YouTuber Jyoti Malhotra |பாகிஸ்தானுக்கு SPY! கையும் களவுமாய் சிக்கிய பெண்! யார் இந்த ஜோதி மல்ஹோத்ரா?
பாகிஸ்தானுக்கு உளவுபார்த்ததற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார் ஹரியானாவைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா. யார் இவர்? இந்தியாவில் இருந்து கொண்டே பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தது எப்படி என்பதை பார்ப்போம்.
ஹரியானாவின் ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜோதி மல்ஹோத்ரா. பிரபல யூடியூபரான இவர் ட்ராவில் வித் ஜோ- என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இவருக்கு 3.8 லட்சம் subscribers இருக்கிறார்கள். பாகிஸ்தானுக்கு சென்ற பல வீடியோக்களையும் அவர் தன்னுடைய யுடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பிரபலமான யூடியூபராக வலம் வந்த இவருக்கு பாகிஸ்தானின் உயர் கமிசனில் முக்கிய அதிகாரிகளில் ஒருவரான டேனிஷ் என்ற எஹ்சான்-உர்-ரஹீம் என்பருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இவருடன் நெருங்கிய உறவில் இருந்த வந்த ஜோதி மல்ஹோத்ராவிற்கு பாகிஸ்தானின் உளவுத்துறையில் இருந்து பல்வேறு முக்கிய அதிகாரிகளுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. கமிஷன் முகவர்கள் மூலம் விசா பெற்று பாகிஸ்தனுக்கு பல்வேறு முறை பயணம் மேற்கொண்டுள்ளார் இவர்.
இந்தியா திரும்பிய பிறகு ஜோதி மல்ஹோத்ரா வாட்ஸ்அப், டெலிகிராம் மற்றும் ஸ்னாப்சாட் மூலம் பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்திருக்கிறார். அவர்களுடைய பெயர்களை தனது செல்பேனில் வேறு பெயர்களில் சேமித்தும் வைத்துள்ளார்.அதேபோல், கடந்த ஆண்டு இவர் காஷ்மீரில் உள்ள தால் ஏரியில் படகு சவாரி செய்த வீடியோ, ஸ்ரீநகரிலிருந்து பனிஹால் வரை ரயில் பயணம் செய்யும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோக்களை அவர் எடுத்ததன் பின்னணியிலும் பாகிஸ்தான் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதனிடையே தான் கடந்த மே 13 ஆம் தேதி டேனிஷ் என்ற எஹ்சான் இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் டேனிஷை பலமுறை ஜோதி மல்ஹோத்ரா சந்தித்து பேசியது தெரியவந்தது. பாகிஸ்தானுக்கு உளவு பார்க்க அவர் பணம் பெற்றதும் விசாரணையின் மூலம் தெரியவர அதிரடியாக கைது செய்யப்பட்டார் ஜோதி மல்ஹோத்ரா. இவருடன் சேர்த்து ஹாரியானவைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ள ஜோதி மல்ஹோத்ராவை ஐந்து நாட்கள் காவல் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தற்போது ஜோதி மல்ஹோத்ராவிடம் விசாரணையை தீவிரபடுத்தியுள்ளனர் காவல்துறையினர்.




















