America to Attack Iran?: ஈரான் மீது தாக்குதலா.? G7 மாநாட்டிலிருந்து அவசரமாக கிளம்பிய ட்ரம்ப்; என்ன நடக்கப் போகுதோ.?
கனடாவில் நடைபெற்றுவரும் ஜி7 உச்சிமாநாடு முடிவதற்கு முன்பே, ட்ரம்ப் அவசரமாக கிளம்பியதால், ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கனடாவில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்றிருந்த ட்ரம்ப், மாநாடு முடிவதற்கு ஒரு நாள் முன்னதாகவே கிளம்பியதால் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. டெஹ்ரானை விட்டு அனைவரும் வெளியேறுங்கள் என்று அவர் ஏற்கனவே கூறிய நிலையில், ஜி7 மாநாட்டை பாதியில் முடித்துக்கொண்டு அவர் கிளம்பியதால், ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தப் போகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜி7 உச்சி மாநாட்டிலிருந்து ட்ரம்ப் பாதியில் கிளம்ப காரணம் என்ன.?
ஜி7 கூட்டமைப்பில், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் உள்ளன. ஜி7 உச்சி மாநாட்டை ஒவ்வொரு முறையும் கூட்டமைப்பில் உள்ள ஒவ்வொரு நாடும் தலைமையேற்று நடத்தும். அந்த வகையில், இந்த முறை, கனடா தலைமையில் ஜி7 உச்சி மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாடு ஏற்கனவே தொடங்கிய நிலையில், நாளை வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்றிருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஒரு நாள் முன்னதாகவே மாநாட்டை முடித்துக்கொண்டு அவசரமாக கிளம்பியுள்ளார்.
இந்த மாநாட்டின் போது, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், இஸ்ரேல்-ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை முன்வைத்ததாக கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தம் மற்றும், ஜி7 நாடுகளின் சார்பாக இஸ்ரேல்-ஈரான் மோதலை குறைப்பது தொடர்பாக முன்வைக்கப்பட்ட வரைவு அறிக்கையிலும் ட்ரம்ப் கையெழுத்திடாமல் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
எனினும், ட்ரம்ப் பாதியிலேயே கிளம்பியதற்கு, மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையே காரணம் என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரேலின் லீவிட் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதலா.?
ஜி7 மாநாட்டிலிருந்து அவசரமாக ட்ரம்ப் கிளம்பும் நிலையில், ஏற்கனவே, டெஹ்ரானை விட்டு ஈரான் மக்கள் உடனடியாக கிளம்புமாறு ட்ரம்ப் வலியுறுத்தியிருந்தார். அதோடு, அமெரிக்கா உடன் அணு ஆயுத ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட்டிருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஜி7 மாநாட்டின் போதும், ஈரானை ட்ரம்ப் குற்றம்சாட்டியதாக தெரிகிறது. இதையடுத்து, அவர் கிளம்புவதற்கு முன்னதாக, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலை, வெள்ளை மாளிகையின் சிச்சுவேஷன்(Situation) அறையில் தயாராக இருக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.
இதனால், ஒருவேளை ஈரான் மீது அமெரிக்காவும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன. ஏற்கனவே, கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஈரானை எச்சரித்து வருகிறார் ட்ரம்ப்.
இஸ்ரேலும், இந்த போருக்குள் அமெரிக்காவை இழுக்க முயற்சித்து வரும் நிலையில், ஜி7 மாநாட்டில் ட்ரம்ப்பின் செயல்கள் சந்தேகத்தையே எழுப்புகின்றன. இதனால், இஸ்ரேல்-ஈரான் போரில் அமெரிக்காவும் இணைந்தால், அது மிகப்பெரும் பேராக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.





















