Thackeray Brothers Reunite: 20 ஆண்டுகளாக பிரிவு; தாக்கரே சகோதரர்களை இணைத்த மொழிப்பற்று - மகாராஷ்டிரா அரசியலில் திருப்பம்?
மகாராஷ்டிராவில், 20 ஆண்டுகளாக பிரிந்திருநத தாக்கரே சகோதரர்களை, மொழிப்பற்று இணைத்து வைத்துள்ளது. இதனால், அம்மாநில அரசியலில் பெரும் திருப்பம் ஏற்படுமா.? எப்படி இணைந்தார்கள்? பார்க்கலாம்.

மகாராஷ்டிராவில், இந்தி திணிப்பை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் வெற்றி பெற்ற தாக்கரே சகோதரர்கள், அதன் வெற்றிப் பேரணியில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே மேடையில் தோன்றி, மகாராஷ்டிரா அரசியலில் புதிய திருப்பம் ஏற்பட வழிவகுத்துள்ளனர். என்ன நடந்தது.? இந்த தொகுப்பில் காணலாம்.
தாக்கரே சகோதரர்களை இணைத்த மொழிப்பற்று
மகாராஷ்டிராவில், மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், 1-ம் வகுப்பு முதல் பள்ளிகளில் இந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக மாற்றியது பாஜக ஆளும் அம்மாநில அரசு.
இதையடுத்து, அரசின் இந்த உத்தவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே இருவரும், தங்கள் கட்சிகளின் சார்பாக, இந்தி எதிர்ப்புப் பேரணியை இன்று(05.07.25) நடத்துவதாக அறிவித்தனர். அவர்களுக்கு சரத் பவாரின் தேசியவாத காங்கிரசும் ஆதரவு தெரிவித்தது. இதையடுத்து, இன்று மும்பை ஆசாத் மைதானத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில், 20 ஆண்டுகளுக்குப் பின் ஒரே மேடையில் இருவரும் தோன்றினர்.
உத்தரவை நிறுத்தி வைத்த மகாராஷ்டிர அரசு
இதனிடையே, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பைக் கண்ட மகாராஷ்டிர அரசு, பள்ளிகளில் இந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக பயிற்றுவிக்கும் உத்தரவை நிறுத்தி வைத்தது.
“பால் தாக்கரே செய்ய முடியாததை பட்னாவிஸ் செய்துவிட்டார்“
மும்பையில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய ராஜ் தாக்கரே, சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவால் செய்ய முடியாத ஒன்றை, தேவேந்திர பட்னாவிஸ் செய்து விட்டார் என கூறினார். அதாவது, தன்னையும், தனது சகோதரர் உத்தவ் தாக்கரேவையும் அவர் இணைத்து விட்டதாக கூறினார் ராஜ் தாக்கரே. மேலும், மராட்டியத்தில் இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.
அதோடு, உத்தரபிரதேசம், பீகார், ராஜஸ்தானுக்கு மூன்றாவது மொழி என்ன என கேள்வி எழுப்பி அவர், இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள மக்கள் மிகவும் பின்தங்கியுள்ளதாகவும், அவர்கள் இந்தி பேசாத மாநிலங்களுக்கு புலம்பெயர்ந்து வருவதாகவும் குறிப்பிட்டதோடு, அவர்களின் வளர்ச்சிக்கு இந்தி ஏன் உதவவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும், இந்தி பேசாத மாநிலங்கள் மிகவும் வளர்ச்சி அடைந்துள்ளபோது, இந்திக்கு இங்கு என்ன தேவை உள்ளது என்றும், மூன்றாம் மொழிக்கு இந்தியாவில் என்ன தேவை உள்ளது என்றும் கேட்டார்.
மகாராஷ்டிராவில் மராட்டியத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் என்றும், ஆனால், பாஜக இந்தியை திணிப்பதாகவும் ராஜ் தாக்கரே குற்றம்சாட்டினார். மராட்டியத்திலிருந்து மும்பையை பிரிக்க சதி நடப்பதாகவும், இந்தியா முழுவதும் மராட்டி பேரரசர்கள் ஆட்சி செய்தபோது, மராத்தியை திணிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
“ஒன்றாக ஆட்சிக்கு வருவோம்“
ராஜ் தாக்கரேவைத் தொடர்ந்து பேசிய உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரேவும் தானும் ஒன்றுபட்டுள்ளதாகவும், ஒன்றாகவே ஆட்சிக்கு வருவோம் என்றும் தெரிவித்தார். தாங்கள் இருவரும் ஒன்றாக இருப்பதாகவும், அந்த மேடை தங்கள் உரைகளை விட முக்கியமானது என்றும் கூறிய அவர், ராஜ் தாக்கரே ஏற்கனவே மிகச் சிறந்த உரையை நிகழ்த்திவிட்டதால், தான் பேச வேண்டிய அவசியமில்லை என்று கூறினார்.
மகாராஷ்டிரா அரசியலில் திருப்பம் ஏற்படுமா.?
மகாராஷ்டிராவில், சிவ சேனா பலம்வாய்ந்த கட்சியாக இருந்த நிலையில், அக்கட்சியில் மிகுந்த செல்வாக்கோடு இருந்தவர், பால் தாக்கரேவின் சகோதரர் ஸ்ரீகாந்த் தாக்கரேவின் மகனான ராஜ் தாக்கரே. கடந்த 2005-ல், சிவசேனா கட்சியின் அடுத்த வாரிசு யார் என்பதில் பிரச்னை ஏற்பட்டு, ராஜ் தாக்கரே கட்சியை விட்டு வெளியேறினார்.
தொடர்ந்து, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா என்ற தனிக் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். இதனால், சிவ சேனாவின் பலம் குறைந்ததுடன், உத்தவின் ஆட்சியும் பறிபோனது. சகோதரர்களின் பிரிவு, மற்ற கட்சிகளுக்கு பலமாக அமைந்தது.
இந்த நிலையில், 20 வருடங்களுக்குப் பின் அவர்கள் மீண்டும் இணைந்துள்ளதால், மகாராஷ்டிரா அரசியலில் திருப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாக, அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.





















