India Vs America: அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க தயாராகும் இந்தியா; உலக வர்த்தக மையத்திடம் கூறியது என்ன தெரியுமா?
வரி விவகாரத்தில், அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது. ஆம், அப்படித்தான் உலக வர்த்தக மையத்தில் இந்தியா கூறியுள்ளது. அதன் முழு விவரங்களை பார்க்கலாம்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தங்கள் நாட்டிற்கு பல்வேறு நாடுகளும் அதிக வரியை விதிப்பதாகக் கூறி, பதிலுக்கு தாங்களும் வரி விதிப்போம் எனக் கூறி, பரஸ்பர வரிகளை அறிவித்தார். அதன் பிறகு, அந்த வரி விதிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், வரும் 9-ம் தேதி கால அவகாசம் நிறைவடைகிறது. இந்நிலையில், அவசரப்பட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளாமல், அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது. அது குறித்த முழு விவரங்களை தற்போது காணலாம்.
“அமெரிக்காவிற்கு பதில் வரி விதிப்போம்“
அமெரிக்கா இந்தியா மீது விதித்த கூடுதல் வரிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள், வாகன உதிரி பாகங்கள் மீது பதில் வரி விதிக்க உள்ளதாக, உலக வர்த்தக மையத்தில் இந்தியா தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த கூடுதல் வரிக்கு பதிலடியாக, உலக வர்த்தக மையத்தின் விதிகளுக்கு உட்பட்டு, அமெரிக்கா மீது 6,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வரி விதிக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பரஸ்பர வரி விதித்து ஒத்திவைத்த ட்ரம்ப்
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டொனால்ட் ட்ரம்ப், தங்கள் நாட்டின் மீது அதிக வரிகள் விதிக்கப்படுவதாக தெரிவித்தார். குறிப்பாக இந்தியா போன்ற நாடுகள் தங்கள் மீது பெரும் அளவில் வரி விதிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
அதோடு நில்லாமல், பல்வேறு நாடுகளுக்கும் கூடுதல் வரிகளை விதித்தார். அதில், இந்தியாவிற்கு 26 சதவீத வரிவை விதித்தார். எனினும், பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதற்கு ஏதுவாக, சீனாவைத் தவிர மற்ற நாடுகளுக்கான வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து, பல்வேறு நாடுகளும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அதில், நட்பு நாடு என்ற அடிப்படையில், இந்தியாவிற்கு முக்கியத்துவம் கொடுத்து, பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
இந்தியாவுடன் விரைவில் பெரிய ஒப்பந்தம் ஏற்படும் என்று சமீபத்தில் ட்ரம்ப் கூறிய நிலையில், வாஷிங்டனில் முகாமிட்டு பேச்சுவார்த்தை நடத்திவந்த இந்திய அதிகாரிகள் குழுவும் நாடு திரும்பி, விரைவில் ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தது.
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியது என்ன.?
ட்ரம்ப்பின் காலக்கெடு முடிவடையும் வரும் 9-ம் தேதிக்குள் அமெரிக்கா உடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுமா என்று எதிர்பார்ப்பு எழுந்திருந்த நிலையில், நேற்று இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், வர்த்தக ஒப்பந்தம், இரு நாடுகள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும், இந்தியாவின் நலனை உறுதி செய்யப் கூடியதாகவும் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நாட்டின் நலனே எப்போதும் முக்கியம் என்றும், அதனை மனதில் வைத்து, சிறந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள முன்வந்தால், வளர்ந்த நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், பரஸ்பர நலனுடன் இருந்தால் மட்டுமே, தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் சாத்தியமாகும் என்று கூறியுள்ள அவர், காலக்கெடு அல்லது அழுத்தங்களின் அடிப்படையில் ஒப்பந்தம் மேற்கொள்ள மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நன்கு முதிர்ச்சியடைந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, நாட்டின் நலன் உறுதியாகும்போது மட்டுமே வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வோம் என்றும் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
அவரது இந்த கருத்தையும், உலக வர்த்தக மையத்தில் இந்தியா தெரிவித்துள்ள பதிலையும் பார்க்கும் போது, அமெரிக்கா உடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.





















