America Vs Russia Vs Ukraine: போரை நிறுத்த விரும்பாத ரஷ்யா; ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவு - உக்ரைனுக்கு அடித்த யோகம்
போர் நிறுத்தத்திற்கு ரஷ்யா ஒப்புக்கொள்ளாத நிலையில், உக்ரைனுக்கு அது சாதகமாகவே அமைந்துள்ளது. ஆம், ட்ரம்ப் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார். அது என்ன தெரியுமா.?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதினுடன் பேசிய நிலையில், அவர் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ளாததால், உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்க ட்ரம்ப் முடிவெடுத்துள்ளார். அது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.
உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க ட்ரம்ப் முடிவு
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் தொலைபேசி வாயிலாக பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உக்ரைனுக்கு கூடுதலாக பேட்ரியாட் ஏவுகணை பேட்டரிக்கள் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து நேற்று பேசிய ட்ரம்ப், ஜெலன்ஸ்கியுடனான பேச்சுவார்த்தை நன்றாக இருந்ததாக தெரிவித்தார். அப்போது, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, வான் பாதுகாப்புக்கான பேட்ரியாட் அமைப்பை கேட்டிருப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், அவர்கள் கடுமையாக தாக்கப்படுவதால், அவர்களின் பாதுகாப்பிற்கு அது தேவைப்படுவதாக கூறினார்.
அதோடு, அமெரிக்க தயாரிப்பான வான் பாதுகாப்பு அமைப்பு அற்புதமாக உள்ளதாக தெரிவித்தார்.
பின்னர், போர் நிறுத்தம் குறித்து பேசிய ட்ரம்ப், சூழல் மிகவும் கடினமாக இருப்பதாகவும், புதின் போரை தொடர்ந்து நடத்தி, மக்களை கொல்லவே விரும்புவதாகவும், அது நல்லதல்ல என்றும் கூறினார்.
ஜெலன்ஸ்கியின் பதிவு என்ன.?
இதனிடையே, ட்ரம்ப் உடன் பேசியது குறித்த சமூக ஊடகத்தில் பதிவிட்ட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், இருவரும் உக்ரைனின் வான் பாதுகாப்பை அதிகரிக்க ஒப்புக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இருநாடுகளும் இணைந்து, கூட்டுறவு கொள்முதல் மற்றும் முதலீட்டுடன் கூட்டு பாதுகாப்பு உற்பத்தி மேற்கொள்வது குறித்தும் விவாதித்ததாக ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
முன்னதாக ட்ரம்ப் தெரிவித்தது என்ன.?
ரஷ்யா உடனான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்தவில்லை என்று ட்ரம்ப் கூறியிருந்தார். உக்ரைனுக்கு ஆயுதம் வழங்குவது குறித்து, முந்தைய ஜோ பைடன் அரசை விமர்சித்திருந்த ட்ரம்ப், அவர் தங்கள் நாட்டின் தேவைக்கே பற்றாக்குறை ஏற்படும் அளவிற்கு ஆயுதங்களை வழங்கியதாக குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், நாட்டின் தேவைக்கு வைத்துக்கொண்டு, அதிகப்படியாக உள்ள ஆயுதங்களையே உக்ரைனுக்கு தங்கள் அரசு வழங்குவதாக ட்ரம்ப் கூறியிருந்தார். உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி, அவர்களுக்கு உதவ நாங்கள் முயன்று வருகிறோம் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் ரஷ்ய அதிபர் புதினிடம் பேசிய ட்ரம்ப், நேற்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் பேசியுள்ளார். அதைத் தொடர்ந்து தான், தற்போது உக்ரைனின் தேவையை அவரே உணர்ந்து, கூடுதல் ஆயுதங்களை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
இதனால், உக்ரைனுக்கு நல்ல காலம் பிறந்தது என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால், ரஷ்யாவின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதை சமாளிக்க அமெரிக்காவின் உதவி நிச்சயம் தேவைப்படும். அது தற்போது கிடைத்துள்ளது.





















