ஆதர்ஷ் சொசைட்டி நிறுவனத்தில் முறைகேடு - முதலீட்டாளர்கள் தஞ்சை ஆட்சியரிடம் மனு
’’சில மாதங்களுக்கு பிறகு கொடுத்த பணத்திற்கு எதுவும் கிடைக்கவில்லை. இது குறித்து கேட்ட போது, சொசைட்டில் கலைக்கப்பட்டு விட்டது என அலட்சியமாக பதில் தெரிவிக்கின்றனர் என புகார்’’
ஆதர்ஷ் சொசைட்டியில் நடைபெற்ற முறைகேடு காரணமாக முடங்கிய முதலீட்டுத் தொகையைத் திரும்பப் பெற்றுத் தர வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், அலுவலர்கள், ஆலோசகர்கள் உள்ளிட்டோர் முறையிட்டனர். தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர் நாள் கூட்டத்தில், ஆதர்ஷ் சொசைட்டியில் தஞ்சாவூர் மற்றும் கும்பகோணத்தில் பணியாற்றிய அந்நிறுவனத்தின் அலுவலர்கள், ஆலோசகர்கள் மற்றும் வைப்புதாரர்கள் என சுமார் 25 பேர் கோரிக்கை மனு அளித்துள்ளனர். ஆதர்ஷ் கிரிடிட் கோ ஆபரேடிவ் சொசைட்டி நாடு முழுவதும் 800 க்கும் அதிகமான கிளைகளைக் கொண்டுள்ளது. இதில், தமிழ்நாட்டில் மட்டும் 27 கிளைகள் உள்ளன. இவற்றில் தஞ்சாவூரிலுள்ள கிளையில் ஏறத்தாழ 3,000 பேர் சுமார் ரூ. 15 கோடியும், கும்பகோணம் கிளையில் 920 பேர் ரூ. 5 கோடியும் மாதாந்திர சேமிப்பு, தினசரி சேமிப்பு, கூட்டு வட்டி வழங்கும் வைப்புத் தொகை, மாதாந்திர வருமான வைப்புத் தொகை, பங்குத்தொகை, முதலீடு, சேமிப்புக் கணக்கு போன்ற வகைகளில் முதலீடு செய்துள்ளனர்.
இவர்களில் ஓய்வூதியர்கள், மூத்தக்குடிமக்கள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர். ஒவ்வொருவரும் 50,000 முதல் 1 கோடி வரை செலுத்தியுள்ளனர். வைப்புதாரர்களுக்கு முதிர்வு தொகையும், பங்கு ஈவுத்தொகையும் கிடைத்து வந்த நிலையில், இந்த சொசைட்டி பல்வேறு காரணங்களால் 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கலைக்கப்பட்டது. அதிலிருந்து நாடு முழுவதும் உள்ள 21 லட்சம் வைப்புதாரர்களுக்கு இரு ஆண்டுகளாக முதிர்வு தொகையும், பங்கு ஈவுத் தொகையும் வழங்கப்படவில்லை.இதனால், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வைப்புதாரர்களும் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். எனவே, சொசைட்டியிலிருந்து வர வேண்டிய முதலீட்டுத் தொகைகளைப் பெற்றுத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்துள்ளனர்.
இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், ஆதர்ஷ் கிரிடிட் கோ ஆபரேடிவ் சொசைட்டியில் வைப்புத்தொகையாக பணம் செலுத்தினால், முதிர்வு பணம், ஈவுதொகை உள்ளிட்டவைகள் கிடைக்கும் என ஆசை வார்த்தைகளை கூறியதால், பணம் செலுத்தினோம். ஆனால் சில மாதங்களுக்கு பிறகு கொடுத்த பணத்திற்கு எதுவும் கிடைக்கவில்லை. இது குறித்து கேட்ட போது, சொசைட்டில் கலைக்கப்பட்டு விட்டது என அலட்சியமாக பதில் தெரிவிக்கின்றனர். இதில் முதியவர்கள், ஒய்வுபெற்றோர், விவசாயிகள், பெண்கள் என அனைவரும் பணம் செலுத்தியுள்ளதால், நாங்கள் கொடுத்த பணம் கிடைக்குமா என்பது கேள்வி குறியாகியுள்ளது. நாங்கள் சிறுக சிறுக சேமித்த பணத்தை செலுத்தினால், அதனை வழங்காமல் இருப்பது வேதனைக்குரிய விஷயமாகும். இதனால் எங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம், எங்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், நாங்கள் செலுத்திய பணத்தை மீட்டு தர வேண்டும் என்றனர்.