Ruthuraj on CSK Defeat: நாங்க தோத்ததுக்கு இதுதாங்க காரணம்.. CSK கேப்டன் ருதுராஜ் என்ன சொன்னார்னு பாருங்க...
ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டத்தில், நேற்று ராஜஸ்தான் அணியிடம் தோல்வியடைந்ததற்கு காரணம் இதுதான் என சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஒரு விளக்கத்தை அளித்துள்ளார்.

விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டம் ஒன்றில், நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதியது. இதில், 6 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வியை தழுவியது. இந்த தோல்விக்கு சென்னை கேப்டன் ருதுராஸ் கெய்க்வாட் சொன்ன காரணம் என்னவென்று பார்க்கலாம்.
6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ்
அசாம் மாநிலம் கவுஹாத்தியில் நேற்று, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் 11-வது லீக் ஆட்டத்தில், டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அதிரடியாக ஆடியது. தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 4 ரன்களில் ஆட்டமிழந்தாலும், அவரைத் தொடர்ந்து களமிறங்கிய நிதிஷ் ராணா, சிஎஸ்கே-வின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். 36 பந்துகளில், 10 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 81 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ரியான் பராக் 37 ரன்கள் எடுத்தார். இதனால், ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்களை குவித்தது. சிஎஸ்கே தரப்பில், கலீல் அகமது, பதிரனா, நூர் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து, 183 வெற்றி இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே-வின் தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா டக் அவுட் ஆனார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் த்ரிபாதி 23 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் விழ, மறுமுனையில் கேப்டன் ருதுராஜ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எனினும் 63 ரன்கள் எடுத்த நிலையில் அவரும் ஆட்டமிழந்தார். ரவீந்திர ஜடேஜா 32 ரன்கள் எடுத்தார். தோனியும் 16 ரன்களில் வெளியேற, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்த சிஎஸ்கே அணி, 176 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால், 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ராஜஸ்தான் தரப்பில், ஹசரங்கா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தோல்விக்கு சிஎஸ்கே கேப்டன் ருதுராஸ் அளித்த விளக்கம் என்ன.?
முதல் போட்டியில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தொடர்ச்சியாக அடுத்த இரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. இந்நிலையில், ராஜஸ்தான் அணியுடனான நேற்றைய தோல்விக்கு காரணம், பேட்டிங்கில் மோசமான தொடக்கமும், சரியாக ஃபீல்டிங் செய்யாததுமே காரணம் என சென்னை அணித் தலைவர் ருதுராஜ் கெய்க்வாட் விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து பேட்டியளித்த அவர், நாங்கள் சரியான துவக்கங்களை பெறவில்லை, அதை நாங்கள் சரி செய்துவிட்டால், நிலைமை மாறிவிடும் என கூறினார். சரியாக ஃபீல்டிங் செய்யாமல் 8-லிருந்து 10 ரன்கள் வரை அதிகமாக கொடுத்துவிட்டோம் என்று கூறிய அவர், ஃபீல்டங்கை நாங்கள் மெருகேற்ற வேண்டும் என தெரிவித்தார்.
தான் 3-ம் இடத்தில் ஆடுவது திட்டமிட்ட ஒன்றுதான் என தெரிவித்த ருதுராஜ், முன்னர் பல வருடங்களாக 3-ம் இடத்தில் ரஹானே பேட்டிங் செய்துவந்தார், நடுவில் இருக்கும் ஓவர்களை ராயுடு பார்த்துக்கொண்டார் எனவும், அதேபோல், தான் நடுவில் வந்து நின்று ஆட வேண்டும் என்றும், அதனால் தொடக்கத்தில் த்ரிபாதி அதிரடியாக ஆடி முடியும் என்று அணி நினைத்ததாக ருதுராஜ் தெரிவித்தார்.
அது ஏலத்தின்போதே முடிவு செய்யப்பட்ட ஒன்று, அதனால் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை என கூறிய ருதுராஜ், எப்படி இருந்தாலும், ஒவ்வொரு போட்டியிலும் தான் முன்கூட்டியே ஆட வேண்டி வருவதாகவும் குறிப்பிட்டார்.
எப்படியோ, தவறுகளை சரி செய்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிப் பாதையை நோக்கி திரும்ப வேண்டும் என்பதே, சிஎஸ்கே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.




















