பின்னால் வந்த அரசு பஸ்சை கவனிக்காமல் ரிவர்ஸ் எடுத்ததால் விபத்து... பள்ளிக்குழந்தைகள் 21 பேர் காயம்
பள்ளி வேன் ரெங்கம்மாள் சத்திரம் என்ற இடத்தில் சில குழந்தைகளை இறக்கிவிட்டு வேனை டிரைவர் பின்னால் இயக்கி திருப்பிக் கொண்டு இருந்தார்.

தஞ்சாவூர்: புதுக்கோட்டை அருகே தனியார் பள்ளி வேனை பின்பக்கமாக திரும்பும்போது அரசு பஸ்சுடன் மோதிய விபத்தில் 21 குழந்தைகள் படுகாயமடைந்தனர். உடன் குழந்தைகள் அனைவரும் புதுக்கோட்டையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் முத்துடையான்பட்டியில் செயல்பட்டு வருகிறது ஒரு தனியார் நர்சரி பள்ளி. இப்பள்ளியிலிருந்து நேற்று மாலை வகுப்பு முடிந்து 30 குழந்தைகளை வீட்டில் கொண்டு விடுவதற்காக பள்ளிவேன் சென்றுள்ளது.
அந்த பள்ளி வேன் ரெங்கம்மாள் சத்திரம் என்ற இடத்தில் சில குழந்தைகளை இறக்கிவிட்டு வேனை டிரைவர் பின்னால் இயக்கி திருப்பிக் கொண்டு இருந்தார். அப்போது பின்னால் திருச்சியில் இருந்து அறந்தாங்கி நோக்கி சென்ற அரசு பேருந்து பள்ளி வாகனத்தின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் பள்ளி வேனில் இருந்த 21 குழந்தைகள் காயமடைந்தனர்.
உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அந்த குழந்தைகளை மீட்டு ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் வாகனங்கள் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது அவ்வழியாக வந்த திருக்கோகர்ணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சியாமளாவும் தனது வாகனத்தில் காயமடைந்த குழந்தைகளை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
தொடர்ந்து காயமடைந்த குழந்தைகளுக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் முதற்கட்ட விசாரணையில் தனியார் பள்ளி வேன் ஓட்டுநர் பின்னால் பேருந்து வருவதை கவனிக்காமல் வேனை இயக்கியதே இந்த விபத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.
இதற்கிடையில் விபத்து குறித்து அறிந்த புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அருணா உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து காயமடைந்த குழந்தைகளை பார்வையிட்டு ஆறுதல் கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உயரிய சிகிச்சை வழங்க வேண்டும் என மருத்துவர்களை கேட்டுக்கொண்டார். இச்சம்பவம் புதுக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

