IPL LSG Vs SRH: லக்னோவின் ப்ளே ஆஃப் கனவிற்கு ஆப்பு வைத்த ஹைதராபாத் - 206-ஐ சேஸ் செய்து அசத்தல்
IPL 2025 LSG Vs SRH: ஐபிஎல் லீக் போட்டியில், இன்று 206 ரன்கள் இலக்கை எளிதாக சேஸ் செய்து, லக்னோவின் ப்ளே ஆஃப் கனவை தகர்த்தது ஹைதராபாத் அணி. போட்டியின் முழு விவரம் இதோ...

லக்னோவில் இன்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில், 206 ரன்கள் இலக்கை எளிதாக எட்டிய ஹைதராபாத் அணி, லக்னோ அணியின் ப்ளே ஆஃப் கனவை தகர்த்துள்ளது. போட்டி குறித்த முழு விவரங்களை காணலாம்.
205 ரன்கள் குவித்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
லக்னோவில் இன்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான மிட்செல் மார்ஷூம், எய்டன் மார்க்ரமும், ஹைதராபாத்தின் பந்துவீச்சை நாலா பக்கமும் சிதறவிட்டனர்.
இந்த இணை தொடக்க விக்கெட்டிற்கு 115 ரன்களை சேர்த்தது. இந்நிலையில், 39 பந்துகளில் 4 சிக்சர்கள் 6 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் குவித்த மார்ஷ் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் ரிஷப் பண்ட் 6 பந்துகளில் 7 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
மறுமுனையில் மார்க்ரம் தொடர்ந்து அதிரடியாக ஆடிவந்த நிலையில், 38 பந்துகளில் 4 சிக்சர்கள் 4 பவுண்டரிகளுடன் 61 ரன்களை எடுத்திருந்த நிலையில், ஹர்ஷல் படேலின் பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். இதன் மூலம், ஹர்ஷல் படேல் தனது 150-வது விக்கெட்டை கைப்பற்றினார்.
மார்க்ரமை தொடர்ந்து களமிறங்கிய ஆயுஷ் பதோனி 3 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து அப்துல் சமத் களமிறங்கினார். மறுமுனையில் சிறப்பாக ஆடிவந்த பூரன், கடைசி ஓவரில் ரன் அவுட் ஆனார். அவர் 26 பந்துகளில் 1 சிக்சர் 6 பவுண்டரிகளுடன் 45 ரன்களை எடுத்தார்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஷர்துல் தாக்கூரும் 4 ரன்கள் எடுத்து ரன் அவுட்டாகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து சமதும் போல்டாகி வெளியேறினார். ஆட்டத்தின் கடைசி பந்திற்கு களமிறங்கிய ஆகாஷ் தீப், சிக்சரை பறக்க விட்டார். இதன் மூலம், 20 ஓவர்கள் முடிவில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 205 ரன்களை குவித்தது.
அதிரடியாக சேஸ் செய்து வென்ற ஹைதராபாத்
இதைத் தொடர்ந்து, 206 ரன்கள் வெற்றி இலக்குடன் பேட்டிங்கை தொடங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அதர்வா டெய்ட், 9 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் அபிஷேக் ஷர்மா லக்னோவின் பந்துவீச்சை வெளுத்துக் கொண்டிருந்தார். அவருடன் ஜோடி சேர்ந்த இஷான் கிஷன் நிதானமாக ஆடினார். இந்நிலையில், 20 பந்துகளில் 6 சிக்சர்கள் 4 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் எடுத்த நிலையில் அபிஷேக் ஷர்மா ஆட்டமிழந்தார்.
இதைத் தொடர்ந்து கிளாசன் களமிறங்கி அதிரடி காட்டிய நிலையில், 28 பந்துகளில் 2 சிக்சர்கள் 3 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்திருந்த இஷான் கிஷன் ஆட்டமிழந்தார். எனினும், கிளாசன் சிறப்பாக ஆடிவந்தார். அவருடன் கமின்டு மென்டிஸ் ஜோடி சேர்ந்த நிலையில், 28 பந்துகளில் 1 சிக்சர் 4 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கிளாசன் அவுட் ஆகி வெளியேறினார்.
இந்நிலையில், 21 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்திருந்த மென்டிஸ் ரிடையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். இதைத் தொடர்ந்து, களத்தில் இருந்த அனிகெட் வெர்மா மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி தலா 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்த நிலையில், 18.2 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்து, ஹைதராபாத் அணி வெற்றி வாகை சூடியது.
இந்த போட்டியின் ஆட்ட நாயகன் விருதை, 20 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு வழிவகுத்த அபிஷேக் ஷர்மா தட்டிச் சென்றார்.
இந்த வெற்றி ஹைதராபாத்திற்கு அவ்வளவு முக்கியம் இல்லையென்றாலும், லக்னோ அணியின் ப்ளே ஆஃப் கனவை பறித்துள்ளது. இதனால், லக்னோ அணி ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.




















