வேலையில்லா திண்டாட்டம் பற்றி அதிர்ச்சி ரிப்போர்ட்.. மத்திய அரசு விளக்கம்!
வேலையில்லா திண்டாட்டம் பற்றி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட கட்டுரைக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் வேலையின்மை தொடர்பாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகள் தவறானது என்று மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
வேலையில்லா திண்டாட்டம் பற்றி வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்:
புகழ்பெற்ற ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் கட்டுரையில் வெளியான செய்தியில் உண்மையான தரவுகள் குறித்த பகுப்பாய்வு எதுவும் மேற்கொள்ளப்படாமல் சில பெயரிடப்படாத பொருளாதார நிபுணர்களின் கருத்துக்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், இது போன்ற செய்திகள் அதிகாரப்பூர்வ மதிப்பீடுகளின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குரியாக்குவதாக உள்ளது என்றும், வேலைவாய்ப்பு குறித்த சூழலின் வலுவான, சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட, நம்பகத்தன்மையுடன் கூடிய தரவுகளுக்கு முரணாக உள்ளது என்றும் மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதிகாரப்பூர்வமானத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும், வினாக்களின் அமைப்பு, பயன்படுத்தப்படும் அளவீடுகள், தரவுகளை விளக்குவதற்கான தரநிலைகள், பகுப்பாய்வு போன்ற அம்சங்கள் குறித்து தெளிவாகக் குறிப்பதில்லை என்றும், இந்த செய்திகளை முற்றிலும் நிராகரிப்பதாகவும் அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு விளக்கம்:
வேலைவாய்ப்பின்மை தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களில் புள்ளிவிவரங்கள் அல்லது பொருளாதாரக் குறியீடுகள் குறித்த எவ்வித தரவுகளும் வழங்கப்படவில்லை. இது போன்ற செய்திகள் அந்த நிறுவனத்தின் மீதான நம்பகத்தன்மையைக் குழப்பத்துடன், அதன் மீதான குறைமதிப்பீடு செய்வதற்கும் வழி வகுக்கிறது என்றும் அந்த அமைச்சகம் கூறியுள்ளது.
இதற்கு நேர்மாறாக, மத்திய புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய புள்ளிவிவர அலுவலகம் நடத்தும் காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு, இந்தியாவில் வேலைவாய்ப்பு மற்றும் வேலையின்மை குறித்த தரவுகளின் அனுபவ மற்றும் புள்ளிவிவரங்கள் ரீதியிலான வலுவான ஆதாரமாக உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இது, நாடு முழுவதும் உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளை உள்ளடக்கிய ஒரு பெரிய அளவிலான, பல்லடுக்குகள் கொண்ட, மாதிரி கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டது. இறுதியாக, இந்தியாவின் வேலைவாய்ப்பு தொடர்பான புள்ளி விவரங்கள் விரைவான வளர்ச்சி கண்டு வரும் நாட்டின் முன்னேற்றத்தை எடுத்துக்காட்டும் வகையில் உள்ளது.
இவை, அதிகாரப்பூர்வ தரவுகள், பாரம்பரிய, வளர்ந்து வரும் துறைகளில் அதிகரித்து வரும் பங்கேற்பு, குறைந்து வரும் வேலையின்மை, அதிகரித்து வரும் வருவாய் மற்றும் விரிவடைந்து வரும் வாய்ப்புக்கள் போன்ற பல்வேறு அம்சங்களைத் தெளிவுபடக் குறிப்பதாக உள்ளன.





















