ரியல் எஸ்டேட் உரிமையாளரை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
புதுச்சேரியை சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளரை ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்த வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி. நீதிமன்றத்தில் பரபரப்பு தீர்ப்பு
விழுப்புரம் : புதுச்சேரியை சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளரை ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்த வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி. கோர்ட்டில் பரபரப்பு தீர்ப்பு கூறப்பட்டது.
ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட ரியல் எஸ்டேட் உரிமையாளர்
புதுச்சேரி மாநிலம் பூமியான்பேட்டை ஜான்சி நகர் முதல் தெருவில் வசித்து வந்தவர் ரமேஷ் என்கிற கொட்டா ரமேஷ் (வயது 50). இவர் ரியல் எஸ்டேட் மற்றும் வட்டிக்கு பணம் கொடுத்தல் தொழில் செய்து வந்தார். இவருடன் புதுச்சேரி வாணரப்பேட்டையை சேர்ந்த மணிகண்டன் என்கிற மர்டர் மணிகண்டன், புதுச்சேரி மவுடுபேட் சேத்திலால் நகரை சேர்ந்த சுந்தர் என்கிற சக்திவேல் ஆகியோர் தொழில்முறை கூட்டாளிகளாக இருந்தனர். பின்னர் அவர்கள் இருவரும் பிரிந்து வேறொருவருடன் சேர்ந்து தொழில் செய்து வந்தனர்.
இதன் காரணமாக ரமேசுக்கும், மர்டர் மணிகண்டன், சுந்தர் ஆகியோருக்கும் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் இருவரும் ரமேசை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினர். மர்டர் மணிகண்டன், சுந்தர் ஆகிய இருவரும் காலாப்பட்டு சிறையில் இருந்தனர்.
இந்நிலையில் கடந்த 7.6.2020 அன்று காலை 5.30 மணியளவில் ரமேஷ், தனது மனைவி ரத்னாவுடன் இருசக்கர வாகனத்தில் விழுப்புரம் மாவட்டம் சின்னகோட்டக்குப்பத்தில் உள்ள பைரவர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டுவிட்டு மீண்டும் அங்கிருந்து காலை 6 மணியளவில் வீட்டுக்கு புறப்பட்டனர்.
ரமேசை துரத்திச் சென்று கத்தியால் சரமாரியாக வெட்டிக் கொலை
சின்னகோட்டக்குப்பம் வண்ணாரத்தெரு வழியாக சென்றபோது புதுச்சேரி முருங்கம்பாக்கத்தை சேர்ந்த முகிலன் (26), மணவெளி மூகாம்பிகை நகரை சேர்ந்த மதன் (22), புதுச்சேரி ராஜா நகரை சேர்ந்த பத்மநாபன் (24), புதுச்சேரி சாரம் சக்தி நகரை சேர்ந்த மணிண்டன் என்கிற கராத்தே மணி (24), கவுண்டன்பாளையம் கார்த்திக் என்கிற ஹரிகரன் (24), அரியாங்குப்பம் மணிகண்டன் என்கிற மாம்பல சதீஷ் (26)ஆகிய 6 பேரும் 3 இருசக்கர வாகனத்தில் வந்து ரமேசை வழிமறித்து நாட்டு வெடிகுண்டை வெடிக்கச் செய்தனர். உடனே ரமேஷ், தனது மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டுவிட்டு தலைதெறிக்க ஓட்டம் பிடித்தார். ஆனால் அவர்கள் 6 பேரும் ரமேசை துரத்திச் சென்று கத்தியால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.
இதுகுறித்து ரமேஷின் மனைவி ரத்னா, கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கடந்த 2.1.2020 அன்று பரோலில் வந்த மர்டர் மணிகண்டன், முகிலன் உள்ளிட்ட 6 பேருடன் சேர்ந்து ரமேசை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதும், இதற்கு சுந்தர், செலவுக்கு பணம் தருவதாகவும் கூறியுள்ளது தெரியவந்தது. இதன் அடிப்படையில் முகிலன், மதன், பத்மநாபன், கராத்தே மணி, ஹரிகரன், மாம்பல சதீஷ், மர்டர் மணிகண்டன், சுந்தர் ஆகிய 8 பேர் மீது போலீசார், கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை, விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணையின்போதே, இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் மதன், முகிலன் ஆகிய இருவரும் இறந்து விட்டனர்.
4 பேருக்கு ஆயுள் தண்டனை
இந்நிலையில் இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி பாக்கியஜோதி, குற்றம் சாட்டப்பட்ட பத்மநாபன், மணிகண்டன் என்கிற கராத்தே மணி, கார்த்திக் என்கிற ஹரிகரன், மணிகண்டன் என்கிற மாம்பல சதீஷ் ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும், மர்டர் மணிகண்டன், சுந்தர் ஆகிய இருவரையும் இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்தும் தீர்ப்பு கூறினார்.
இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட பத்மநாபன், மணிகண்டன் என்கிற கராத்தே மணி, கார்த்திக் என்கிற ஹரிகரன், மணிகண்டன் என்கிற மாம்பல சதீஷ் ஆகிய 4 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் போலீஸ் வேனில் ஏற்றி அழைத்துச் செல்லப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கோதண்டபாணி ஆஜரானார்.