடுத்து கல்லூரிக்கு பயன்படுத்தினால், கட்டமைப்பு உள்ளிட்ட விரிவாக்கத்திற்கு உடனடியாக நிதி கிடைக்காது. இதனால், மாணவர்கள் சிரமப்படுவார்கள். அதானால்தான் அரசே நேரடியாக கல்லூரி தொடங்க வேண்டும் என்று சொன்னேன். ஆனால், இதை கூட புரிந்துக்கொள்ளாமல், நான் பேசியதை அரசியலாக்கி, கண், காது, மூக்கு வைத்து ஸ்டாலின் பேசுகிறார் என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
மேலும், மு.க.ஸ்டாலினின் தந்தையான கருணாநிதிக்கு கடலில் சிலை வைக்க நிதி இருக்கிறது, அவரது மகன் உதயநிதி கார் ரேஸ் நடத்த பணம் இருக்கிறது. ஆனால், புதிய கல்லூரிகளை தொடங்க அரசு கஜானாவில் பணம் இல்லையா ? என்று கேட்ட எடப்பாடி பழனிசாமி, அரசு கஜானா காலியாகிவிட்டதா ? என்று முதல்வர் மு.க.ஸ்டாலினை நோக்கி கேள்வியை எழுப்பியுள்ளார்.
உங்களுடன் ஸ்டாலின் இல்லை – மக்களுடன் நான் இருக்கிறேன் – EPS
அதே நேரத்தில் உங்களுடன் ஸ்டாலின் என்று துண்டு சீட்டை திமுகவினர் கொடுக்கின்றார்கள். அவர் உங்களுடன் இல்லை. ஆனால், நான் உங்கள் மத்தியில் தான் இருக்கிறேன். அதனால், மக்களுடன் EPS என்றும் எடப்பாடி பழனிசாமி பேசியதுடன், அதிமுக ஆட்சியில் செய்த திட்டங்களையும் பட்டியல் போட்டு விழுப்புரத்தில் பேசினார். மேலும், சிறுபான்மையினருக்கு 30 ஆண்டுகளாக பாதுகாப்பு கொடுத்தது அதிமுக ஆட்சிதான் என்றும், திமுக ஆட்சியில் சிறுபான்மையினரின் பாதுகாப்பு கேள்வி குறியாகிவிட்டது என்றும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.





















