2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் வலுவான வெற்றிக் கூட்டணி அமைக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

வேலூரில் உள்ள கோட்டை மைதானத்தில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது, அவர் கூறியதாவது,
அதிமுக யாருடன் கூட்டணி?
அண்ணா திமுக-வைப் பொறுத்தவரைக்கும் தேர்தல் வரும்போது கூட்டணி வைப்போம். கூட்டணி வேறு, கொள்கை வேறு. திமுக அப்படி அல்ல. அதிகாரத்திற்கு வருவதற்கு கொள்கையை விட்டுக்கொடுக்கும் ஒரே கட்சி தி.மு.க. கூட்டணி எதற்காக வைக்கிறோம். ஓட்டுகள் சிதறாமல் இருப்பதற்காக வைக்கிறோம். அப்படி சிதறாமல் ஓட்டுகளை வாங்கிடும்போது வெற்றி கிடைக்கும்.
வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமையும். ஏனென்றால், நிர்வாகிகள், பொதுமக்கள் எங்கே சென்றாலும் எப்படியாவது கூட்டணி அமையுங்கள் என்று கூறுகின்றனர். எதற்காக நாம் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக. உங்களுடைய அனைவரது கோரிக்கையையும் ஏற்று வலிமையான வெற்றிக் கூட்டணி அமையும்.
பச்சோந்தி:
திமுகவிற்கு என்ன கொள்கை இருக்கிறது? 1999ம் ஆண்டு பாஜக-வுடன் கூட்டணி. பாராளுமன்றத்தில் வெற்றி பெற்றார்கள். மத்தியில் ஆட்சி அமைத்தார்கள். மத்தியில் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தார்கள். அப்போது முரசொலி மாறன் நோய்வாய்ப்பட்டு ஓராண்டு சுயநினைவில்லாமல் இருந்தார். அப்போது, இலாகா இல்லாத அமைச்சராக பாஜக அவரை வைத்திருந்தது.
அந்த 5 ஆண்டுகள் முடிந்தது அப்படியே அந்தர் பல்டி. 2004ம் ஆண்டு காங்கிரசுடன் கூட்டணி. கொள்கை கிடையாது, கோட்பாடு கிடையாது. நம்மைப்பற்றி பேசுவதற்கு மு.க.ஸ்டாலினுக்கு அருகதை கிடையாது. சந்தர்ப்பவாத கட்சி தி.மு.க. பச்சோந்தி கூட கொஞ்ச நேரம் கழிச்சுதான் நிறம் மாறும். இன்று அடிக்கடி நிறம் மாறும் கட்சி திமுக.
விட்டுக்கொடுப்பவர்கள் தி.மு.க.
பதவிக்காகவும், அதிகாரத்திற்கும் வருவதற்கு எதை வேண்டுமானாலும் விட்டுக்கொடுப்பார்கள். அப்படி விட்டுக்கொடுத்துதான் 1999ம் ஆண்டு ஒரு கட்சியுடன் மத்தியில் ஆட்சியில் வருவதற்கு கூட்டணி அமைத்தார்கள். 2004ம் ஆண்டு காங்கிரசுடன் கூட்டணி அமைத்த கட்சிதான் தி.மு.க.
இவ்வாறு அவர் பேசினார்.
அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக-வை வீழ்த்த அதிமுக தீவிரமாக பணியாற்றி வருகிறது. அக்கட்சி வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை அதிமுக கூட்டணியில் கொண்டு வர வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
அதேசமயம், பாஜக-வையும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இணைக்க வேண்டும் என்று சிலர் வலியுறுத்தி வருகின்றனர். தேர்தல் நெருங்கும் வேளையில் அதிமுக தலைமையில் எந்தெந்த கட்சிகள் இணையும் என்ற எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டே போகிறது. பா.ஜ.க. மட்டுமின்றி பாமக-வையும் அதிமுக தலைமையிலான கூட்டணியில் கொண்டு வர சில முக்கிய நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தையை பல கட்சிகளும் தொடங்கி விறுவிறுப்பாக நடத்தி வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

