Bihar Student | ”நான் முதல்வன் திட்டம்தான் காரணம்” தமிழில் 93 மதிப்பெண்! அசத்திய பீகார் மாணவி!
தமிழ்நாடு SSLC 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், பீகாரை சேர்ந்த மாணவி ஜியா குமார் தமிழில் 93 மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ள சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை பொழிச்சலூர் அடுத்த கவுல் பஜாரில் பீகாரை சேர்ந்த தனஞ்ஜே திவாரி- ரீனாதேவி தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மூன்று பெண் பிள்ளைகள் ரியா குமாரி, ஜியா குமாரி, சுப்ரியா குமாரி, இவர்கள் மூன்று பேரும் கவுல் பஜார் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். கடந்த 2009 ஆம் ஆண்டு தந்தை தமிழ்நாட்டிற்கு வேலை தேடி வந்துள்ளார்.
அப்போது முதல் தற்போது வரை வெல்டிங் வேலை செய்து வருகிறார். தாய் மருந்து நிறுவனம் ஒன்றில், பணிபுரிந்து வருகிறார். அடிக்கடி சொந்த ஊர் செல்ல சிரமமாக இருந்ததால் குடும்பத்துடன் இங்கேயே தங்கி அரசு பள்ளியில் பிள்ளைகளை சேர்ந்து தமிழ்வழிக் கல்வியில் படிக்க வைத்துள்ளார். இதில் இரண்டாவது மகளான ஜியா குமாரிஅரசு பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி பயின்று வருகிறார். நேற்று முன்தினம் வெளியான 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், ஜியா குமாரி தமிழில் எடுத்த மதிப்பெண் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
தமிழ்-93, ஆங்கிலம் -99, கணிதம்- 89, அறிவியல்- 87, சமூக அறிவியல்- 99 என மொத்தம் 467 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பீகாரை சேர்ந்த மாணவி ஜியா குமாரி தமிழில் 93 மதிப்பெண்கள் எடுத்திருப்பது சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது . இவருக்கு பல்வேறு் தரப்பினரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.





















