TN Govt: தமிழ்நாடு அரசின் ஆடி மாத ஆஃபர் - இலவச சுற்றுலா, எங்கெங்கு? யாருக்கு? எப்படி விண்ணப்பிக்கலாம்?
TN Govt Spiritual Tour: தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை ஆடி மாதத்தில் அம்மன் திருக்கோயில்களுக்கு கட்டணமில்லா ஆன்மிகப் பயணத்தை அறிவித்துள்ளது.

TN Govt Spiritual Tour: தமிழ்நாடு அரசின் ஆடி மாத கட்டணமில்லா ஆன்மிகப் பயணத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
தமிழ்நாடு அரசின் ஆடி மாத ஆஃபர்:
ஆடி மாதத்தில் அம்மன் திருக்கோயில்களுக்கு கட்டணமில்லா ஆன்மிகப் பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்பை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், “தமிழ்நாட்டிலுள்ள புகழ்பெற்ற அம்மன் திருக்கோயில்களுக்கு ஆடி மாதத்தில் 2,000 பக்தர்கள் கட்டணமின்றி ஆண்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்பட உள்ளனர். ஆன்மிகப் பயணம் செல்ல விரும்பும் தகுதியுடைய பக்தர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணைந்து இந்த முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது.
எந்தெந்த தேதிகளில் பயணம்:
தமிழ்நாடு அரசின் ஆன்மீக பயணமானது வரும் ஜுலை மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, ஜுலை மாதத்தில் 18 மற்றும் 25 ஆகிய தேதிகளிலும், ஆகஸ்ட் மாதத்தில் 01, 08 மற்றும் 15 ஆகிய தேதிகளில் இந்த ஆன்மீக பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது.
எங்கிருந்து பயணங்கள் மேற்கொள்ளப்படும்?
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்களும் பயன்பெறும் வகையில், இந்த ஆன்மீக சுற்றுலா பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, தஞ்சாவூர், மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் இருந்து பயணங்கள் தொடங்கப்பட உள்ளன. சிறப்பு பேருந்துகள் மூலம் இந்த சுற்றுலா பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது.
ஆடி மாதத்தில் அம்மன் திருக்கோயில்களுக்கு கட்டணமில்லா ஆன்மிகப் பயணம்@CMOTamilnadu @mkstalin @Udhaystalin @mp_saminathan @PKSekarbabu @tnhrcedept @tntourismoffcl #TNDIPR #TNMediahub #CMMKStalin #DyCMUdhay #TNGovt #PeoplesGovt #TNGovtSchemes #CMOTamilnadu #peoplecm #TamilNadu pic.twitter.com/TOnfIue7ry
— TN DIPR (@TNDIPRNEWS) June 16, 2025
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
தமிழ்நாடு அரசின் ஆடி மாத ஆன்மீக பயணத்திற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என சில நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி,
- இந்து மதத்தினர்
- 60 முதல் 70 வயதுக்கு உட்பட்டவர்கள்
- ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்குள் கொண்டவர்கள் இந்த ஆன்மீக பயணத்திற்கு விண்ணப்பிக்கலாம்
அப்படி விண்ணப்பிப்பவர்களுக்கு உடல்நல சான்று, வருமான சான்று , ஆதார், பான் கார்ட் ஆகிய ஆவணங்கள் அவசியமாகும். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வரும் ஜுலை 11ம் தேதியுடன் முடிவடைகிறது.
கவனத்தில் கொள்ள வேண்டியவை
- பக்தர்கள் தங்களுடன் சிறு குழந்தைகளை அழைத்துவர அனுமதி இல்லை
- பக்தர்கள் ஒருமுறை மட்டுமே பயணத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்
- .ஆடிமாத ஆன்மிக பயணம் சென்னை, தஞ்சாவூர், மதுரை, திருச்சி, கோயமுத்தூர், திருநெல்வேலி மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதால் மற்ற ஊர்களிலிருந்து செல்லவிருப்பம் உள்ளவர்கள் பயணத்திட்டம் துவங்கும் நாளன்று மேற்கண்ட ஊர்களில் சென்று கலந்துகொள்ள சம்மதமிருப்பின் மேற்கண்ட ஊர்களில் உள்ள இணை ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப படிவம் மற்றும் தேவையான ஆவண விவரங்கள்
எப்படி விண்ணப்பிக்கலாம்?
தமிழ்நாடு அரசின் ஆடி மாத கட்டணமில்லா ஆன்மிகப் பயணத்திற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், WWW.hrce.tn.gov.in என்ற இந்துசமய அறநிலையத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியை அணுகவும். அல்லது மேலே வழங்கப்பட்டுள்ள லிங்கை அணுகி விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்து தேவையான விவரங்களை கொண்டு பூர்த்தி செய்யுங்கள். தொடர்ந்து எந்த ஊரில் இருந்து பயணம் மேற்கொள்ள விரும்புகிறீர்களோ, அந்த பகுதியை சேர்ந்த அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பியுங்கள். கூடுதல் விவரங்களை தொலைபேசி வாயிலாக பெற, 1800 425 1757 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்புகொள்ளுங்கள்.





















