IPL 2025: ”ஓசி டிக்கெட் கேட்குறாங்க, மிரட்டுறாங்க” - SRH அணி புலம்பல், கலாநிதி மாறன் மகள் காவ்யா பாவம்பா?
IPL 2025 SRH: ஐபிஎல் போட்டிகளுக்கு ஐதராபாத் கிரிக்கெட் சம்மேளனம் ஓசி டிக்கெட் கேட்டு மிரட்டுவதாக, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி குற்றம்சாட்டியுள்ளது.

IPL 2025 SRH: லக்னோ போட்டிக்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக ஒரு கேலரியை மைதான நிர்வாகம் பூட்டியதாகவும் ஐதராபாத் அணி வேதனை தெரிவித்துள்ளது.
SRH அணி நிர்வாகம் குற்றச்சாட்டு:
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் மேலாளர் ஸ்ரீநாத் டிபி, ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் ( HCA ) பொருளாளர் சி.ஜே. ஸ்ரீனிவாஸிற்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், ”மாநில ஐதராபாத் கிரிக்கெட் அசோசியேஷன் குறிப்பாக அதன் தலைவர் ஜெகன் மோகன் ராவ் அர்ஷினபள்ளி, இலவச ஐபிஎல் டிக்கெட்டுகளுக்காக "மிரட்டுவது, வற்புறுத்துவது மற்றும் அச்சுறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், “இந்தப் பிரச்னை தீர்க்கப்படாவிட்டால், ஐதராபாத்தில் இருந்து தங்கள் சொந்த மைதானத்தை (Home Ground) மாற்றுமாறு பிசிசிஐயிடம் கோரிக்கை விடுப்போம் என்று ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தை SRH அணி நிர்வாகம் பிசிசிஐ-யிடம் கொண்டு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
50 டிக்கெட்டுகள் போதாதா?
மேலும், "பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வரும் 3,900 இலவச டிக்கெட்டுகளில் (complimentary tickets) ஒரு பகுதியாக, F12A பெட்டியில் 50 இலவச டிக்கெட்டுகள் HCA-க்கு ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த 12 ஆண்டுகளாக HCA உடன் அணி நிர்வாகம் நல்ல பணி உறவைக் கொண்டிருந்தது. ஆனால் இலவச டிக்கெட்டுகள் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் அது கசப்பாக மாறியுள்ளது” என்றும் குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது. ஜெகன் மோகன் ராவ் கடந்த அக்டோபர் 2023 இல் தான் HCA-வின் தலைவராக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
”ஐதராபாத்தே வேண்டாம்”
தொடர்ந்து, "HCA -வின், குறிப்பாக தற்போதைய எச்.சி.ஏ தலைவரின் தொழில்முறையற்ற அச்சுறுத்தல்கள் மற்றும் செயல்கள் அனைத்தும், சன்ரைசர்ஸ் அணி உங்கள் மைதானத்தில் விளையாடுவதை நீங்கள் விரும்பவில்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன. அப்படியானால், தயவுசெய்து எழுத்துப்பூர்வமாக எனக்குத் தெரியப்படுத்துங்கள். அதன் மூலம் நாங்கள் வேறு இடத்திற்கு மாற விரும்புகிறோம் என்பதை பிசிசிஐ, தெலுங்கானா அரசு மற்றும் எங்கள் உயர் நிர்வாகத்திடம் தெரிவிக்க முடியும். நாங்கள் வேறு இடத்திற்குச் செல்வோம்” என ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
பாக்ஸை பூட்டி மிரட்டல்:
மேலும், ”லக்னோவிற்கு எதிரான எங்களின் போட்டியின் போது HCA அதிகாரிகள் F3 (கார்ப்பரேட் பெட்டி) பெட்டியைப் பூட்டினீர்கள். உங்களுக்கு 20 கூடுதல் இலவச டிக்கெட்டுகள் வழங்கப்படாததால் அதைத் திறக்க மறுத்துவிட்டீர்கள். மோதல் அதிகரிப்பதைத் தடுக்க எங்கள் தரப்பில் இருந்து கிரண் உங்களுடன் நேரடியாக இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முயன்றார். ஆனால் ஆட்டம் தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு வரை பெட்டியைத் திறக்க நீங்கள் மறுத்துவிட்டீர்கள். எங்கள் ஆட்டம் தொடங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, இலவச டிக்கெட்டுகளுக்காக மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல் விடுத்த இந்தச் செயல் சட்டவிரோதமானது மட்டுமல்ல, ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று SRH அணி மேலாளர் ஸ்ரீநாத் தனது மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெகன்மோகன் ராவ் மறுப்பு
ஐதராபாத் அணியின் குற்றச்சாட்டுகளை ஜெகன் மோகன் ராவ் மறுத்துள்ளார். அதன்படி, "HCA க்கு SRH நிர்வாகத்திடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ மின்னஞ்சல்களும் வரவில்லை. சமூக ஊடகங்கள் மற்றும் சில வலைத்தளங்களில் பரப்பப்படும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை”என்று அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி:
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கடந்த 2013ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமானது. தொடர்ந்து 2016ம் ஆண்டு சாம்பியன் பட்டமும் வென்று அசத்தியது. 5 முறை பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ள அந்த அணி, மொத்தமாக மூன்று முறை இறுதிப்போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் பிரபலமான அணிகளில் ஒன்றான, சன்ரைசர்ஸ் அணிக்கு இப்படி ஒரு அழுத்தம் எழுந்து இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அணியின் உரிமையாளர்களில், சன் குழுமத்தின் உரிமையாளரான கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் மிகவும் முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐதராபாத் அணியின் அனைத்து போட்டிகளின் போதும் அவரை மைதானதிதில் பார்க்க முடியும்.

