Annamalai's Plan: கூட்டணிக்குள் குண்டு வைத்த அண்ணாமலை.!! அதிமுக-வை சீண்டும் வகையில் பேச்சு - உடைக்க திட்டமா.?
தான் விரும்பாத கூட்டணியை உடைக்க திட்டம் போடுகிறாரா அண்ணாமலை என்று கேட்கும் அளவிற்கு, சமீபத்தில் பேசியுள்ளார் அண்ணாமலை. அதிமுகவை அகற்ற அவர் முயற்சி செய்கிறாரா என்ற கேள்வி எழுந்தள்ளது.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அல்ல, பாஜக ஆட்சி தான் வரும் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இதனால், தான் விரும்பாத அதிமுக கூட்டணியை உடைக்க அவர் முயல்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அது குறித்து பார்க்கலாம்.
கோவையில் அண்ணாமலை பேசியது என்ன.?
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, அதிமுக-பாஜக தொகுதிப் பங்கீடு குறித்து பிரதமருக்கு தான் கடிதம் எழுதவில்லை என்றும், கட்சி முடிவுகள் பற்றி மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுவார் எனவும் தெரிவித்தார். மேலும், பாஜக-வின் வளர்ச்சிக்காக கடைசி வரை பாடுபடுவேன் என தெரிவித்த அவர், கட்சி எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன் என்றும் கூறினார்.
அதோடு, தமிழகத்தில் பாஜக கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என கூறிய அண்ணாமலை, தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அல்ல, பாஜக ஆடசி அமையும் என்று தெரிவித்தார். இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாமலை விரும்பாத கூட்டணி
ஏற்கனவே, தமிழ்நாட்டில் அதிமுக உடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது, அண்ணாமலை விரும்பாத ஒரு கூட்டணியாகும். ஏனெனில், அவர் பாஜக மாநிலத் தலைவராக இருக்கும் போது, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் மோதல் போக்கிலேயே இருந்து வந்தார்.
அதனால் தான், அதிமுக உடன் கூட்டணி அமைப்பதற்காகவே பாஜக தமிழ்நாடு தலைவரை மாற்றியது பாஜக மேலிடம். அதோடு, பாஜக மாநிலத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன், அந்த பதவிக்கு கடும் போட்டி நிலவியது.
பாஜக தமிழ்நாடு மூத்த தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் தலைவர் பதவிக்கான ரேஸில் குதித்தனர். அவரவர்கள் தங்கள் சக்திக்கேற்ப தலைமையிடம் மோதிய நிலையில், அதிமுக உடன் கூட்டணி அமைப்பதற்காக, அக்கட்சியுடனும், எடப்பாடி பழனிசாமியுடனும் இணக்கமாகவும், நெருக்கமாகவும் இருப்பவரையே தலைவராக நியமிக்க பாஜக தலைமை விரும்பியது.
அந்த வகையில் தான், எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக நிர்வாகிகளுடன் இணக்கமாக இருக்கும் நயினார் நாகேந்திரனுக்கு, பாஜக மாநிலத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.
எதிர்பார்த்தது போல் அமைந்த கூட்டணி
பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்ட உடன், சுமூகமாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, எதிர்பார்த்தது போல் அதிமுக உடன் கூட்டணி அமைக்கப்பட்டது.
பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா, நேரிலேயே வந்து, அவரே அதிமுக உடனான கூட்டணி குறித்து அறிவித்தார். அதைத் தொடர்ந்து தற்போது தேர்தல் வேலைகள் சூடுபிடித்துள்ளன. கூட்டணிக்குள் மேலும் சில கட்சிகளை இழுக்க திட்டமிடப்பட்டு வருவதாக தெரிகிறது. தற்போது தவெக-வையும் கூட்டணிக்குள் இழுக்க அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், கூட்டணி ஆட்சி என்ற வார்த்தையை அதிமுக தவிர்த்து வரும் நிலையில், கூட்டணி ஆட்சி என்று கூறிவரும் அண்ணாமலை, தற்போது அதற்கும் ஒருபடி மேலே போய், பாஜக அதிக இடங்களில் பேட்டியிட வேண்டு, 2026-ல் தமிழகத்தில் பாஜக ஆட்சி என்று தான் சொல்வேன் என்று கூறியுள்ளது பெரும் நெருப்பை பற்றவைத்துள்ளது.
இதற்கு அதிமுக எந்த மாதிரியான எதிர்வினையை ஆற்றப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.





















