EPS Vs Stalin: நான் உண்மையான விவசாயியா.? நீங்க உண்மையான விவசாயியா.? ஸ்டாலினுக்கு இபிஎஸ் சரமாரி கேள்வி
உண்மையான விவசாயி நானா அல்லது நீங்களா என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமீபத்தில் நிகழ்வு ஒன்றில் பேசியபோது, சிலர் தோளில் பச்சை துண்டு போட்டு, விவசாயி எனக் கூறி மக்களை ஏமாற்றுவதாக விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள எடப்பாடி பழனிசாமி, யார் உண்மையான விவசாயி என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். அதோடு, நீங்கள்தான் போலி விவசாயி என்பதை மக்கள் அறிவார்கள் என்றும் விமர்சித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே, கடந்த 11-ம் தேதி நடைபெற்ற அரசு விவசாய கண்காட்சி விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிமுக ஆட்சியையும், எடப்பாடி பழனிசாமியையும் சூசகமாக விமர்சித்திருந்தார். அதாவது, அதிமுக ஆட்சியில் விவசாயிகள் ஒவ்வொரு விஷயத்திற்கும் போராட வேண்டியிருந்ததாக அவர் கூறியிருந்தார்.
மேலும், சிலர் தோளில் பச்சை துண்டு போட்டு ஏமாற்றுவதுபோல் நாங்கள் போலி விவசாயிகள் அல்ல என்றும், எடப்பாடி பழனிசாமியை சூசகமாக குறிப்பிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் பேசியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக அறிக்கை வெளியிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தென் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைப் பூங்கா திட்டத்தை நிறைவேற்றாமல், விவசாயிகள் உபதொழில்கள் மூலம் வருவாய் ஈட்டுவதை தடுத்து, ஸ்டாலின் மாடல் அரசு அவர்களின் வயிற்றில் அடித்துள்ளதாக விமர்சித்துள்ளார்.
மேலும், மீத்தேன்-ஹைட்ரோ கார்பன் திட்டம், அத்திக்கடவு-அவினாசி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் முழுமை பெறாமல் உள்ளதாக குற்றம்சாட்டியுள்ள அவர், திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளபடி, கரும்பு டன் ஒன்றிற்கு 4 ஆயிரம் வழங்காதது, 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாகவும், சம்பளத்தையும் உயர்த்தி வழங்காதது, ஏரி, குளங்கள் பாதுகாக்கப்படும் என்ற அறிவிப்பை நிறைவேற்றாதது போன்றவற்றை சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், திமுக அரசு போதிய நேரடி நெல் கொள்முல் நிலையங்கள் அமைக்காததால், விவசாயிகள் தங்கள் வியர்வையை சிந்தி விளைவித்த நெல், மழையில் நனைந்து வீணானது என்றும், இன்னும் வீணாகிக் கொண்டிருக்கிறது என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
“யார் உண்மையான விவசாயி.?“
அதோடு, தலைவாசலில் கரும்புத் தோட்டத்தில் கான்கிரீட் சாலையில் கோட் சூட் அணிந்து நடந்து சென்ற போலி விவசாயி நான் அல்ல என்று கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி, பிறந்தது முதல் இன்றுவரை தனது குடும்பம் விவசாய குடும்பம் என்றும், தான் ஒரு விவசாயி என்பதை பெருமையாக கூறுவதோடு, இன்றும் விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
தான், விவசாயிகளின் கஷ்டங்களை முழுமையாக அறிந்தவன் என்றும், விவசாயத்தை பற்றி ஒன்றும் தெரியாத, விவசாயிகளின் கஷ்டத்தையும், வியர்வையையும், வேதனையும் அறியாத ஒரே முதலமைச்சர், விளம்பரம் மூலம் ஆட்சி புரியும் ஸ்டாலின் மட்டுமே என சாடியுள்ளார்.
மேலும், “நான் உண்மையான விவசாயியா ? நீங்கள் உண்மையான விவசாயியா ? என ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ள அவர், நீங்கள்தான் போலி விவசாயி என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள் என ஸ்டாலினை விமர்சித்துள்ளார். அதோடு, தனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
“மக்கள் விரோத ஆட்சியை மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள்“
அதோடு, 2026-ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலின்போது, யார் உண்மையான விவசாயி என்பதையும், தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு பாடுபட்ட அதிமுக அரசை மனதில் நிறுத்தியும், தற்போது சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, பாலியல் வன்கொடுமை, போதைப் பொருள் நடமாட்டம், இந்தியாவிலேயே அதிக அளவு கடன் வாங்கி முதலிடத்தை பெற்றிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலினையும், தமிழக மக்கள் மனதில் சீர்தூக்கிப் பார்த்து, மக்கள் விரோத திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் போது, தமிழக மக்களின் எதிர்ப்பு என்ன என்பது உங்களுக்கு தெரியும் எனவும் ஸ்டாலின்கு பதிலளித்துள்ளார், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.





















