Supreme Court: இந்தியா தர்ம சத்திரமில்ல; 140 கோடி பேரால திணர்றோம் - ஈழத் தமிழர் வழக்கு, உச்சநீதிமன்றம் காட்டம்
இலங்கை தமிழர் ஒருவரின் மனு மீது தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், இந்தியா தர்ம சத்திரம் அல்ல என்றும், ஏற்கனவே 140 கோடி ஜனத்தொகையால் திணறிக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. அது என்ன வழக்கு தெரியுமா.?

இலங்கை தமிழர் ஒருவர், இந்தியாவில் குடியேறுவதற்கு அனுமதி கேட்டு தாக்கல் செய்த மனு மீது தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், இந்தியா ஒரு தர்ம சத்திரம் அல்ல என்று கடிந்துகொண்டுள்ளது. இந்த வழக்கு குறித்து விரிவாக பார்க்கலாம்.
2015-ல் கைது செய்யப்பட்டு, சிறை தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை தமிழர்
விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகக் கூறி, கடந்த 2015-ம் ஆண்டு இலங்கைத் தமிழரான சுபாஷ்கரன் என்பவரை கைது செய்யப்பட்டார். பின்பு விசாரணை நடைபெற்று, 2018-ம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது.
இதைத்தொடர்ந்து, தனது தண்டனையை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார் சுபாஷ்கரன். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கடந்த 2022-ம் ஆண்டு அவரது தண்டனைக் காலத்தை 7 ஆண்டகளாக குறைத்தது. அதோடு, தண்டனைக் காலம் முடிவடைந்த உடன், அவர் இலங்கைத் தமிழர் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டு, எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவாக இந்தியாவை விட்டு வெளியேற்றப்பட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவிற்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் சுபாஷ்கரன். அந்த மேல்முறையீட்டு மனு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் திபாங்கர் தத்தா, வினோத் சந்திரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது வாதாடிய மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், சுபாஷ்கரன் ஒரு இலங்கைத் தமிழர், அகதியாக இங்கு வந்தவர், அவர் அவரது நாட்டிற்கு திரும்பிச் சென்றால், அவரது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என்று கூறினார். மேலும், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் இந்தியாவில் குடியேறிவிட்டதாகவும், அதனால், அவரையும் இந்தியாவில் குடியேற அனுமதிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து, உலகெங்கிலும் இருந்து அகதிகள் வந்து குடியேற இந்தியா தர்ம சத்திரம் கிடையாது, ஏற்கனவே 140 கோடி மக்கள் தொகையால் நாம் திணறிக் கொடிருக்கிறோம் என்று நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர்.
மேலும், இங்கு குடியேற உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சட்டப்பிரிவு 19-ன் படி, இந்தியாவின் அடிப்படை உரிமை, குடிமக்களுக்கு மட்டும்தான் உள்ளது என தெரிவித்தனர். இந்த விவகாரத்தில், உயர்நிதிமன்றம் முன்னதாக பிறப்பித்த உத்தரவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என தெரிவித்தனர்.
அதற்கு, இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டால், சுபாஷ்கரனின் உயிருக்கு ஆபத்து உள்ளது என்றும், இலங்கைக்கு சென்றால், விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்ததால் அவர் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்படுவார் எனவும் தெரிவித்தனர். அதனால், அவர் இந்தியாவில் குடியேற அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு பதிலளித்த நீதிபதிகள், இலங்கையில் அச்சுறுத்தல் இருந்தால், அவர் வேறு நாடுகளை அணுகலாம் என்று கூறி, மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.





















