களைகட்டும் விநாயகர் சதுர்த்தி! பூக்கள், பழங்கள், காய்கறிகள் விற்பனை படுஜோர் - வியாபாரிகள் ஹாப்பி
Vinayagar Chaturthi 2024: சுபமுகூர்த்த நாள் மற்றும் விநாயகர் சதுர்த்தி அடுத்தடுத்து வருவதால் தமிழ்நாடு முழுவதும் காய்கறிகள், பூக்கள் மற்றும் பழங்கள் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமான பண்டிகையாக கருதப்படுவது விநாயகர் சதுர்த்தி. தமிழ்நாட்டிலும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். வீடுகளில் விநாயகர் சிலைகள் வைத்தும், பழங்கள், பூக்கள், படையலிட்டும் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்வதும் இந்துக்களிடம் வழக்கமாக உள்ளது.
விநாயகர் சதுர்த்தி விற்பனை:
விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளதால் சந்தைகளுக்கு பூக்களும், பழங்கள் மற்றும் காய்கறிகள் வரத்து அதிகரித்துள்ளது. விநாயகருக்கு எருக்கம்பூ மற்றும் அருகம்புல் உகந்தது என்பதால் அவற்றின் வரத்து அதிகரித்துள்ளது.
மேலும், விநாயகர் சதுர்த்திக்கான வழிபாட்டில் விளாம்பழம், வாழைப்பழம், ஆப்பிள், மாதுளை, கொய்யா ஆகிய பழங்கள் இடம்பெறும் என்பதாலும் அந்த பழங்கள் உள்பட ஏராளமான பழங்களின் வரத்தும் சந்தைகளில் அதிகரித்துள்ளது. மேலும், விநாயகருக்கு கொழுக்கட்டை, கொண்டைக் கடலை முக்கியமான படையல் உணவுகள் என்பதால் கொண்டை கடலை, அவல், பொரி விற்பனையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விற்பனை படுஜோர்:
நாளை மறுநாள் விநாயகர் சதுர்த்தி என்பதால் தமிழ்நாட்டின் பெருநகரங்களான சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள முக்கிய சந்தைகளில் காய்கறிகள், பூக்கள், பழங்களின் வரத்து வழக்கத்தை விட அதிகளவில் நடைபெற்று வருகிறது.
பொதுமக்களும் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை ஆர்வத்துடன் மக்கள் வாங்கி வருகிறார்கள். விநாயகர் சதுர்த்தி மட்டுமின்றி நாளை சுபமுகூர்த்த நாள் என்பதால் காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்கள் விற்பனை தீவிரமாக நடைபெற்று வரகிறது. நாளை மறுநாள் மதியம் வரை விற்பனை படுஜோராக நடைபெறும் என்று வியாபாரிகள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர். மேலும், பூக்கள் மற்றும் பழங்களின் விலைகள் வழக்கத்தை விட அதிகரித்தும் காணப்படுகிறது.
வியாபாரிகள் மகிழ்ச்சி:
தென்மாவட்டங்களில் இருந்து தமிழ்நாடு முழுவதும் பூக்கள் ஏற்றுமதியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முக்கியமான சந்தைகளில் விற்பனை படுஜோராக நடைபெற்று வருவதாலும், தொடர்ந்து விற்பனை அதிகரிக்கும் என்பதாலும் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதாலும் அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மறுமுனையில் வீடுகளில் வைத்து வழிபடுவதற்காக சிறிய அளவிலான விநாயகர் சிலைகளும் தீவிரமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சுபமுகூர்த்தம், விநாயகர் சதுர்த்தி என அடுத்தடுத்து விசேஷங்கள் என்பதால் வழக்கத்தை விட பன்மடங்கு காய்கறிகள், பூக்கள் மற்றும் பழங்கள் விற்பனை அதிகரிக்கும் என்பதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.